எவ்வளவோ கதை கேட்டிருப்பீங்க… ஆனா இப்படியொரு கதை கேட்டிக்கவே மாட்டீங்க…

By Gnaana
Subscribe to Boldsky

சூஃபியிசம், எளிய தத்துவங்களை, அழகாக, ஆழமாக மனதில் படியும்படி சேர்க்கும், உன்னத தத்துவம். மதக்கோட்பாடுகளை பரப்பும்கலை என அறியப்பட்டாலும், சூஃபி தத்துவத்தை முழுமையாக அறிந்தவர்கள், அப்படிக் கூறமாட்டார்கள். தன்னையறிதலை உணர்த்தும், அத்வைதம், ஜென் தத்துவங்களை ஒட்டியதுதான், சூஃபி தத்துவம்.

புழு நிலையில் உருவாகி, காலஓட்டத்தில் உருவமாற்றம் பெற்று, இறுதியில் மனதை மயக்கும் அழகிய வண்ணத்துப்பூச்சிகளாக முழுமை பெறுவதைப்போலத்தான், சூஃபி ஞானமும். இயற்கை, காற்று எல்லாயிடங்களிலும் ஒன்றுதான். அவையிருக்கும் இடங்களே, மாறுபடுகிறது. மலைகளில் வீசும் காற்று தென்றலாகவும், பாலைவனத்தில் வீசும் காற்று வெப்பமாகவும் இருப்பதற்கு, அந்த இடங்களின் தன்மைகளே காரணமாகின்றன. காற்று ஒன்றுதான்! சூரியனும், நிலவும் வேண்டியவர், வேண்டாதார் என்று பேதம் பார்த்து வருவதில்லையே, எல்லோர்க்கும் ஒரு நிறைதானே! இதுபோன்ற உலகின் இயற்கைப் படைப்புகளைப் போற்றுவார்கள், சூஃபி ஞானிகள்.

எளிய தத்துவங்களைப் பாடலாக, இசைப்பதும் சூஃபியிசம்தான், கஜல், கவாலி பாடல்கள், சூஃபிக்களின் தத்துவத்தை, பிரதிபலிக்கின்றன.

self confidence

விரும்பும் பாதையில் ஈடுபாட்டுடன் தொடர்ந்து பயணிக்கும்போது, பாதையின் முடிவில் வாழ்வின் முழுமையை உணரமுடியுமென்பதே, சூஃபி தத்துவங்கள்.

சூஃபிக்கள், நமது சித்தர்கள்போல, மறைபொருளில் தத்துவங்களை உரைத்தாலும், அவற்றின் பொருள் எளிதில் அறியக்கூடிய வகைகளிலேயே இருக்கும்.

நிறைய புத்தகங்கள் படிப்பவர்களை, அறிவாளிகள் என்பார்கள். அவர்கள், உலகின் மிகச்சிறந்த மகான்கள், அறிஞர்கள், அரசர்களைப் பற்றிய தகவல்கள், அவர்களின் வாழ்க்கை மற்றும் சிந்தனைகளை அறிந்து வைத்திருப்பார்கள்.

தன்னை உணர்ந்தவர்களை, ஞானிகள் என்பார்கள். அவர்கள் தம்மில் அனைத்தும் உணர்ந்து, அதன்மூலம், எளிமையான தத்துவங்களை மனிதருக்கு உணர்த்துகிறார்கள்.

சூஃபி ஞானிகளின் வாழ்க்கை, மக்களின் அறியாமையை அகற்றி, அன்பை போதித்தது. சில சூஃபி தத்துவஞானிகளின் வாழ்க்கையை சற்று பார்ப்போமா!

self confidence

ஒருமுறை சாப்பிட்டால், நீண்டநாட்கள் சாப்பிடாமல் வாழவைக்கும் அதிசய பழம்.

ஒருஊரில், மக்கள் நீண்டநாட்கள் பசியில்லாமல் வாழ, அதிசயபழம் கிடைக்கிறதாம், அதை ஒருமுறை சாப்பிட்டால், பின்னர் நெடுநாட்களுக்கு பசியே எடுக்காதாம், என்று ஒருவர் சூஃபி ஞானியிடம் தகவல்தரவே, அந்தப்பழத்தை வாங்கிவந்து, இங்கு பழக்கொட்டைகளை விதைத்துவைத்தால், பஞ்சத்தால்வாடும் மக்களுக்கு பசிதுன்பம் நீங்கிவிடுமே என்ற எண்ணத்தில், சூஃபி ஞானியும், பழம் கிடைக்கும் ஊரைத் தேடிச்சென்றார்.

