இசை உலகின் சகாப்தமான கே.வி மஹாதேவன் பற்றிய குறிப்புகள்!!

By: Gnaana
Subscribe to Boldsky

தமிழர் வாழ்வில் ஒன்றென உயிரும் உடலும் போலக் கலந்ததுதான் தமிழ் திரை இசைப்பாடல்கள். பிறப்பு, திருமணங்கள் முதல் இறுதி ஊர்வலம் வரை, இன்பம் முதல் துன்பம் வரை, எல்லாவற்றுக்கும் தமிழனின் துணையாக இருப்பதுதான் திரையிசைப் பாடல்கள்.

தமிழ்த் திரைப்படங்களின் பாடல்கள் சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கர்நாடக சங்கீதமே பிரதானமாக, அவையே தமிழ்த் திரைப்பட இசையாக கோலோச்சிய கால கட்டத்தில், 194௦ களில், முதல்முறையாக தமிழ்த் திரை இசைப்பாடல்களில் கர்நாடக சங்கீத இசை இராகங்களின் மூலம் வெகுஜன ஈர்ப்பிலான பாடல்களைப் படைத்து, அன்றைய இளம் இரசிகர்களை தன் இன்னிசை மூலம் ஐம்பது ஆண்டுகாலம் தமிழ்த் திரை உலகை, பாரம்பரியம் விலகாத தன்னுடைய புதுமையான இன்னிசையால் நல்லாட்சி செய்தவர் திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள்.

K.V. Mahadevan- Legend of Tamil melodies!!

இசைமேதை K.V.மகாதேவன் அவர்களின் நூற்றாண்டு நினைவாக, இந்தப் புகழுரையை சமர்ப்பிப்பதில், "ஒன் இந்தியா" குழுமம் பெருமை கொள்கிறது.

இசைக் குடும்பத்தில் பிறந்து, தம்முடைய இளைய வயதில் பள்ளிப் படிப்பில் நாட்டமில்லாது போனாலும், இசையை முறையாகப் பயின்று 1942ல் பல்வேறு சோதனைகளை, தடைகளை வென்று முதன்முறையாக பி.யூ.சின்னப்பா அவர்கள் கதாநாயகனாக நடித்த "மனோன்மணி" திரைப்படத்தின் மூலம் கல்யாணம் என்ற இசையமைப்பாளருடன் இணைந்து இசையமைத்து, தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆனார்.

K.V.மகாதேவன் அவர்களின் தனித்தன்மை, கர்நாடக இசை அடிப்படையில், பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்களின் இயல்பான திறனை சுதந்திரமாக வெளிப்படுத்தும் வண்ணம் பாடல்களை உருவாக்கியதாகும்.

இசையைக் கேட்போரின் மனதில் அவர்களின் வாழ்க்கை நினைவலைகளைத் தூண்டிவிட்டு, அதுவே காலத்தால் அழியாத காவியப் பாடல்களாக கேட்பவர்கள் வாழும் காலம் வரை, மனதில் இருந்து ஆட்சி செய்யும் பரவசமிக்க ஆளுமை கொண்ட செந்தமிழ்ப் பாடல்களின் பிதாமகன் K.V.மகாதேவன் அவர்கள்.

கர்நாடக சங்கீதம் எனும் மரபிசையில் மெல்லிசையைக் கலந்து காலப் போக்குக்கு ஏற்ற வண்ணம் இன்னிசையை வழங்கியவர் இசை அரசர் K.V.மகாதேவன்.

இன்றைய தலைமுறையினருக்கு K.V.மகாதேவன் யாரென்றுத் தெரிய வேண்டுமென்றால், நாம் வாழும் காலத்தின் இசைஞானி என்று கொண்டாடப்படும் இளையராஜா அவர்களின் மானசீக குருநாதர் என்று போற்றப்படும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் மானசீக குருநாதர்தான் திரை இசைத் திலகம் K.V.மகாதேவன் அவர்கள்.

