Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க..

Mahalaya Amavasya 2026: நமக்கு முன் வாழ்ந்து மறைந்த நமது முன்னோர்களை வழிபட உகந்த காலம் தான் மகாளய பட்சம். கடவுள் வழிபாடு எப்படி அவசியமோ, அதேப் போல் முன்னோர்களின் வழிபாடும் மிகவும் அவசியம். இந்த உலகிற்கு நாம் வர காரணமாக இருந்த முன்னோர்களுக்குரிய வழிபாடுகளை சரியாக மேற்கொண்டால் தான், நம்முடைய குடும்பம் வளமாகவும், சந்தோஷமாகவும் இருப்பதோடு, முன்னோர்களின் ஆன்மாவும் சாந்தியடைந்து, அவர்களின் ஆசியும் கிடைக்கும்.

Mahalaya Amavasya 2026 Do These 5 Donations To Get Rid Of Pitru Dosha

இந்த ஆண்டின் மகாளய பட்சம் செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி, மகாளய அமாவாசை நாளான அக்டோபர் 10 ஆம் தேதி முடிவடைகிறது. இக்காலகட்டத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம், திவசம், படையல், தீபம் ஏற்றுவது மற்றும் தான தர்மங்களை செய்வது போன்ற விஷயங்களை மேற்கொள்வது வழக்கம். பொதுவாக முன்னோர்களின் இறந்த தேதி அல்லது திதி தெரியாதவர்கள் அவர்களுக்கு இந்த மகாளய பட்சத்தின் 15 நாட்களும் தர்ப்பணம் செய்து வழிபாடு செய்வார்கள். ஒருவேளை இந்த 15 நாட்களும் செய்ய முடியாதவர்கள் மகாளய அமாவாசை நாளில் இறந்து போன முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைய சிரார்த்தம் செய்யலாம்.

அதுவும் மகாளய அமாவாசை நாளில் தானங்கள் செய்தால், அது முன்னோர்களை நேரடியாக சென்றடையும் என்று கூறுவார்கள். அதுவும் இந்த தானங்களானது அவர்களின் ஆன்மாவை திருப்திப்படுத்தி, குடும்பத்தில் உள்ள பித்ரு தோஷத்தை போக்கும். இப்போது மகாளய அமாவாசை நாளில் எந்தெந்த பொருட்களை தானம் செய்யலாம் என்பது குறித்து காண்போம்.

1. உணவு தானியங்கள் மற்றும் கருப்பு எள்ளு

சாஸ்திரங்களின் படி, மகாளய அமாவாசை நாளன்று ஏழை எளியோருக்கோ அல்லது பிராமணருக்கோ பருப்பு, அரிசி போன்ற உணவு தானியங்களை வழங்குவது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. அதோடு முன்னோர்களின் சடங்குகளில் கருப்பு எள்ளு மிகவும் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே இந்த கருப்பு எள்ளு விதைகளையும் தானம் செய்வது நல்லது.

2. ஆடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள்

மகாளய அமாவாசை நாளில் உங்கள் வசதிக்கு ஏற்ப ஏழை எளியோருக்கு அல்லது தேவைப்படுபவர்களுக்கு ஆடைகளை தானமாக வழங்கலாம். இல்லாவிட்டால் தேவைப்படுபவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களான பாத்திரங்கள், உப்பு, எண்ணெய் போன்றவற்றையும் தானமாக வழங்கலாம்.

3. பசு மற்றும் விலங்குகளுக்கு உணவளிப்பது

மகாளய அமாவாசை நாளில் நம் முன்னோர்கள் விலங்குகளின் வடிவில் வந்து ஆசியை வழங்குவார்கள் என்று கூறப்படுகிறது. எனவே இந்நாளில் உங்கள் வீட்டை தேடி வரும் விலங்குகளான பசு, நாள், காகம் போன்றவற்றிற்கு உணவளிப்பது உங்களின் சிரார்த்தம் முன்னோர்களை அடைந்ததற்கு சமமாகும்.

4. நெய், பழங்கள், வெல்லம்

மகாளய அமாவாசை நாளன்று முன்னோர்களை மகிழ்விக்கவும், அவர்களின் ஆசியைப் பெறவும் சுத்தமான நெய், வெல்லம் மற்றும் ஆப்பிள், வாழைப்பழம், கொய்யா போன்ற பழங்களை தானம் செய்யலாம். இதன் மூலம் பித்ரு தோஷம் நீங்குவதாக கூறப்படுகிறது.

5. வெள்ளி

நம்பிக்கைகளின் படி, முன்னோர்களின் உலோகமாக வெள்ளி கருதப்படுகிறது. எனவே வசதி இருந்தால், ஏதாவது வெள்ளி பொருளையோ, வெள்ளி நாணயத்தையோ தானம் செய்யலாம். இது இன்னும் சிறந்த பலனைத் தருவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தானத்தை உங்களிடம் வசதி இருந்தால் மட்டுமே செய்யுங்கள், கட்டாயம் ஏதும் இல்லை.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Tuesday, October 6, 2026, 19:06 [IST]
Desktop Bottom Promotion