பசி என்னும் நோயை போக்கிய வள்ளலாரின் அற்புத போதனைகள்!!

By: Gnaana
Subscribe to Boldsky

தான் சார்ந்திருந்த சைவசமயத்திலிருந்து விலகி, பழமைவாத சிந்தனைகளால் சமுதாயத்தில் கண்ட ஏற்றத்தாழ்வுகளில் மனிதர்கள் படும் இன்னல்களில் துயருற்று, தவநெறியில் ஆழ்ந்து, தன்னில் உணர்ந்த ஜோதியின் மூலம் இறையுணர்வை அடைந்து, சாதிசமய வித்தியாசமின்றி, "எம்மதமும் சம்மதம்" எனும் தமது சன்மார்க்கக் கருத்துக்களை மக்களிடம் போதித்து, அவர்கள் பசிப்பிணியும் போக்கிய வள்ளலாகத் திகழ்ந்ததால், அருட்திரு.வள்ளலார் என அனைவராலும் போற்றப்பட்டார்.

"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்", உலக உயிர் எதுவாக இருந்தாலும், அதற்கும் வாழ உரிமை இருக்கிறது என உரைத்து, அனைத்து உயிர்கள் மேலும் கருணை கொண்ட மனமுடைய, அருளாளர் வரலாறு அறிவோமா!

தமிழ்நாட்டில், சிதம்பரம் எனும் சிவபெருமான் திருநடனமிடும் ஆன்மீகநகரின், அருகேயுள்ள சிற்றூரில் பிறந்த இராமலிங்கம், குழந்தைப்பருவத்திலேயே தந்தையை இழந்து, தனது அன்னை மற்றும் சகோதரர்களுடன் சென்னையில் குடியேற நேர்ந்தது.

ஆன்மீக வழியில் வந்த பாரம்பரியமிக்க சைவ சமய சொற்பொழிவுகளின் மூலம், சிவபெருமானை வணங்கி கைங்கரியம் செய்யும் குடும்பமாதலால், இவர் சிறுவயது முதலே, சைவநெறி இறைஉணர்வுடன் திகழ்ந்து வந்தார், சிறுவயதிலேயே இவருக்குத் தமிழ்க் கடவுளான முருகன் அருள் கிடைத்து அதனாலேயே, செம்மொழியாம் தமிழ் மொழியுடன் வடமொழியிலும் புலமை பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

Spiritual quotes of Saint Vallalar to lead a happy life

இறை ஞானக்குழந்தை, சைவ சமய நால்வரில், அன்னை உமை அளித்த ஞானப்பால் அருந்திய, திருப்பெருமைமிக்க இளைய பிள்ளையை, திருஞானசம்பந்தரை, மானசீகக் குருவாக ஏற்று, அக்காலத்திய தமிழ் அறிஞர் சபாபதி முதலியார் மற்றும் தமது சகோதரர் சபாபதி பிள்ளை ஆகியோரை ஆசானாகக்கொண்டு பல ஆன்மீக விசயங்களில், ஞானம் பெற்றார்.

சகோதரர் மற்றும் அன்னையைப்போல அன்பு காட்டிய அண்ணியாரின் அரவணைப்பில் வளர்ந்த இராமலிங்கர், தமிழ் சொற்பொழிவாளராக, தமிழ்ப் புலவராக, தமிழ் நூல் எழுத்தாளராக, சித்த மூலிகை மருத்துவராக பன்முகத் திறமை கொண்டு விளங்கி, இறுதியில் துறவியாகி, ஞானச்சித்தரானார்.

பல அற்புதங்கள் நிகழ்த்திய இராமலிங்கர், தாம் கொண்ட தவத்தின் மூலமாக, நாம் இறைவனென வெளியில், கோவில்களில் வணங்கும் இறைவன் இந்த உலகில் உள்ள அனைவரின் மனதிலும் ஜோதி வடிவாக இருக்கிறார், அந்த ஜோதியே, இறைவனின் தனிக்கருணையாக, இந்த உலக உயிர்களையெல்லாம் வாழவைக்கிறதென்ற உண்மையை, உணர்ந்து அறிந்தார்.

