2026 ராகு-கேது பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

Rahu Ketu Transit 2026: ஜோதிடத்தில் முக்கிய கிரகப் பெயர்ச்சிகளில் ஒன்றாகக் கருதப்படுவது ராகு கேது பெயர்ச்சி. ராகு மற்றும் கேது நிழல் கிரகங்களாக இருந்தாலும், ஒருவருடைய வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள், தொழில் வளர்ச்சி, பொருளாதார நிலை, குடும்ப உறவுகள் மற்றும் மனநிலை போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த ராகு கேது பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுக்கும் வெவ்வேறு விதமான பலன்கள் கிடைக்கலாம்.

Rahu Ketu Transit 2026 Effects On 12 Zodiac Signs - Predictions From Aries To Pisces

சில ராசிகளுக்கு தொழில் மற்றும் உத்தியோகத்தில் முன்னேற்றம் கிடைக்கலாம். சிலருக்கு திருமணத் தடைகள் நீங்கலாம். மற்ற சில ராசிக்காரர்கள் குடும்பம் மற்றும் ஆரோக்கிய விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கலாம். அந்த வகையில் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, 2026 ராகு கேது பெயர்ச்சி நவம்பர் 13 ஆம் தேதி நிகழ்கிறது. இந்தப் பெயர்ச்சியின் போது ராகு மகர ராசிக்கும், கேது கடக ராசிக்கும் செல்வதால் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

1. மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு ராகு பத்தாம் வீட்டிலும், கேது நான்காம் வீட்டிலும் சஞ்சரிக்கிறார். இதனால் தொழில் மற்றும் உத்தியோகத்தில் பல்வேறு முன்னேற்ற வாய்ப்புகள் உருவாகலாம். குறிப்பாக, ஏழரை சனியின் தாக்கத்தையும் எதிர்கொண்டு வரும் மேஷ ராசிக்காரர்கள் பொறுமையுடன் செயல்படுவது அவசியம்.

தொழில் மற்றும் பணியிடத்தில் மற்றவர்கள் கூறும் எதிர்மறையான கருத்துகளைக் கேட்டு பயப்பட வேண்டியதில்லை. புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். இருப்பினும், உங்களால் முடிக்க முடியாத வேலைகளுக்கு அதிகமாக வாக்குறுதிகள் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள் விஷயத்தில் கோபப்படாமல் பொறுமையுடன் நடந்துகொள்வது நல்லது.

குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறுவதற்கும், புதிய வரவுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. உடல்நலத்தில் கவனம் செலுத்துவதுடன், உடற்பயிற்சியையும் வழக்கமாக்கிக் கொள்வது நல்லது. விநாயகர் வழிபாடு மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பானது.

2. ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு பத்தாம் வீட்டிலிருந்த ராகு ஒன்பதாம் வீட்டிற்கும், நான்காம் வீட்டிலிருந்த கேது மூன்றாம் வீட்டிற்கும் பெயர்ச்சி அடைகிறார். இந்த மாற்றத்தால் ஆன்மீகம், பயணம் மற்றும் தெய்வ வழிபாடுகளில் அதிக ஈடுபாடு ஏற்படலாம்.

குறிப்பாக, திருப்பதி திருமலை பெருமாள் வழிபாடு ரிஷப ராசிக்காரர்களுக்கு விசேஷமானதாகக் கூறப்படுகிறது. இதுவரை கோயில்களுக்குச் செல்லாதவர்கள்கூட இந்தக் காலகட்டத்தில் ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்ளலாம். மகான்கள் மற்றும் ஆன்மீகப் பெரியவர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்புகளும் உருவாகலாம்.

அதே சமயம் பெற்றோர் மற்றும் பெரியவர்களின் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எதிர்பாராத வகையில் சிலரால் பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதால், தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மனதிற்கு மகிழ்ச்சி தரும் இடங்களுக்குப் பயணம் செய்வது நிம்மதியை அளிக்கலாம்.

3. மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு ஒன்பதாம் வீட்டிலிருந்த ராகு எட்டாம் வீட்டிற்கும், மூன்றாம் வீட்டிலிருந்த கேது இரண்டாம் வீட்டிற்கும் பெயர்ச்சி அடைகிறார். இந்த அமைப்பு சில எதிர்பாராத மாற்றங்களை ஏற்படுத்தலாம். குறிப்பாக, பேசும் வார்த்தைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டிய காலகட்டமாக இது இருக்கும்.

