இந்தியன் 2: உலக நாயகனும், ஷங்கரும் இணைந்துமே இந்தியன் 2 கரையேறாம போனதுக்கு இதுதான் காரணமாம்...!

Indian 2: தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் ஷங்கரும், உலக நாயகன் கமலஹாசனும் கிட்டதட்ட 28 ஆண்டுகளுக்கு பின் இணையும் இந்தியன்-2 திரைப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இதுவரை வெளிவந்த எந்த ஷங்கர் திரைப்படத்திற்க்கும், கமலஹாசன் திரைப்படத்திற்க்கும் இல்லாத வகையில் இந்த திரைப்படத்திற்கு மக்களிடையே போதிய எதிர்பார்ப்பு இல்லாமல் இருப்பதும், சமூக வலைத்தளங்களில் அதிகளவில் ட்ரோல் செய்யப்படுவதும் கோலிவுட்டில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Indian 2 Why Kamal Haasan and Shankar s Film Disappoints Fans

உலக நாயகன் கமலஹாசன், பிரம்மாண்ட இயக்குனர், 2கே கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த அனிருத் இசை, சித்தார்த் மற்றும் அனைத்திற்கும் மேலாக இந்தியன் என்ற தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் படத்தின் இரண்டாம் பாகம் என இத்தனை பாசிட்டிவ் விஷயங்கள் இருந்தும் இந்த படம் போதிய வரவேற்பு பெறாததற்கு காரணம் என்னவாக இருக்கும். உண்மையில் அதற்கு பல காரணங்கள் உள்ளன, அவற்றில் முக்கியமானவற்றை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியன்

உலக நாயகன் கமலஹாசனுக்கு மூன்றாவது தேசிய விருதை பெற்றுத்தந்த இந்தியன் திரைப்படம் தமிழ் சினிமாவின் ஒரு மைல் கல்லாகும். உண்மையில் ஷங்கருக்கு பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயர் உருவாக விதை போட்டது இந்த திரைப்படம்தான். இந்த படத்தில் அவர் கிராபிக் காட்சிகளை பயன்படுத்தியிருந்த விதம் மற்றும் அவரின் கிரியேட்டிவிட்டி இன்றும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

ஒரு சுதந்திர போராட்ட வீரர் தனது முதிய வயதில் நாட்டில் தலைவிரித்தாடும் லஞ்சம் மற்றும் ஊழலை எதிர்த்து தனது வர்மக்கலையை வைத்து போராடுவது என்ற கதைக்களமே மிகவும் சுவாரஸ்யமானதாக இருந்தது. இதற்கு ஷங்கரின் திரைக்கதை, ரஹ்மானின் இசை, சுஜாதாவின் வசனம் போன்ற விஷயங்கள் உறுதுணையாக இருந்து இந்தியன் திரைப்படத்தை தேசிய அளவில் பெரும் வெற்றியடையச் செய்தது. 1996 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்திற்கு 2017 ஆம் ஆண்டு இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டது.

முதல் விபத்து

உண்மையில் இந்தியன் 2 திரைப்படம் 2017-ல் அறிவிக்கபட்டப்பட்டபோது அதற்கு பெரிய வரவேற்பு இருந்தது. அதற்கு காரணம் தமிழ் சினிமாவின் இரும் பெரும் ஆளுமைகள் 21 வருடத்திற்கு பிறகு இணைவதும், 'இந்தியன்' திரைப்படம் ஏற்படுத்திய தாக்கமும்தான். ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற ஒரு எதிர்பாராத விபத்தில் 3 பேர் இறந்ததும், அதைத்தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதும் மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த சிக்கல்கள் முடிந்து மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கும் போது கொரோனவால் உலகமே முடங்கியது. இதற்கிடையில் இயக்குனர் ஷங்கர் நேரடி தெலுங்கு படம் ஒன்றை இயக்க கமிட் ஆனதால் இந்தியன் 2 திரைப்படம் வெளிவருமா என்பதையும் தாண்டி அந்த அறிவிப்பையே பலரும் மறந்து விட்டனர்.

