தமிழ்த் தாய் வாழ்த்து பாடியது தாயுமானவரா? விஜய் டி வி ஆரம்பிச்ச விவகாரம்!!

Written By:
Subscribe to Boldsky

நேற்று விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற எல்லாரும் தமிழ்த் தாய் வாழ்த்து பாட வேண்டும் என கட்டளையிடப்பட்டது. எல்லாரும் தப்பு தப்பாக அரைகுறையாக சொன்னார்கள். பங்கேற்றவர்களில் தமிழ் தெரியாதவர்களை நாம் குற்றம் சொல்ல முடியாது.

ஆனால் தமிழை தாய்மொழியாக கொண்டவர்களே திணறும்போதுதான், தமிழ் திண்டாடுகிறது. தமிழை ஆபத்தில் தள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறோம் என புரிய வருகிறது. அதிலும் தமிழ்த் தாய் வாழ்த்து தாயுமானவர் இயற்றியது என்று ஜல்லிக்கட்டு போரட்டத்தில் புகழ்பெற்ற ஜூலி சொன்னதுதான் வேதனையின் உச்சம்.

Meaning and Author for Tami Thai vazhthu - Invocation for Tamil Goddess

ஆனால் சொல்லுங்கள் உண்மையில் உங்களில் எத்தனைப் பேருக்கு தமிழ்த்தாய் வாழ்த்து முழுதாக தெரியும்? குறைந்த பட்சம் அதன் அர்த்தமாவது தெரியுமா? இல்லையென்றால் முதல் வேலையாக அதனைப் பற்றி தெரிந்து கொள்ள முயலுங்கள். ஃபேஸ்புக் பக்கத்தில் கவிஞர் மகுடேஸ்வரன் தமிழ்த்தாய் வாழ்த்தையும், அதன் அர்த்தத்தையும் கூறியுள்ளார். 

இயற்றியவர் :

"நீராரும் கடலுடுத்த..." என்று தொடங்கும் நம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் பெ. சுந்தரம் பிள்ளை ஆவார். "மனோன்மணீயம்" என்னும் புகழ்பெற்ற நாடகக் காப்பியத்தை எழுதியமையால் "மனோன்மணீயம்" பெ. சுந்தரம் பிள்ளை என்றே அழைக்கப்பட்டார் அவர். (பலர் மனோன்மணியம் என்று எழுதுகிறார்கள். மனோன்மணீயம் என்று நெடில் ணீ பயன்படுத்த வேண்டும்).

அந்நூலில் இடம்பெற்ற பாடல்தான் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக, 1970ஆம் ஆண்டு சூன் மாதத்தில் தமிழ்நாட்டு அரசால் அறிவிக்கப்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்து :

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநுறுந் திலகமுமே

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே

தமிழணங்கே - உன்

சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து

வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !

தமிழ்த்தாய் வாழ்த்தின் பொருள் :

நீராரும் = நீர் ஆரும் - நீர் அலைகளாய் எழுந்து ஆர்ப்பரிக்கின்ற

கடலுடுத்த = கடல் உடுத்த - கடல் தனக்கு ஆடையாக உடுத்திக்கொண்டுள்ள

நிலமடந்தைக்கு = நிலம் என்னும் பெண்ணுக்கு

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக்கு = நீரலைகள் ஆர்ப்பரிக்கின்ற கடலை ஆடையாக உடுத்திக்கொண்டுள்ள நிலம் என்னும் பெண்ணுக்கு.

உலகில் உள்ள நிலப்பரப்புகள் யாவும் நீர்சூழ்ந்தவை. கடல்சூழ்ந்தவை. நிலமென்னும் மடந்தை நீரலைகள் ஆர்ப்பரிக்கின்ற கடலை ஆடையாகத் தன்னைச் சுற்றி உடுத்திக்கொண்டவள்.

எழிலொழுகும் = எழில் ஒழுகும் - அழகு கொஞ்சுகின்ற, அழகு வழிகின்ற

சீராரும் வதனம் என = சீர் ஆரும் வதனம் என - சிறப்புகள் ஆர்த்து ஆடுகின்ற முகம் என

திகழ்பரதக் கண்டமிதில் = திகழ் பரதக்கண்டம் இதில் - அவ்வாறெல்லாம் திகழ்கின்ற பாரதத் துணைக்கண்டமாகிய இதில்.

இப்போது இரண்டு வரிகளையும் சேர்த்துப் பொருள்கூட்டுவோம் !

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்

நீர் அலைகள் ஆர்த்தெழுகின்ற கடலை ஆடையாக உடுத்திக்கொண்டவளான நிலமென்னும் பெண்ணுக்கு அழகு கொஞ்சுவதாகவும் சிறப்புகள் நடமாடுகின்றதாகவும் திகழ்கின்ற பாரதத் துணைக் கண்டமாகிய இதில்.