வேற்றுமொழி பேசும் நபர்கள் மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் ஆதாயம் கிடைக்கலாம். வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உருவாகலாம். திருமணத் தடைகள் நீங்குவதற்கும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

கணவன் அல்லது மனைவிக்கு இருந்துவந்த சில பிரச்சனைகள் படிப்படியாகக் குறையலாம். குடும்பத்தில் சுப செலவுகள் அதிகரிக்கலாம். இருப்பினும், மற்றவர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் பல நன்மைகளைப் பெறலாம்.

4. கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு எட்டாம் வீட்டிலிருந்த ராகு ஏழாம் வீட்டிற்கும், இரண்டாம் வீட்டிலிருந்த கேது முதல் வீட்டிற்கும் பெயர்ச்சி அடைகிறார். இந்த அமைப்பினால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கையில் சில சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கலாம்.

குறிப்பாக, திருமண முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். ஏற்கனவே திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் உடன் பணிபுரிபவர்களிடம் தேவையற்ற நம்பிக்கை வைப்பதைத் தவிர்ப்பது நல்லது.

அதே சமயம், பழைய கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். நீண்ட நாட்களாக மனதை அழுத்திக் கொண்டிருந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கலாம். உடல்நலப் பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெறுவது நல்லது. பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் வழிபாடு கடக ராசிக்காரர்களுக்கு விசேஷமானது.

5. சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு ஏழாம் வீட்டிலிருந்த ராகு ஆறாம் வீட்டிற்கும், முதல் வீட்டிலிருந்த கேது பன்னிரண்டாம் வீட்டிற்கும் பெயர்ச்சி அடைகிறார். இந்தப் பெயர்ச்சியால் எதிரிகளை வெல்லும் வாய்ப்புகள் அதிகரிக்கலாம். தொழில் மற்றும் அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம்.

குறிப்பாக, வெளிநாட்டு வேலை, வெளிநாட்டு வியாபாரம் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்ற வாய்ப்புகள் உருவாகலாம். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் மற்றும் படிப்பு தொடர்பான மாற்றங்கள் ஏற்படலாம்.

இருப்பினும், முதலீடுகளை மேற்கொள்ளும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய தொழில் தொடங்குவதற்கு முன்பு நன்றாகத் திட்டமிடுவது அவசியம். பணியிடத்தில் ஏற்படும் மனவருத்தங்களைப் பொறுமையுடன் கையாள வேண்டும்.

உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். குறிப்பாக, கை, கால் மரத்துப்போதல், இதயப் படபடப்பு மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுக வேண்டும். கோபம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஏதேனும் ஒரு தலத்திற்குச் சென்று சிவபெருமானை வழிபடலாம்.

6. கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு ஆறாம் வீட்டிலிருந்த ராகு ஐந்தாம் வீட்டிற்கும், பன்னிரண்டாம் வீட்டிலிருந்த கேது பதினொன்றாம் வீட்டிற்கும் பெயர்ச்சி அடைகிறார். இந்த அமைப்பு பணவரவு மற்றும் ஆன்மீக ரீதியாகச் சில நல்ல மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

குறிப்பாக, பழைய கடன்களைத் தீர்ப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்தவர்கள் அதிலிருந்து விடுபடலாம். உடல்நலத்தில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கும் சரியான தீர்வுகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

கோயில் திருப்பணிகளில் ஈடுபடுவது மற்றும் விடுபட்ட வழிபாடுகளை நிறைவேற்றுவது போன்ற ஆன்மீகச் செயல்களில் ஆர்வம் அதிகரிக்கலாம். பள்ளிக்கொண்ட பெருமாள் எனப்படும் ஸ்ரீரங்கநாதர் வழிபாடு கன்னி ராசிக்காரர்களுக்கு விசேஷமானது.

