உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும்

Posted By:

Udupi Style Vendakkai Poriyal Recipe in Tamil: வெண்டைக்காய் மிகவும் ஆரோக்கியமான காய்கறிகளில் ஒன்றாகும். ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் வெண்டைக்காய் என்றாலே அலறி அடித்து ஓடுவார்களா? அப்படிப்பட்ட அவர்களை வெண்டைக்காய் சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் வெண்டைக்காயை பொரியல் செய்யுங்கள்.

Udupi Style Vendakkai Poriyal Recipe How to Make at Home in Tamil

அதுவும் உடுப்பி ஸ்டைலில் வெண்டைக்காயை பொரியல் செய்யும் போது, அதன் சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இந்த ஸ்டைலில் பொரியலை செய்யும் போது, அதில் உள்ள வழுவழுப்புத்தன்மை முற்றிலும் நீங்கும் மற்றும் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். ஒருமுறை இந்த உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியலை செய்துவிட்டால் அதன்பின் அடிக்கடி செய்வீர்கள்.

உங்களுக்கு உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- 20 வெண்டைக்காய்
- 1/2 கப் துருவிய புதிய தேங்காய்
- 4 வர மிளகாய்
- சிறிய நெல்லிக்காய் அளவு புளி
- 1 ஸ்பூன் வெல்லம்
- தேவையான அளவு உப்பு
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 2 காய்ந்த மிளகாய்
- ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை

செய்முறை:

- முதலில் வெண்டைக்காய்களைக் கழுவி, அவை முற்றிலும் உலரும் படி ஒரு துணியை வைத்து துடைக்கவும். காய்ந்த பிறகு, அவற்றைச் சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

- ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் புளியை ஊறவைத்து, அதிலிருந்து சாற்றைப் பிழிந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

- ஒரு வாணலியில் சிறிது எண்ணெயை ஊற்றிச் சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு சேர்த்து தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் உளுத்தம் பருப்பைச் சேர்த்து, அது பொன்னிறமாகிச் சிவக்கும் வரை வதக்கவும்.

- அதன்பின் கறிவேப்பிலை மற்றும் வர மிளகாயைச் சேர்த்து, சில நொடிகள் வதக்கவும்.

- பின்னர் நறுக்கிய வெண்டைக்காய் துண்டுகளைச் சேர்த்து, மூடி போடாமல் வதக்கவும். வெண்டைக்காய் பாதி வெந்து, அதிலுள்ள பிசுபிசுப்புத் தன்மை நீங்கும் வரை வதக்க வேண்டும். வெண்டைக்காய் உடையாத படி தொடர்ந்து கிளறவும்.

- வெண்டைக்காய் வெந்து கொண்டிருக்கும் போது இதற்கான மசாலாவை தயார் செய்து கொள்ளவும்.

- அதற்காக ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் மற்றும் வர மிளகாயைச் சேர்த்து, தண்ணீர் ஊற்றாமல் சற்று கொரகொரப்பான பொடியாக அரைத்துக்கொள்ளவும். கலவை மிகவும் நைசாக இல்லாமல், சற்று கொரகொரப்பாக இருக்க வேண்டும்.

- வெண்டைக்காய் பாதி வெந்ததும், அதனுடன் வெல்லம், உப்பு மற்றும் புளி கரைசல் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- சிறிதளவு தண்ணீர் ஊற்றி, பாத்திரத்தை மூடி வைத்து, வெண்டைக்காய் முழுமையாக வேகும் வரையிலும் தண்ணீர் வற்றும் வரையிலும் சமைக்கவும்.

- இப்போது, ​​அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை வெண்டைக்காய் துண்டுகளுடன் சேர்த்து, மிதமான தீயில் வைத்து சமைக்கவும்.

- தேங்காயின் பச்சை வாசனை போகும் வரை, சுமார் 5 நிமிடங்களுக்கு மிதமான தீயில் சமைக்கவும். அவ்வளவுதான் அடுப்பை அணைத்துவிடவும், சுவையான உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெடி!

[ of 5 - Users]
Story first published: Friday, August 14, 2026, 13:14 [IST]
Desktop Bottom Promotion