Latest Updates
-
சந்திர-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும்! -
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
நவம்பர் 14, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் -
கேது கடக ராசிக்குள் செல்வதால் 18 மாதங்களுக்கு நரகத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2026 ராகு-கேது பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு எப்படி இருக்கும் தெரியுமா? -
4 முட்டையும், 1 கப் தயிரும் இருந்தா இந்த பஞ்சாபி மசாலாவை செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு பக்காவா இருக்கும் -
தூங்க செல்வதற்கு முன் பாதத்தில் தேங்காய் எண்ணெயை தடவினால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
உங்கள் இரத்தப் பிரிவு உங்கள் குணங்களைப் பற்றி என்ன சொல்கிறது தெரியுமா? -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க செய்த சத்தியத்தை எப்போதும் காப்பாற்ற மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாகர்கோவில் கருப்பட்டி பணியாரம் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க...
வெந்தய நீர், பட்டை நீர், பாகற்காய் ஜூஸ் - இவை உண்மையில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துமா? டாக்டர் பதில் இதோ!
World Diabetes Day 2026: உலகளவில் சர்க்கரை நோயுடன் வாழும் மக்களில் 40%-க்கும் அதிகமானோருக்கு இந்நோய் இருப்பது தெரிவதில்லை மற்றும் சுமார் 252 மில்லியனுக்கும் அதிகமான பெரியவர்கள் தங்களுக்கு டைப்-2 சர்க்கரை நோய் இருப்பதை அறியாமலேயே வாழ்ந்து வருகின்றனர். எனவே சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ஆம் தேதி உலக சர்க்கரை நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த சர்க்கரையை நோயை கட்டுப்படுத்த உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை அனைவரும் அறிவோம். வெந்தயம் ஊற வைத்த தண்ணீர், இலவங்கப்பட்டை கலந்த தண்ணீர், பாகற்காய் சாறு போன்றவற்றை இரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவும் இயற்கை வழிகள் என்று பலர் பரிந்துரைக்கின்றனர்.

குறிப்பாக, சர்க்கரை நோய் உள்ளவர்கள் காலையில் வெறும் வயிற்றில் (சாப்பிடுவதற்கு முன்பு) இவற்றைக் குடித்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் என்று நம்புகின்றனர். ஆனால், உண்மையில் இந்தப் பானங்கள் பலன் தருகின்றனவா? இதற்கு அறிவியல் ஆதாரம் உள்ளதா? இந்தப் பொருட்களில் சில இரத்தச் சர்க்கரையைக் குறைக்க உதவக்கூடிய தன்மைகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், இவற்றில் எதுவுமே மருத்துவர் பரிந்துரைக்கும் சர்க்கரை நோய் மருந்துகளுக்கு மாற்றாக நிரூபிக்கப்படவில்லை.
உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, வெந்தய நீர், பட்டை நீர், பாகற்காய் சாறு போன்றவை உண்மையிலேயே இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துமா என்பது குறித்து சென்னையில் உள்ள கிளெனீகிள்ஸ் மருத்துவமனையின் உள் மருத்துவ ஆலோசகர் மற்றும் நீரிழிவு நோய் நிபுணரானடாக்டர் அனிருத்தா சீனிவாசன் அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.
1. வெந்தயத் தண்ணீர்
"வெந்தயத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து (Soluble fibre) உள்ளது. இது உணவில் உள்ள மாவுச்சத்து (Carbohydrates) உடலில் உறிஞ்சப்படுவதை மெதுவாக்கி, இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவலாம். சில மருத்துவ ஆய்வுகளில், வெந்தயத்தைப் பயன்படுத்தியவர்களுக்கு காலையில் வெறும் வயிற்றில் அளவிடப்படும் இரத்தச் சர்க்கரையும், HbA1c அளவும் (கடந்த 2-3 மாதங்களுக்கான சராசரி இரத்தச் சர்க்கரை அளவு) குறைந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த ஆய்வுகளில் வெந்தயம் வெவ்வேறு முறைகளிலும் அளவுகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீரை மட்டும் குடிப்பதால், வெந்தய விதைகளைச் சாப்பிடுவது அல்லது ஆய்வுகளில் பயன்படுத்தப்பட்ட தயாரிப்புகளை எடுத்துக்கொள்வது போன்ற பலன் கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
அதிகமாக எடுத்துக் கொண்டால் வயிற்று உப்புசம், வாயுத் தொல்லை, வயிற்றுப்போக்கு ஏற்படலாம். சர்க்கரை நோய் மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள் இரத்தச் சர்க்கரை அளவு அளவுக்கு அதிகமாகக் குறையும் அபாயம் (Low blood sugar) இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும்." என்று டாக்டர் கூறினார்.
