கார்த்திகை தீபத்தன்று அகல்விளக்கில் இந்த 3 பொருட்களை வைத்து விளக்கேற்றுங்க.. வீட்டில் செல்வம் அதிகரிக்கும்...

Karthigai Deepam 2024: ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் திருகார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள இந்துக்கள் கொண்டாடப்படும் முக்கியமான விழாக்களுள் கார்த்தியை தீப பண்டிகையும் ஒன்று. இந்நாளில் மக்கள் வீட்டில் தீபங்களை ஏற்றி, வீட்டை அழகாக அலங்கரிப்பார்கள்.

ஆதியும் அந்தமும் இல்லாதவர் சிவபெருமான் என்பது சிவ பக்தர்களுக்கு தெரியும். நினைத்தாலே முக்தி தரும் தலமாக கருதப்படுவது திருவண்ணாமலை. இந்த திருவண்ணாமலை என்றாலே நினைவிற்கு வருவது கார்த்திகை தீபத்தன்று அந்த மலையில் ஏற்றப்படும் மகாதீபம் தான். இந்த நன்னாளில் மக்கள் சிவன் மற்றும் முருகப்பெருமானின் அருளைப் பெற, கோவில்களுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபட்டு வருவார்கள்.

Karthigai Deepam 2024 Keep These 3 Things In Agal Vilakku To Attract Money

இப்படிப்பட்ட கார்த்திகை தீப நாளில் ஒருசில தவறுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் வீட்டில் அகல் விளக்கை ஏற்றும் போது, அந்த விளக்கில் 3 பொருட்களை வைத்து விளக்கேற்றினால், வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை

கார்த்திகை தீப நாளில் செய்யக்கூடாத தவறுகள்

கார்த்திகை தீப நாளில் நாம் ஒருசில விஷயங்களை செய்வதை அறவே தவிர்க்க வேண்டும். அதாவது, இந்த நாளில் எவ்வளவு தான் வேலை இருந்தாலும், வீட்டில் விளக்கு ஏற்றாமல் இருக்கக்கூடாது. கார்த்திகை தீப நாளானது அனைத்த வளங்களையும் தரும் திருநாளாக கருதப்படுகிறது. வாழ்வில் உள்ள இருளை நீக்கி வெளிச்சத்தை தரும் ஒரு பண்டிகையாக கார்த்திகை தீபம் கருதப்படுகிறது. எனவே இந்நாளில் கடன் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். அதேப் போல் அசைவ உணவுகளை உண்பதையும் தவிர்க்க வேண்டும்.

கார்த்திகை தீபம் ஏற்ற எந்த திரி சிறந்தது?

மற்ற நாட்களில் வீட்டில் விளக்கை ஏற்ற சாதாரண திரியை பயன்படுத்தினாலும், திருகார்த்திகை நாளில் விளக்கேற்றும் போது வாழைத்தண்டு திரி, தாமரைத் தண்டு திரியைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஒருவேளை உங்களுக்கு வாழைத்தண்டு திரி அல்லது தாமரைத் தண்டு திரி கிடைக்காவிட்டால், தூய காட்டன் திரியைப் பயன்படுத்தி விளக்கேற்றலாம்.

கார்த்திகை தீபம் ஏற்ற எந்த எண்ணெய் சிறந்தது?

கார்த்திகை தீபத்தன்று விளக்கேற்றுவதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்தினால், வீட்டில் செல்வம் பெருகும். அதுவே பசு நெய் என்றால் வாழ்க்கை வளமாக இருக்கும். விளக்கெண்ணெய் பயன்படுத்தினால், புகழ் சேரும். வேப்ப எண்ணெய் பயன்படுத்தினால் கணவன்-மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால், குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். இலுப்பை எண்ணெய் பயன்படுத்தினால், ஐஸ்வர்யம் பெருகி, வீட்டில் நிம்மதி அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

கார்த்திகை தீப நாளில் எத்தனை விளக்குகளை ஏற்றலாம்?

கார்த்திகை தீபத்தன்று வீட்டில் 27 தீபங்களை ஏற்றுவது நல்லது. இதற்கு புதிய விளக்குகளையோ அல்லது பழைய விளக்குகளையோ என எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வீட்டின் வாசல் பகுதி லட்சுமி கடாட்சம் நிறைந்த பகுதி. எனவே இந்த இடத்தில் குத்துவிளக்கில் விளக்கேற்றுவது, வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தைக் கொண்டு வரும். ஒருவேளை உங்களால் வீட்டில் 27 தீபங்களை ஏற்ற முடியாவிட்டால், 3, 9, 11 என ஒற்றை படை எண்களில் விளக்குகளை ஏற்றி வழிபடலாம்.

கார்த்திகை தீப நாளில் செல்வம் பெருக செய்ய வேண்டியவை...

கார்த்திகை தீபத்தன்று மாலை வேளையில் தீபங்களை ஏற்றி, வீட்டின் அனைத்து பகுதிகளிலும் வைத்த பின், பின்வரும் ஒரு தாந்ரீக முறையை செய்வதன் மூலம், வீட்டில் உள்ள பீடை வெளியேறி, வீட்டில் செல்வம் பெருகும். அதற்கு கார்த்திகை தீபத்தன்று விளக்குகளை ஏற்றிய பின் பூஜை அறையில் ஒரு விளக்கை எடுத்து, அதில் ஒரு பச்சை கற்பூரம், 1 கிராம்பு, 1 ஏலக்காய் வைத்து, அதில் 2 துளி நெய் ஊற்றி, பின் அதை எரிய வைக்க வேண்டும்.

இப்படி எரிய வைப்பதன் மூலம், திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மகாதீபத்தை வீட்டில் ஏற்றி வழிபாடு செய்த பலனைப் பெறமுடியும். இந்த தீபம் எரியும் போது அண்ணாமலையாரை மனதில் நினைத்து, அவரது மந்திரங்களை சொல்லி மனதார வழிபட்டு வர வேண்டும்.

இந்த தீபம் எரிந்த பின், அதில் ஒரு கருமை நிற சாம்பல் தயாராகியிருக்கும். பின் அதில் சிறிது நெய் ஊற்றி கலந்தால், கருப்பு நிற மை போன்று வரும். இதை நல்ல காரியம் அல்லது வேலைக்கு வெளியே செல்லும் போது, நெற்றியிலோ அல்லது உச்சந்தலையிலோ வைத்துக் கொண்டு சென்றால், தடையின்றி அந்த காரியம் நடைபெறும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Friday, December 13, 2024, 13:24 [IST]
Desktop Bottom Promotion