அங்கே, மேற்படி பழம் இருப்பதற்கான அறிகுறிகளே இல்லை, இருப்பினும், அங்கேயுள்ள கடைகளில் சுற்றிவந்தார், இவர் தேடலைக்கண்ட இளைஞனொருவன், ஐயா, உங்கள் தேவை எதுவென்று சொன்னால் நான் உதவுவேன் என்று சொல்ல, சூஃபி ஞானியும், தகவலை சொல்லி, மக்களின் பசித்துயரைப் போக்கும் கனி கிடைத்தால், அதன் விதைகளை ஊன்றி, மக்களின் பசியைப் போக்கலாமே என்ற எண்ணத்தில், தான் வந்ததைச்சொன்னார்.

அதைக்கேட்ட இளைஞன், ஒருவினாடி என்றுசொல்லிவிட்டு, உடனே வேகமாக எங்கோ சென்றுமறைந்தான். சற்றுநேரத்தில், கையில் ஒருபழத்துடன் வந்தான். அதை அவரிடம் தந்தபின், இதுதான், நீங்கள் தேடிய பழம் என்றான். இங்கே நிறைய பழங்கள் கிடைக்குமென்றார்களே என்றார், கையிலிருந்த ஒரு பழத்தை குழப்பமாகப் பார்த்துக்கொண்டே.

நீங்கள் சொல்வது சரிதான் ஐயா! ஆனால், மக்கள் பொதுநலம் மறந்துவிட்டார்களே, அதிக பழங்கள் கிடைத்தவுடன், எல்லாவற்றையும் தாமே அனுபவிக்க வேண்டுமென்ற சுயநலம், மக்களிடம் மிகுந்துவிட்டது. பழங்களை வீடுகளில் பதுக்கிவைத்துக்கொண்டு, விதைகளைக்கூட, இரகசியமாக விதைக்கிறார்கள், என்வீட்டில் இருக்கும்பழம், எங்கள் பசியைப் போக்குவதைவிட, உங்களிடம் இருந்தால், ஒரு ஊரே பயன்பெறுமே, என்றான்.

சூஃபி ஞானி மனதார அவனை வாழ்த்தி, தனக்காக வாழாமல், பிறருக்காக வாழ்வது, உன்னை, இறைநிலைக்கு உணர்த்தும் என்றார்,

சூஃபிஞானி ஹசன் அவர்களிடம், தங்கள் குரு யார் என்று சிலர் கேட்க, நான் இறக்கும்தறுவாயில் கேட்கிறீர்களே, எனது குருநாதர்கள் பெயரையும், அவர்களைப்பற்றியும் பேச ஆரம்பித்தால், நாட்கள், மாதங்கள் முடிந்து, வருடக்கணக்காக ஆகிவிடும். இருப்பினும், அதில் மூன்று குருமார்களைப்பற்றி, உங்களுக்கு சொல்கிறேன் என்றார்.

ஒருமுறை, சூஃபி ஹசன், பாலைவனப்பயணத்தில் வழிமாறி, அலைந்து ஒருகிராமத்தைக் கண்டு, அங்கே சென்றபோது, நல்லிரவாகிவிட்டதால், ஊரே நிசப்தமாக இருந்தது. அங்கே கண்ட திருடனிடம் தங்க இடம்கேட்க, அவன் தன் வீட்டுக்கு அழைத்துச்செல்கிறான். திருடன் வீட்டில் தங்குவதா என்ற தயக்கம் இருந்தாலும், இரவுநேரத்தில் வேறு வாய்ப்பு இல்லாததால், அவனுடன் சென்று, அவன் வீட்டில் தங்குகிறார். தினமும் இரவில் திருடன் திருட, வெளியில் செல்லும்போது, இவரிடம் உங்கள் வழிபாட்டை, சிந்தனையைத்தொடருங்கள், நான் தொழிலுக்கு சென்றுவருகிறேன் என்பான். தினமும் அவன் திருடுவதற்கு இவரிடம் விடைபெற்றுச்செல்வதும், வெறுங்கையுடன் காலையில் திரும்புவதும் வாடிக்கையானது, ஆனாலும் சோர்வடையவில்லை, இறைவன் நாளை தருவான் என்ற நம்பிக்கையுடன் அவன், மகிழ்ச்சியுடன் இருந்தான். இதுபோல ஒரு மாதகாலம்.