குழந்தைகள் விஷயத்தில் தேவையற்ற கவலைகளைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவர்களின் ஆலோசனைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். குடும்பத்தில் மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. ஒவ்வாமை மற்றும் வெளிநாட்டுப் பயணம் தொடர்பான ஆவணங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

7. துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு ஐந்தாம் வீட்டிலிருந்த ராகு நான்காம் வீட்டிற்கும், பதினொன்றாம் வீட்டிலிருந்த கேது பத்தாம் வீட்டிற்கும் பெயர்ச்சி அடைகிறார். இந்தப் பெயர்ச்சி தொழில், குடும்பம் மற்றும் பொருளாதார விஷயங்களில் கலவையான பலன்களை வழங்கலாம்.

தொழில் மற்றும் உத்தியோகத்தில் திடீரென சில குழப்பங்கள் ஏற்படலாம். குறிப்பாக, கூட்டாளிகள் அல்லது உடன் பணிபுரிபவர்கள் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கலாம். எனவே, தொழில் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும் போது நிதானமாகச் செயல்படுவது நல்லது.

அதே சமயம், பணவரவு அதிகரிப்பதற்கும் சமூகத்தில் நல்ல பெயர் கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன. திருமணத் தடைகள் நீங்கலாம். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிப்பதுடன், குழந்தைகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கலாம்.

தாய் வழி, தந்தை வழி மற்றும் இரத்த உறவுகளிடம் நல்ல புரிதலுடன் நடந்துகொள்வது அவசியம். மகான்கள் மற்றும் நரசிம்மர், சக்கரத்தாழ்வார் போன்ற தெய்வங்களை வழிபடுவது சிறப்பானது.

8. விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு நான்காம் வீட்டிலிருந்த ராகு மூன்றாம் வீட்டிற்கும், பத்தாம் வீட்டிலிருந்த கேது ஒன்பதாம் வீட்டிற்கும் பெயர்ச்சி அடைகிறார். இதனால் தனிப்பட்ட தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கலாம்.

நீண்ட நாட்களாக எதிர்கொண்டு வந்த எதிர்ப்புகள் குறையலாம். உங்களுடைய முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கலாம். குறிப்பாக, தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் தைரியமாக முடிவுகளை எடுப்பதற்கான சூழல் உருவாகலாம்.

இருப்பினும், குழந்தைகள் விஷயத்தில் கோபப்படுவதைத் தவிர்க்க வேண்டும். வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாமல் உணவு முறையில் கவனம் செலுத்துவது நல்லது. பெற்றோர் மற்றும் பெரியவர்களின் உடல்நலத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரால் சில தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். பூர்வீகச் சொத்து தொடர்பான விஷயங்களிலும் நிதானமாகச் செயல்படுவது நல்லது. அபிராமி அந்தாதியில் உள்ள 40, 54, 59, 75, 90 மற்றும் 91-வது பாடல்களைக் கேட்டு வழிபடுவது விருச்சிக ராசிக்காரர்களுக்கு விசேஷமானது.

9. தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு மூன்றாம் வீட்டிலிருந்த ராகு இரண்டாம் வீட்டிற்கும், ஒன்பதாம் வீட்டிலிருந்த கேது எட்டாம் வீட்டிற்கும் பெயர்ச்சி அடைகிறார். இந்தப் பெயர்ச்சி குடும்பம், பணம் மற்றும் தொழில் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் செயல்பட வேண்டிய காலகட்டமாக அமையலாம்.

குடும்ப உறுப்பினர்களிடம் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை. குறிப்பாக, பெற்றோர் மற்றும் பெரியவர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.

தொழில், உத்தியோகம், வியாபாரம் மற்றும் படிப்பு தொடர்பான விஷயங்களில் நல்ல வாய்ப்புகள் உருவாகலாம். திருமணத் தடைகள் நீங்குவதற்கும் குழந்தை பாக்கியம் தொடர்பான தடைகள் விலகுவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. புதிய வாகனம் வாங்குவது, வீடு வாங்குவது போன்ற சுப காரியங்களும் கைகூடலாம்.

கால் வலி மற்றும் இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வாகனம் ஓட்டும்போது அவசரத்தையும் கோபத்தையும் தவிர்க்க வேண்டும். சமயபுரம் மாரியம்மன், துர்க்கை அம்மன் மற்றும் வாராகி அம்மன் போன்ற தெய்வங்களை வழிபடுவது சிறப்பானது.

10. மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இரண்டாம் வீட்டிலிருந்த ராகு முதல் வீட்டிற்கும், எட்டாம் வீட்டிலிருந்த கேது ஏழாம் வீட்டிற்கும் பெயர்ச்சி அடைகிறார். இந்தப் பெயர்ச்சியால் வாழ்க்கையில் பல புதிய மாற்றங்கள் ஏற்படலாம்.

குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறலாம். வீடு வாங்குவது, வீட்டை புதுப்பிப்பது, நகைகள் வாங்குவது போன்ற சுப செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் திருமணம் மற்றும் பிற சுப காரியங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகளும் உருவாகலாம்.

தொழில் மற்றும் உத்தியோகத்தில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படலாம். சிலருக்கு வேலை மாற்றம் அல்லது தனியாகத் தொழில் தொடங்கும் எண்ணம் உருவாகலாம். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைப் பெறலாம்.

அதே சமயம், புதிய கடன்களைப் பெறும் போது கவனமாக இருக்க வேண்டும். முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. மன அழுத்தத்தால் ஏற்படும் வயிறு தொடர்பான பிரச்சனைகளிலும் கவனம் தேவை. வனதுர்க்கை அம்மன் வழிபாடு மகர ராசிக்காரர்களுக்கு விசேஷமானது.

11. கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு முதல் வீட்டிலிருந்த ராகு பன்னிரண்டாம் வீட்டிற்கும், ஏழாம் வீட்டிலிருந்த கேது ஆறாம் வீட்டிற்கும் பெயர்ச்சி அடைகிறார். இதனால் தொழில், வியாபாரம் மற்றும் படிப்பு தொடர்பான விஷயங்களில் சில முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்கலாம்.

எதிர்பாராத இடங்களிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கலாம். பணவரவு அதிகரிப்பதுடன் அசையும் மற்றும் அசையாச் சொத்துகளைச் சேர்ப்பதற்கான வாய்ப்புகளும் உருவாகலாம். முதலீடுகள் தொடர்பான முயற்சிகளிலும் சாதகமான சூழல் அமையலாம்.

இருப்பினும், வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காது, மூக்கு, தொண்டை, பல் மற்றும் அமிலத்தன்மை தொடர்பான பிரச்சனைகளை அலட்சியம் செய்யக்கூடாது.

உடற்பயிற்சியை வழக்கமாக்கிக்கொள்வதும், பேசும் வார்த்தைகளில் கவனம் செலுத்துவதும் அவசியம். திருக்கொல்லிக்காடு பொங்குசனீஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபடுவது கும்ப ராசிக்காரர்களுக்கு விசேஷமானது.

12. மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு பன்னிரண்டாம் வீட்டிலிருந்த ராகு பதினொன்றாம் வீட்டிற்கும், ஆறாம் வீட்டிலிருந்த கேது ஐந்தாம் வீட்டிற்கும் பெயர்ச்சி அடைகிறார். இந்த அமைப்பு லாபம், தொழில் மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் பல நல்ல வாய்ப்புகளை உருவாக்கலாம்.

குறிப்பாக, வேற்றுமொழி பேசும் நபர்கள் மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் ஆதாயம் கிடைக்கலாம். வெளிநாட்டுப் பயணம், வெளிநாட்டு வேலை மற்றும் வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படலாம்.

நீண்ட நாட்களாக எதிர்கொண்டு வந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கலாம். தொழில், உத்தியோகம், வியாபாரம் மற்றும் படிப்பு போன்ற அனைத்து விஷயங்களிலும் சாதகமான மாற்றங்களை எதிர்பார்க்கலாம். எதிர்பாராத பணவரவு மற்றும் புதிய வாய்ப்புகளும் உருவாகலாம்.

இருப்பினும், உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, அடிவயிறு, முதுகு, கால் மற்றும் பாதம் தொடர்பான பிரச்சனைகளை அலட்சியம் செய்யக்கூடாது. வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகள் விஷயத்தில் தேவையற்ற கவலைகளைத் தவிர்க்க வேண்டும்.

ஆலங்குடி குரு பகவான் கோயிலுக்குச் சென்று வழிபடுவது சிறப்பானதாகக் கூறப்படுகிறது. மேலும், விநாயகர் வழிபாடு மற்றும் அனுமன் சாலிசா கேட்டு வழிபடுவதும் ஆன்மீக ரீதியாக நன்மை தரும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, November 13, 2026, 23:18 [IST]
Desktop Bottom Promotion