உலகில் உள்ள நிலமெல்லாம் கடலை ஆடையாக உடுத்திக்கொண்ட பெண்ணாக உருவகித்துக்கொள்ளுங்கள். அந்தப் பெண்ணின் அழகிய முகமாக பாரதக் கண்டம் திகழ்கின்றது. உலகத்திற்கு முகமாவது பாரதத் துணைக்கண்டம் !

இதுதான் முதலிரண்டு வரிகளின் பொருள்.

தெக்கணமும் = பாரதத்தின் தென்பகுதியில்

அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும் = அங்குச் சிறந்து விளங்குகின்ற திராவிடம் என்னும் செல்வச் செழிப்பான நாடும்

தக்க சிறுபிறை நுதலும் = நுதல் என்றால் நெற்றி. தகுந்த வடிவில் சின்னஞ்சிறு பிறைபோல் அமைந்த நெற்றியும்

தரிந்த நறுந்திலகமுமே = அந்நெற்றியில் இட்டுக்கொண்ட தோற்றத்திற் சிறந்த பொட்டு போன்றதே.

மூன்றாம் நான்காம் வரிகளைச் சேர்த்துப் பொருள் காண்போம் !

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநுறுந்திலகமுமே

உலகத்து நிலங்கள் யாவும் கடலையுடுத்திய பெண்ணாள். அப்பெண்ணின் முகம்போன்றது பாரதக் கண்டம். அந்த முகத்தின் அழகிய நெற்றியைப் போன்றது தென்னிந்தியா. அந்தத் தென்னிலம் என்னும் பிறை நிலவு போன்ற நெற்றியில் இட்டுக்கொண்ட பேரழகு கொஞ்சும் குங்குமப் பொட்டுபோல் திகழ்வது திராவிட நாடு.

அத்திலக வாசனைபோல் = அந்த மங்களத் திலகத்திற்கு எத்துணை நற்புகழ், நல்லியற்கை உண்டோ அதுபோல்.

அனைத்துலகும் இன்பமுற = எல்லா உலகங்களும் இன்பத்தில் திளைக்கும்படி

எத்திசையும் புகழ்மணக்க = எட்டுத் திக்குகள் மட்டுமல்ல, எல்லாத் திக்குகளிலும் புகழ் என்னும் இன்ப வாசனை மணமணக்கப் பரவும்படி

இருந்த பெரும் தமிழணங்கே = வாழ்ந்த பேராற்றல் வாய்ந்த தமிழ் என்னும் தெய்வமே !

உன் சீரிளமைத் திறம்வியந்து = தொன்றுதொட்டு வாழ்ந்தவள் என்றாலும் குன்றாத இளமையுடையவளாய்த் திகழும் உன் ஆற்றலை வியந்து

செயல்மறந்து = செய்வதறியாது மெச்சியவராய் எங்கள் மெய்மறந்து

வாழ்த்துதுமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே = வாழ்த்துகின்றோமே வாழ்த்துகின்றோமே வாழ்த்துகின்றோமே !

ஒட்டுமொத்தப் பாட்டுக்கும் பொருள் சொல்கிறேன்,

இதன்பின் பாடல் தெற்றென விளங்கும்.

நீரலைகள் எழுந்தாடுகின்ற

கடலை ஆடையாக

உடுத்திக்கொண்டவள்

நிலம் என்னும் அழகிய பெண்ணாள்.

நிலமாகிய அப்பெண்ணுக்கு,

அழகு கொஞ்சுகின்ற

சிறப்புகள் சூழ்ந்தாடுகின்ற

முகம்போன்று திகழ்வது பாரதக் கண்டம்.

அம்முகத்திற்கு

அழகிய பிறைபோன்று

அமைந்த நெற்றிதான்

தெற்குப் பகுதி.

அந்த நெற்றியில்

சூடிக்கொண்ட அழகிய திலகம் போன்று

புகழொளி வீசுகின்ற திருநாடுதான்

திராவிட நாடு.

அந்தத் திலகத்தின் புகழும் அழகும்போல,

அனைத்து உலகத்தவர்களும்

இன்பத்தால் திளைக்கும்படி,

எல்லாத் திக்குகளுக்கும்

பரவி வாழ்ந்து வருகின்ற

தமிழ் என்னும் தெய்வமே !

தொன்று தோன்றியவளாய்,

பெருவாழ்வு வாழ்ந்தவளாய் இருந்தும்

இன்றும் புதுமைக்குப் புதுமையாய்

என்றும் இளைமையாய்த் திகழ்கின்ற

உன் பேராற்றலை வியந்து,

ஊன் உடல் மனம்

அனைத்தும் செயலற்றவர்களாய்

மெய்ம்மறந்து

வாழ்த்துகின்றோம் வாழ்த்துகின்றோம் வாழ்த்துகின்றோம் !

- கவிஞர் மகுடேசுவரன்.

English summary

Meaning and Author for Tami Thai vazhthu - Invocation for Tamil Goddess

Meaning and Author for Tami Thai vazhthu - Invocation for Tamil Goddess