பிறகு தம் இடம் திரும்பிய சூஃபி ஞானி யோசித்தார், திருடனே, இறைவன் நாளை தருவான் என்ற நம்பிக்கையில் இருக்கும்போது, நாம் மட்டுமேன், தியானம் கைகூடவில்லை, இறையருள் கிடைக்கவில்லை என்று தியானத்தை நிறுத்த முயலவேண்டும்? என்று யோசித்தார்.

விடாமுயற்சியுடன் தியானத்தைத்தொடர, நினைத்த ஞானத்தை இறுதியில் அடைந்தார். அந்த நிலையில், அவரின் முதல்செயல் என்னதெரியுமா? பல்லாயிரம்மைல் தொலைவில் இருக்கும் அந்த திருடனின் ஊர்திசையை நோக்கி, வணங்கியதுதான். அவன்தான் என் முதல்குரு என்றார் சூஃபி ஞானி.

ஒருமுறை, பலநாள் பயண சோர்வில், காட்டிலுள்ள ஓடையில் நீர்பருக செல்லும்போது, ஒரு நாயும் நீர் பருகவந்து, நீரில் தெரிந்த தன்உருவத்தை, வேறு உருவம் எனநினைத்து, அச்சத்தில், நீரைப்பருகாமல் குரைத்தது. அந்த பிம்பமும் குரைக்க, தயங்கி ஒதுங்கிப்போனது. பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பார்களே, அதுபோல அதிக தாகத்தில் இருந்ததால், நீரில் நாயின் உருவம் தெரிந்தாலும், அதை இலட்சியம் செய்யாமல், நீரில் பாய்ந்தது. நீரைப்பருகியபின், தாகம் தீர்ந்து, நீரில் குதித்து கும்மாளமிட்டது.

நமக்கு இருக்கும் எல்லா பயங்களையும் ஒன்றுதிரட்டி, அதனுடன் மொத்தமாக, நாம் தேடும்விசயத்தில் மூழ்கிவிட, தேவையற்ற தயக்கங்கள் விலகி, தெளிவான தீர்வு கிடைக்கும் என்று உணர்த்திய, நாய்தான், எனது இரண்டாவது குரு என்றார் ஞானி.

சூஃபி ஞானியின் மூன்றாவது குருவும், ஒளியின் தொடக்கமும்!

சூஃபி ஞானி ஹசன், ஒருமுறை, ஒருஊருக்கு சென்றபோது, வழியில் ஒருகுழந்தை, கையில் எரியும் மெழுகுவர்த்தியுடன் சென்றுகொண்டிருந்தது, குழந்தைதானே என்ற அலட்சியத்தில், எரியும் மெழுகின் ஒளி, எங்கிருந்து வருகிறது என்று உனக்கு தெரியுமா என்று குறும்புடன் கேட்க, குழந்தை சற்றும்தாமதிக்காமல், ஞானியின் குறும்புக்கு சற்றும்சளைக்காமல், மெழுகை ஊதி அணைத்துவிட்டு, இப்போது ஒளி எங்குசென்றது என்று, உங்களுக்குத்தெரியும்தானே, அது சென்ற இடத்தை எனக்குக் கூறுங்கள் என்று குறும்புடன்கேட்க, ஆணவம் அழிந்த ஞானி, தலைக்கனம் அறிவை மழுங்கடித்துவிடும் என்று உணர்த்திய அந்தக்குழந்தையே, எனது மூன்றாவது குரு என்றார்.

self confidence

வயதான சூஃபி ஞானியும், முரட்டு இளைஞர்களும்..

அனுபவத்திலும், மக்களுக்கு அறிவுசார்ந்த ஒழுக்க நெறிகளை போதிப்பதிலும், யார் எத்தனை கடினமான கேள்விகள் கேட்டாலும், எளிதில் புரியக்கூடிய எளிய பதில்களை உரைப்பதிலும், புகழில் செருக்கடையாத அமைதியும் கொண்ட ஒரு சூஃபி ஞானியின் புகழைப் பொறுக்காத, முரட்டுஇளைஞர் கூட்டமொன்று, அவரிடம்சென்றது. அவர் தடுமாறும் ஒருகேள்வியைக் கேட்டு, அவரை, அவமானப்படுத்தவேண்டும், என்று திட்டமிட்டு, பல சதியாலோசனைகளுக்குப் பிறகு, ஒருகேள்வியை தேர்வு செய்தது.