இந்த சிந்தனையால் எழுந்த விளைவால், மனிதர்கள் யாவரும் சமய வேறுபாடின்றி, அனைத்து உயிர்களிடத்தும் அன்பு கொண்டு வாழும் வாழ்வே, உலகில் உயர்ந்தது, அதுவே வாழ்வை நிறைவாக்கும் எனத்தெளிந்து, அந்தச் சிந்தனைகளையே, சமரச சன்மார்க்க நெறியாக கொண்டு எல்லோருக்கும் போதித்து வாழ்ந்தார்.

திருவாசகத்தைப் போற்றி, தில்லையம்பல நடராஜரையே தன் தெய்வமாக எண்ணி சிவ நெறியில் வாழ்ந்தவர். பின்னர் அருட்பெருஞ்ஜோதியாக இறைவனைக் கண்ட அடியாராக, அருட்பெருஞ்ஜோதி வள்ளலாராக, அவதாரத் திருவுருவானார்.

Spiritual quotes of Saint Vallalar to lead a happy life

வள்ளலாரின் கருணை:

உலகில் வாழும் எல்லோரும் சமம், உயர்வு தாழ்வில்லாத சமதர்ம சமூகமாக, அருட்பெருஞ்ஜோதியை மனதில் இருத்தி, யாவரும் நலமுடன் வாழவேண்டும் என்ற உன்னத இலட்சியத்தில் அவர் இயற்றிய "திருவருட்பா" அடியார்க்கெல்லாம், காலத்தால் அழியாத, பைந்தமிழ் பரவசமாகத் திகழ்கிறது.

திருவருட்பாவின் அனைத்துப்பாடல்களும் இறைவனை விளித்தேப் பாடப்பட்டவை. மனிதர்கள் தம் தினசரி வாழ்வில் இறைவனை வேண்டுவது, அதன் வழி வாழ்வது போன்ற நற்கருத்துக்கள் கொண்ட பாடல்கள் மூலம் கொண்ட புதுமை, அதுவரை தமிழ் இலக்கியம் காணாதது, அதுவே தமிழ் மொழிக்கு என்றும் பெருமையானது.

"மனுமுறை கண்ட வாசகம்" மற்றும் "ஜீவகாருண்ய ஒழுக்கம்" போன்ற புத்தகங்களும் எழுதியிருக்கிறார்.

திருக்கோவில்களில் இறைவனை வழிபட்டு வந்தவர் தானும் மாறி, மக்களையும், ஆன்மநேய சிந்தனை கொண்ட முற்போக்கு நெறிகளுக்கு மாற்றியதன் மூலம், இவர் வாழ்ந்த காலத்தில் பழமைவாத சைவ சமயத்தினர் இவர் மீது கடுங்கோபம் கொண்டு, இவர் இயற்றிய திருவருட்பாவுக்கு எதிராக பல எதிர்ப்பு நூல்கள் எழுதிய நிகழ்வுகள் நடந்தேறின.

வள்ளலார் தோற்றுவித்த சன்மார்க்க தர்மசபை - வடலூர்:

தான் உணர்ந்த அரிய தத்துவத்தை உலகுக்கு உணர்த்தி, சமரச சுத்த சன்மார்க்க சங்கம் நிறுவி, பசிப்பிணியே மனிதர்க்கு தோன்றும் எல்லா மனப்பிணிகளுக்கும் மற்ற பல சமூகப்பிணிகளுக்கும் காரணம் என உணர்ந்து, பசித்தோர் எல்லோருக்கும் எல்லா வேளையும் அன்னமிட்டு, அவர்கள் பசிப்பிணி களைய வேண்டும், அதன் மூலம் சிந்தனைவளம் பெறும் மக்கள் நல்வழியில் உலகை செலுத்துவர் என்ற உயர்ந்த நோக்கத்தில் அன்று அவர் மூட்டிய அந்த அன்னதானக் கூடத்தின் நெருப்பு, இன்றுவரை அணையாமல் எரிவதே, அவரின் நல்வழி எண்ணங்களுக்கு ஒரு மூல சான்றாகும்.

பொதுமக்கள் கைங்கரியத்தோடு இன்றும் சிறப்பாக செயல்பட்டு வரும் அன்னக்கூடம், இன்றுவரை அப்பகுதி மக்களுக்கும், சன்மார்க்க சபை வரும் அடியார் எல்லோருக்கும் என்றும் பசிப்பிணி போக்கும் அன்னையாகத் திகழ்கிறது.