இயக்குனர் ஷங்கர்

தமிழ் சினிமாவின் தரத்தையும், வியாபாரத்தையும் அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றதில் ஷங்கரின் பங்கு எவ்வளவு பெரியது என்பதை நாம் நன்றாகவே அறிவோம். ஜென்டில் மேன் திரைப்படம் தொடங்கி இன்றுவரை அவரின் பெயருக்கு என்று படம் பார்க்க செல்லும் ஒரு பெரும் கூட்டம் உள்ளது. ஷங்கர் திரைப்படம் வெளிவருவது என்பது ஒரு காலத்தில் திருவிழாவாக கொண்டாடப்பட்டது. அவருடைய சிவாஜி திரைப்படம் ரிலீசுக்காக தமிழநாடே காத்திருந்த காலம் இருந்தது. பல திரைப்படங்களில் எழுத்தாளர் சுஜாதாவின் உதவியுடன் சமூக சீர்கேடுகளை நச்சென்ற வசனம் மூலம் கேள்வி கேட்ட அவரின் ஒவ்வொரு காட்சிக்கும் தியேட்டரில் விசில்கள் பறந்தது.

துரதிர்ஷ்டவசமாக கடந்த சில வருடங்களாக அவருடைய திரைப்படங்கள் எதுவும் அவருடைய ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என்பதே கசப்பான உண்மை. அவர் தமிழ் சினிமாவில் உருவாகியிருக்கும் பெஞ்ச் மார்க் என்பது மிகவும் பெரியது. அதனை அவரே தாண்ட முடியாமல் பல ஆன்டுகளாக போராடி வருகிறார்.

ஐ திரைப்படம் தொடங்கி அவரது இயக்கத்தில் இறுதியாக வெளிவந்த 2.0 வரை அனைத்தும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே ஏற்படுத்தியது. சுஜாதா ஏற்படுத்தியிருக்கும் வெற்றிடத்தை அவரின் அனைத்து திரைப்படங்களிலும் நம்மால் உணர முடிகிறது. இல்லையென்றால் "என்ன கருமம் இது... இது கருமம் இல்ல வர்மம்" போன்ற வசனங்களை நாம் ஒரு போதும் கேட்டிருக்க மாட்டோம். ஏனெனில் இந்தியன் முதல் பாகத்தின் வசனங்கள் இன்றும் கேட்கும் போது புல்லரிக்க வைப்பதாக இருக்கும்.

மேலும் இந்தியன்-2 படப்பிடிப்பின் போதே GameChanger திரைப்படத்தை இயக்கியது அவருடைய முழு கவனத்தையும் பாதித்திருக்கலாம். ரசிகர்களுக்கும் இது இந்தியன்-2 மீது எதிர்மறை எண்ணத்தை ஏற்படுத்தியது. மேலும் A.R. முருகதாஸ், அட்லீ போன்றோர் ஷங்கரின் பாணியிலேயே திரைப்படங்களை எடுத்தது அந்த வகை படங்கள் மீது ரசிகர்களுக்கு அயற்சியை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரெய்லர்

இந்தியன்-2 திரைப்படத்திற்கு மிகப்பெரிய வில்லனாக இருந்தது அதன் ட்ரெய்லர்தான். ஒரு படத்தின் விசிட்டிங் கார்டாக இருப்பது ட்ரைலர்தான். ஆனால் ஒரு படத்தின் ட்ரெய்லர் எப்படி இருக்கக்கூடாது என்பற்கு சமீபகால உதாரணமாக இந்த ட்ரெய்லர் அமைந்துவிட்டது. அதும் அந்த 'கருமம் இல்ல வர்மம்' வசனம் சோசியல் மீடியாவில் கேலிக்குரியதாக இருந்தது. அதிலும் கமலஹாசனின் தோற்றமும், மேக்கப்பும் நகைப்புக்கு உரியதாக இருந்தது. சுதந்திர போராட்ட வீரரான சேனாபதி பார்ப்பது சைனீஸ் படங்களில் வரும் வில்லன் போல காட்சியளிப்பதும், 106 வயதான சேனாபதி சட்டையை கழற்றி விட்டு சண்டை போடுவதெல்லாம் இந்தியன் திரைப்பட ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது.