ஞானியை நக்கலாகப்பார்த்தவாறே, நீங்கள், எல்லா கேள்விகளுக்கும் விடை தெரிந்தவராமே, நாங்கள் கேட்கும் கேள்விக்கு உடனே, சுருக்கமான பதிலைக்கூறணும் என்றுசொல்ல, அவர் அமைதியாகப்பார்க்க, உலகில் குட்டிபோடும் உயிரினங்கள் எவை, முட்டைபோடும் உயிரினங்கள் எவை என்று கேட்டு, ஆணவப் பெருமிதத்தில் மிதந்தனர்.

இதற்கு நிச்சயம் ஒருவரியில் பதில் சொல்லமுடியாது, விரிவாக ஒவ்வொரு பெயராக சொல்லவேண்டும், நீண்ட பதிலாகப்போகும், இந்தஞானி நம்மிடம் வசமாகத்தோற்று அவமானப்படப் போகிறார், என்று எண்ணி, ஞானியை அலட்சியமாகப்பார்த்தனர்.

சூஃபி ஞானி அமைதியாக, எளிமையான ஒரு பதிலைச்சொன்னார், காதுகள் உள்ள உயிர்கள் எல்லாம், குட்டி போடும், மற்ற உயிர்கள், முட்டை போடுமென்று.

படைப்பின் இரகசியத்தை எளிய வார்த்தைகளில் இதைவிட, சுலபமாக விளக்கமுடியுமா? ஞானியை வணங்கி, தவறுக்கு பிராயச்சித்தம் தேடினர், குறும்புக்கார இளைஞர்கள்.

சிரித்து வாழவேண்டும்!

வயதான ஒரு சூஃபி ஞானி எப்போதும் சிரித்தபடியே இருப்பார், அவர் இறப்பை அடையும் வேளையிலும் சிரித்துக்கொண்டே இருந்தார். சீடர்கள், இறக்கும்போதும் சிரிக்கிறீர்களே, எப்படி உங்களால் முடிகிறது என்றனர். அவர், உங்கள் வயதில் நான் ஒரு முதிய ஞானியைக் கண்டேன், அவர் எப்போதும் சிரித்துக்கொண்டேயிருந்தார். நீங்கள் என்ன லூஸா? எப்போதும் சிரிக்கிறீர்களே, என்றேன், அவர், நானும் உன்னைப்போல, உம்மணாமூஞ்சியுடன் சோகமாகத் தான் இருந்தேன்

ஒருநாள் காலை எழும்போது என்னை நானே கேட்டுக்கொண்டேன், இன்று உனக்கு என்ன வேண்டும்? மகிழ்ச்சியா? வருத்தமா? எல்லோருக்கும், இன்பம்தானே பிடிக்கும். அன்றுமுதல் தினமும் காலையில் கண்விழிக்கும்போது, மகிழ்ச்சியை தேர்வுசெய்கிறேன், நாள்முழுதும், சந்தோசமாக சிரித்துக்கொண்டே இருக்கிறேன், உனக்கும் மகிழ்ச்சி வேண்டுமென்றால், நீயும், உன்னைக்கேட்டுக்கொள், என்றார், அதன்படியே, நானும், நாள்முழுதும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றார், சீடர்கள் வாயடைத்துப்போனார்கள்.

யாராவது, கனியிருக்கக் காய் கவர்வார்களா?

மனதையும் உடலையும் புத்துணர்வாக்கும் மகிழ்ச்சியை விட்டுவிட்டு, உடலுக்கு பல்வேறு வியாதிகளைத்தந்து, மனதை முடக்கும் வருத்தத்தை யாராவது தேர்ந்தெடுப்பார்களா என்ன?!.

இதுவும் கடந்து போகும்!

துன்பத்திலும், இன்பத்திலும் நினைத்துபார்க்கக்கூடிய ஒருதத்துவத்தைக் கூறுங்கள் என்று சூஃபி ஞானியிடம் ஒருவர் கேட்க,

இதுவும் கடந்து போகுமென்றார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    sufi saints and teir simple messages

    generally sufis telling a lot of humanity stories. That stories telling about our life paths
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more