K.V.மகாதேவன் அவர்களின் திரை இசை கால கட்டம்தான், தமிழ்த் திரையுலகில் மெல்லிசையின் ஆரம்பம் மற்றும் விசுவரூபம் எனலாம். தமிழ்த் திரையுலகை அடக்கி ஆண்ட பாடும் திறன் கொண்ட நடிகர்களின் ஆளுமையிலிருந்து மெல்ல விலகி, சமூகக் கருத்துள்ள புதிய எழுத்தாளர்களின் வரவால், சாமானியரும் நடிகராக, வாய்ப்புகள் கிடைத்த புரட்சி மிக்க காலத்தில், K.V.மகாதேவன் அவர்களின் ஜீவனுள்ள இன்னிசையே, புதியவர்களின் வெற்றிக்கு எல்லாம் மூல காரணமாக அமைந்தது என்பதை வரலாறு நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.

K.V. Mahadevan- Legend of Tamil melodies!!

திரை இசைத் திலகம் K.V.மகாதேவன் அவர்களின் இன்னிசையில் கருத்தாழமிக்க பாடல்கள் மூலம், சிறந்த கவிஞர்களாக உருவெடுத்தோர் ஏராளம். கர்நாடக சங்கீத வித்வான்கள் பலர் K.V.மகாதேவன் மெல்லிசையில் பாடியிருக்கின்றனர்.

எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி அவர்களுக்கு காலத்தால் அழியாதப் பாடல்கள் பல தந்த இசை மேதை, திரை இசைத் திலகம் K.V.மகாதேவன் அவர்கள்.

திருவருட் செல்வரில் வரும் "மன்னவன் வந்தானடி தோழி" ஒன்றே போதும் K.V.மகாதேவன் அவர்களின் இசை ஆளுமையை அறிய. அன்றைய கால, இளம் உள்ளங்களின் காதல் கீதம் அது.

நெஞ்சை விட்டு நீங்காத K.V.மகாதேவன் மற்ற சில பாடல்களைக் காண்போமா?

கந்தன் கருணை

- சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்..

அறுபடை வீடு கொண்ட திருமுருகா!

மனம் படைத்தேன்...

வெள்ளி மலை மன்னவா..

இந்த அற்புத இசைக்காக, சிறந்த திரை இசைக்காக முதன் முதலில் வழங்கப்பட்ட தேசிய விருது 1967ல் பெற்றார்.

இருவர் உள்ளம் [ பறவைகள் பலவிதம், நதி எங்கே போகிறது ]

படிக்காத மேதை [ ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு, உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன் ].

தில்லானா மோகனாம்பாள் [ மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன.. ], திருவிளையாடல் [ பாலமுரளிகிருஷ்ணா குரலில், ஒரு நாள் போதுமா ], வசந்த மாளிகை [ மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன ] அடிமைப்பெண் [ ஆயிரம் நிலவே வா, தாயில்லாமல் நானில்லை ] ,

தாய் சொல்லை தட்டாதே [ சிரித்து சிரித்து என்னை , போயும் போயும் மனிதருக்கு இந்த ], குங்குமம் [ மயக்கம் எனது தாயகம், சின்னஞ்சிறிய வண்ணப்பறவை, குங்குமம் மங்கள மங்கையர் குங்குமம், பூந்தோட்ட காவல்காரா ],

தாய்க்குப் பின் தாரம் [ மனுசனை மனுஷன் சாப்பிடறாண்டா, அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ, ஆஹா நம் ஆசை நிறைவேறுமா. ]. 

ஏணிப்படிகள் [ பூந்தேனில் கலந்து, கண்ணிழந்த பிள்ளைக்கு ]

K.V. Mahadevan- Legend of Tamil melodies!!

மற்றும், சொல்லடி அபிராமி, சத்தியமே லட்சியமாய் கொள்ளடா, மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏறு பூட்டி, ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா, ஆசையே அலை போலே, கங்கைக்கரை தோட்டம் கன்னிப்பெண்கள் கூட்டம், உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு, கோமாதா எங்கள் குலமாதா, பச்சை மா மலை போல் மேனி, திருமகள் தேடி வந்தாள் போன்ற காலத்தை வென்ற பாடல்கள், திரை இசைத்திலகம். K.V.மகாதேவன் அவர்களின் இன்னிசையில் உருவானவையே..