உலகோர் பசிப்பிணி போக்கிய வள்ளல், அதே அடைமொழியோடு காலங்கள் கடந்தும் அழைக்கப்பட்டு வருகிறார். அவர் வழிநடக்கும் அன்பர் எல்லோரும் அவரவர் வாய்ப்புகளுக்கேற்றாற்போல, அன்னதானக்கூடங்கள் ஆங்காங்கே, நடத்தி மக்கள் பசியாற்றிவருகின்றனர், என்பது சிறப்பாகும்.

Spiritual quotes of Saint Vallalar to lead a happy life

சன்மார்க்க சங்கம்

அனைத்து நதிகளும் கடலில் கலப்பதுபோல, அனைத்து மதங்களும் போதிக்கும் தத்துவம் ஒன்றே என்பதைக்குறிக்கும்வகையில், தான் உணர்ந்தறிந்த உண்மைகளின் வடிவாக, சன்மார்க்க சங்கத்தைத் தோற்றுவித்து, சமூக வேற்றுமைகளைக்கொண்ட, சாதிக்கொடுமைகளை எதிர்த்தார். அவருடைய முற்போக்கு சிந்தனைகளால், அவர் வாழுங்காலங்களில் நிறைய எதிர்ப்பை சந்தித்தாலும், இன்றைய நிலையில், அவையாவும், அனைவராலும் பின்பற்றப்படும் வாழ்க்கை நெறிகளாகிவிட்டன.

ஆன்மநேயமே இறைநெறி என்ற சிந்தனையில் அருந்தவ வாழ்வு வாழ்ந்த வள்ளலார், ஒரு தைப்பூசத்திருநாளில், வடலூரில் அவர் உருவாக்கிய சன்மார்க்க சபையின் ஓர் அறைக்குள் சென்று, கதவைத் தாளிட்டு, தான் அருட்பெருஞ்ஜோதியாகக் கண்ட, இறைவனில் கலந்து, ஜோதி வடிவானார்.

அதன் நினைவாக, இன்றும் தைப்பூச நாட்களில், அலைஅலையெனத் திரளும் பக்தர்களின் "அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெரும் கருணை, அருட்பெருஞ்ஜோதி" என்ற இறை முழக்கங்களுடன், அவரின் ஜோதி தரிசனம் அன்றைய தினம் மட்டும் மூடிய திரைகள் விலகி, அனைவரும் தரிசிக்க வாய்ப்பாகிறது. மற்றதினங்களில் திரையின் வழியே மட்டும்,ஜோதி தரிசனம் கிட்டும்.

Spiritual quotes of Saint Vallalar to lead a happy life

வள்ளலார் வகுத்த வாழ்க்கை நெறிகள்!!

இறைவன் ஒருவரே, அவரே, அருட்பெருஞ்ஜோதி வடிவானவர்.

மற்ற உயிரைக்கொல்லுதல் கூடாது. இறைச்சி உண்ணக்கூடாது.

எண்ணத்தில் பொதுநோக்கம் கொண்டு, சாதி,இன,மொழி ரீதியான வேறுபாடுகள் இன்றி, பசித்தோர் அனைவருக்கும் உணவிடவேண்டும்.

தெய்வவழிபாடுகள் என்ற பெயரில் உயிர்ப்பலி கூடாது, எல்லா உயிர்களும் வாழ உரிமை உள்ளவையே, அவற்றைத் துன்புறுத்துதல் கூடாது.

வள்ளலார் பொது நெறிகள்!!

நல்லவர்கள் மனதை நடுங்க வைக்கக்கூடாது.

ஏழைகள் வருவாயை அபகரிக்கக்கூடாது.

தானம் கொடுப்போரை, துர்போதனைகள் சொல்லி தடுக்கக்கூடாது.

நல்ல நட்புக்கு வஞ்சகம் செய்யக்கூடாது, நம்பிக்கை துரோகம் செய்யக்கூடாது.

பசியால் வாடுவோரை கண்டும் காணாமல் போவதும், குருவை வணங்காமல் இருப்பதும் கூடாது.

தீயசெயல்களால் ஒற்றுமையான குடும்பத்தைப்பிரிப்பதும், தந்தைதாய் சொல்லை மீறி நடப்பதும் கூடாது.

தவநெறியில் வாழ்வோரை, ஏளனமாகப் பேசக்கூடாது.

English summary

Spiritual quotes of Saint Vallalar to lead a happy life

Quotes of Saint Vallalar to lead a happy life
Story first published: Tuesday, July 18, 2017, 19:00 [IST]
Subscribe Newsletter