2. இலவங்கப்பட்டைத் தண்ணீர்
"இலவங்கப்பட்டை உடலில் இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தி (Insulin sensitivity), இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் என்று கூறப்படுகிறது. சில ஆய்வுகளில், இலவங்கப்பட்டை சத்து மாத்திரைகள் அல்லது தயாரிப்புகளை எடுத்துக் கொண்டவர்களுக்கு வெறும் வயிற்றில் உள்ள இரத்தச் சர்க்கரை அளவு குறைந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இருப்பினும், ஆய்வு முடிவுகள் ஒரே மாதிரியாக இல்லை. இதன் பலன்களை உறுதிப்படுத்த இன்னும் தரமான ஆய்வுகள் தேவை.
உணவிலோ தண்ணீரிலோ சிறிதளவு இலவங்கப்பட்டையைச் சுவைக்காகச் சேர்ப்பது வேறு; அதிக செறிவுள்ள மாத்திரைகள் அல்லது பொடிகளை அதிக அளவில் எடுத்துக் கொள்வது வேறு. கடைகளில் பொதுவாகக் கிடைக்கும் காசியா இலவங்கப்பட்டையில் (Cassia cinnamon) கூமரின் (Coumarin) என்ற பொருள் உள்ளது. இதை நீண்ட காலம் அதிக அளவில் எடுத்துக்கொண்டால் கல்லீரலுக்குப் பாதிப்பு ஏற்படலாம். எனவே, குறிப்பாக கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் அதிக அளவில் தொடர்ந்து எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்." என்று டாக்டர் கூறினார்.
3. பாகற்காய் சாறு
"பாகற்காய் நீண்ட காலமாகவே சர்க்கரை நோய்க்கான வீட்டு வைத்தியமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் சரண்டின் (Charantin), பாலிபெப்டைட்-பி (Polypeptide-p) போன்ற சில இயற்கைப் பொருட்கள் உள்ளன. இவை உடலில் இரத்தச் சர்க்கரை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதில் (Glucose metabolism) தாக்கத்தை ஏற்படுத்துமா என்று ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
சில ஆய்வுகள் பாகற்காய் தயாரிப்புகள் இரத்தச் சர்க்கரையைக் குறைக்க உதவலாம் என்று கூறினாலும், இதற்கான அறிவியல் ஆதாரங்கள் இன்னும் குறைவாகவும் உறுதியற்றதாகவும் உள்ளன. பாகற்காய் சாறு குடிப்பதால் சர்க்கரை அளவு நிச்சயமாகக் கட்டுப்படும் என்று சொல்ல முடியாது. இதனால் சிலருக்கு செரிமானப் பிரச்சினைகளும் ஏற்படலாம். இன்சுலின் அல்லது சர்க்கரையைக் குறைக்கும் மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் இதைத் தொடர்ந்து குடிப்பதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் பாகற்காய் தயாரிப்புகளைத் தவிர்க்க வேண்டும்." என்று டாக்டர் கூறினார்.
வெறும் வயிற்றில் குடித்தால் அதிக பலன் கிடைக்குமா?
"காலையில் எழுந்தவுடன் அல்லது வெறும் வயிற்றில் இந்தப் பானங்களைக் குடிப்பதால் இரத்தச் சர்க்கரை அதிகமாகக் குறையும் என்பதற்கு வலுவான மருத்துவ ஆதாரம் இல்லை. இதன் பலன் இருந்தாலும், அது தயாரிக்கும் முறை, எடுத்துக்கொள்ளும் அளவு, உடல்நிலை மற்றும் ஏற்கெனவே எடுத்துக் கொள்ளும் மருந்துகள் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்." என்று டாக்டர் கூறினார்.
இந்தப் பானங்கள் சர்க்கரை நோய் மருந்துகளுக்கு மாற்றாகுமா?
"இல்லை. இந்தப் பானங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள், சீரான உணவு முறை அல்லது வழக்கமான உடற்பயிற்சிக்கு ஒருபோதும் மாற்றாகாது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை நிறுத்துவதோ அல்லது அளவைக் குறைப்பதோ இரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டை இழக்கச் செய்து, கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கச் சத்தான சமச்சீர் உணவு, தினசரி உடற்பயிற்சி, போதுமான தூக்கம், உடல் எடையைக் கட்டுப்படுத்துதல் மற்றும் முறையாக இரத்தச் சர்க்கரை அளவைப் பரிசோதித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்." என்று டாக்டர் கூறினார்." என்று டாக்டர் கூறினார்.
முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியது
"வெந்தயம், இலவங்கப்பட்டை, பாகற்காய் ஆகியவற்றில் சில ஆரோக்கிய நன்மைகள் இருக்கலாம். ஆனால், இவற்றைக் கொண்டு வீட்டிலேயே தயாரிக்கும் காலை நேரப் பானங்கள் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் என்பது இன்னும் உறுதியாக நிரூபிக்கப்படவில்லை. உடல்நிலைக்கு ஏற்றதாக இருந்தால் உணவின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இவற்றை சர்க்கரை நோய்க்கான மருந்தாகவோ உடனடி தீர்வாகவோ கருதக்கூடாது. சரியான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி மற்றும் மருத்துவரின் ஆலோசனையுடன் தொடரும் சிகிச்சையே சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதற்கான அடிப்படை" என்று டாக்டர் கூறினார்.



Click it and Unblock the Notifications