இவற்றிற்கு எல்லாம் சிகரம் வைத்தது போல, K.V.மகாதேவன் அவர்களின் திரை இசைப் பயணத்தில் ஒரு மைல் கல், திரை இசையில், கர்நாடக சங்கீதத்தின் உச்ச படைப்பாகக் கருதப்படும், சங்கராபரணம்! திரை இசைத் திலகம் K.V.மகாதேவன் அவர்களுக்கு இரண்டாவது முறையாக தேசிய விருது பெற்றுக்கொடுத்த திரைப்படம்.

முழுக்க முழுக்க தெலுங்கு கீர்த்தனைகள் மற்றும் தெலுங்கு மொழியில் உருவான பாடல்களை, அந்தப் பாடல்களைக் கேட்கும் வேற்று மொழியோரையும், தன் மனதை மயக்கும் இன்னிசையில், உருகி இரசிக்க வைத்த இசை வித்தகர் K.V.மகாதேவன் அவர்கள் தெலுங்கு மொழி அறியாதவர் என்பது, அவரின் இசைப் புலமைக்கு காலத்தால் அழியாத ஒரு நற்சான்று.

"இசைக்கு, மொழி என்றுமே ஒரு தடையல்ல" என்பதை உலகிற்கு கட்டியம் இட்டுக் கூறிய திரையிசைக் காவியமன்றோ, சங்கராபரணம்!

கர்நாடக சங்கீத இசையை அறியாதவர் கூட, சங்கராபரணம் திரைப்பட பாடல்களை இரசித்து, அந்த இன்னிசையில் மெய்மறக்க வைத்த பாடல்கள், தேசமெல்லாம் பட்டி தொட்டி எங்கும் பாமரரையும் பரவசப்படுத்திய பாடல்கள் அவை எல்லாம், K.V.மகாதேவன் அவர்களின் ஒரு அற்புத மெல்லிசை விருந்து.

"ஓம்கார நாதானு சந்தான மவ்கானமே", "மானச சஞ்சரரே", "ராகம் தாளம் பல்லவி", "சங்கரா நாத சரீராபரா" உள்ளிட்ட காலத்தை வென்று நிற்கும் இசைப் படைப்புகள் அவை!

தேசிய அளவில் சிறந்த இசை அமைப்பாளருக்கான முதல் விருதை 1967ல் "கந்தன் கருணை" படத்திற்காக பெற்றவர். பிறகு காலத்தால் அழியாத கர்நாடக சங்கீத இசைக் காவியம் "சங்கராபரணம்" திரை இசைக்காக, 1979ல் மறுமுறை பெற்றவர் K.V.மகாதேவன் அவர்கள்.

K.V. Mahadevan- Legend of Tamil melodies!!

தமிழ் மட்டுமல்லாது, மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல்லாயிரம் பாடல்களுக்கு இசையமைத்த இசை மேதை K.V.மகாதேவன் அவர்கள், தன்னுடைய 83 ஆம் வயதில் 2001 ஆம் ஆண்டு, சென்னையில் காலமானார்.

அவரின் நினைவு நாள் கடந்த ஜூன் மாதம் 21 ஆம் தேதி ஆகும்.

கர்நாடக சங்கீதத்தின் அடிநாதம் பிறழாமல், இராகங்களின் அடிப்படையில், ஜனரஞ்சக ஈர்ப்பிலான திரை இசை மூலம் தமிழ் நெஞ்சங்களில் என்றென்றும் வாழும் மெல்லிசை சகாப்தம் திரை இசைத் திலகம் K.V.மகாதேவன் அவர்களின் இன்னிசை, இந்த தேசம் எங்கும் நிறைந்திருக்கும், தத்துவப்பாடல்களாக!, வாழ்க்கைப் பாடமாக!!

English summary

K.V. Mahadevan- Legend of Tamil melodies!!

K.V. Mahadevan- Legend of Tamil melodies!!
Story first published: Friday, July 28, 2017, 19:00 [IST]
Subscribe Newsletter