இசை

இந்தியன் திரைப்படத்தின் பாடல்கள் இன்றுவரை டிவியில் ஒளிபரப்பினால் சேனலை மாற்றாமல் பார்ப்பவர்கள் எண்ணற்றோர் உள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் செய்த சிறப்பான சம்பவங்களில் ஒன்று இந்தியன் ஆல்பம். கப்பலேறி போயாச்சு, டெலிபோன் மணிபோல், பச்சைக்கிளிகள் தோலோடு, மாயா மச்சீந்திரா என இந்தியனில் வரும் அனைத்து பாடல்களும் இன்று வரை பிரபலம். ஆனால் இந்தியன் பட பாடல்கள் ஏற்படுத்திய தாக்கத்தில் 10% சதவீதம் கூட இந்தியன் -2 பாடல்கள் ஏற்படுத்தவில்லை என்பதே எதார்த்தம். அதிலும் தாத்தா வராரு பாடல் ஒரு ட்ரோல் மெட்டீரியலாகவே மாறிவிட்டது. இன்று வெளிவரும் விமர்சனங்களிலும் அனிருத்தின் இசை மோசமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே திரைக்கதை மோசமாக இருக்கும்போது இசை மேலும் ரசிகர்களை சோதிப்பதாக கூறப்படுகிறது.

புரொமோஷன் மற்றும் பேட்டிகள்

கமலஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது கமலின் தீவிர புரொமோஷன்தான். அப்போது எந்த சேனலைப் பார்த்தாலும் கமலின் முகமும் விக்ரம் பற்றிய பேச்சும்தான் இருந்தது. ஆனால் இந்தியன்-2 படத்திற்கு அப்படி எந்த புரொமோஷனையும் நம்மால் பார்க்க முடியவில்லை.

கமல், ஷங்கர் மற்றும் சித்தார்த் போன்றோரின் பேட்டிகள் படத்திற்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. சேனாபதி சண்டை போடுவதற்கு ஷங்கர் சொன்ன மொக்கை காரணம், பேட்டிகளின் போது சித்தார்த்தின் மோசமான மற்றும் எரிச்சலூட்டும் உடல்மொழி போன்றவை ரசிகர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.

கமல் இந்தியன்-2-வை விட இந்தியன்-3 தனக்கு பிடித்தது என்று அவர் கூறியது இந்த பாகத்தின் மீது கமலஹாசனுக்கு நம்பிக்கை இல்லை என்று பத்திரிகையாளர்களால் பரப்பப்பட்டது.

இப்படி இந்தியன்-2 திரைப்படத்தின் மீது எதிர்மறை தாக்கம் ஏற்பட பல காரணங்கள் இருந்தபோதும் ஷங்கர் என்ற பெயரின் மீதிருந்த நம்பிக்கையும், உலக நாயகனின் தொடர் வெற்றியும் இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் குறைந்தபட்ச நம்பிக்கை வைக்க காரணமாக இருந்தது. ஆனால் திரைப்படம் வெளியான பிறகு தற்போது வரும் விமர்சனங்களும், மக்களின் கருத்துக்களும் ரசிகர்களின் நம்பிக்கை பொய்யாகி விட்டது என்பதையே காட்டுகிறது. இருப்பினும், கமலஹாசன் கூறியது போல இந்தியன்-3 ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கையுடன் அதன் ரிலீஸுக்கு காத்திருப்போம். ஏனென்றால் சேனாபதி கூறியது போல "இந்தியனுக்கு சாவே கிடையாது".

Story first published: Friday, July 12, 2024, 20:41 [IST]
Desktop Bottom Promotion