For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செல்லங்களுக்கு வெயில் ஒத்துக்காது, பத்திரமா பாத்துக்கங்க!

By Mayura Akilan
|

Pet Care
கோடை கால பராமரிப்பு என்பது நமக்கு மட்டுமல்ல, நம் செல்லப் பிராணிகளுக்கும் மிகவும் அவசியமான ஒன்று. கோடை காலத்தில் அவைகளுக்கு வெப்ப அதிர்ச்சியும்,சுவாச அலர்ஜியும், சரும நோய்களும் ஏற்படலாம். உங்கள் செல்லப் பிராணிகளின் நடவடிக்கைகள் மற்றும் உணவுப் பழக்கம் ஆகியவற்றில் சின்ன அளவில் மாறுதல் தோன்றினாலும் உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகவும். செல்லப்பிராணிகளை கோடை காலத்தில் பராமரிக்க கால்நடை மருத்துவர்கள் கூறியுள்ள ஆலோசனைகளை பின்பற்றவும்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாய்கள் கடும் கோடையினால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

வெப்ப அதிர்ச்சி நோய்

கருப்பு நிறமுடைய உரோமம் அதிகமுள்ள நாய் இனங்களுக்கு நம்மைப் போல அதிகம் வியர்ப்பதில்லை. அவைகள் நாக்கைத் தொங்க விட்டுக் கொண்டு மூச்சிரைத்து வெப்பக் காற்றை வெளியேற்றி குளிர் காற்றை உள்ளிழுத்து தங்கள் உடல் சூட்டைக் குறைத்துக் கொள்ள முடியும். இதன் காரணமாகவே இந்தச் செல்லப் பிராணிகள் கோடை காலத்திலும், வறட்சி காலத்திலும் வெப்ப அதிர்ச்சி நோயால் பாதிக்கப்படுகின்றன.

சுவாசக் கோளாறுகள்

புல் டாக், பாக்ஸர் போன்ற சில நாய் இனங்களுக்கு முகம் தலையில் சற்று பின் தள்ளி அமைந்திருக்கும். இவைகளுக்கு இயற்கையிலேயே சுவாசக் குழாய் குறுகலாக இருக்கும். அதனால் வெப்பத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்வது இவைகளுக்குச் சற்று கடினம். இவைகளின் பாதங்களிலும், மூக்கிலும் சிறிதளவு வியர்வை உண்டாகலாம். ஆனால் இது உடல் சூட்டைக் குறைக்காது. இந்த காலத்தில் நாய்கள் சோம்பலாய் உட்கார்ந்திருக்கும். மற்ற சமயங்களில் இருப்பது போல சுறுசுறுப்பாக இருக்காது. அதுவும் சிறிது வயதான, எடை அதிகம் கொண்ட, இதயம் மற்றும் சுவாச உறுப்பு நோய் இவற்றால் பாதிக்கப்பட்ட நாய்கள் கோடை வெப்பத்தால் அதிக துன்பத்திற்கு ஆளாகின்றன.

கோடை காலம் கவனம்

கோடைக் காலத்தில் இவற்றால் வழக்கம் போல் உடற்பயிற்சி செய்யவும் முடியாது. உங்கள் செல்லப் பிராணிகளை கோடை காலத்தில் மிகவும் பத்திரமாகப் பார்த்துக் கொள்வது அவசியம். உடற்பயிற்சி செய்யக் கட்டாயப்படுத்த வேண்டாம். கடும் வெயில் நேரத்தில் அவைகள் வீட்டிற்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். பொதுவாக நாய்களின் உடல் வெப்பம் 102.5 டிகிரி இருக்கும். கடும் கோடையினால் வெப்பம் அதிகமாகி 106 டிகிரிக்கும் அதிகம் போய்விட்டால் நினைவு இழந்து மரணம் சம்பவிக்கக்கூடும். அதனால் கடும் வெய்யிலில் வெளியில் அழைத்துச் செல்ல வேண்டாம். காலை இளம் வெய்யிலில் அதாவது காலை 7.30 மணிக்குள்ளும் மாலை 6 மணிக்குப் பிறகும் உங்கள் செல்லப் பிராணியை வெளியில் அழைத்துச் செல்லுங்கள்.

மருத்துவம் அவசியம்

கோடை காலத்தில் உங்கள் செல்லப் பிராணிகளை கூடுதல் கவனத்துடன் கண்காணிப்பது நல்லது. பருவ நிலை மாறுதலால் அவற்றின் சருமத்தில் சிறு சிறு புண்கள் ஏற்படலாம். சில சமயங்களில் சளி, இருமலினால் ஒவ்வாமை நோயும், சுவாச நோயும் உண்டாகலாம்.

செல்லப் பிராணிகளின் குட்டிகளை மிகவும் அக்கறையுடன் கவனிக்கவும். ஆறு மாதத்திற்கும் குறைவான குட்டிகளுக்கு குடல் தோற்று நோய் ஏற்பட்டு அதன் காரணமாக வயிற்றுப் போக்கும், வாந்தியும் ஏற்படலாம் இதுபோன்ற தருணங்களில் கால்நடை மருத்துவரை அணுகவும்.

நீர்ச்சத்து உணவுகள்

குளிர்ந்த நீர் நிறையக் குடிக்கச் செய்வதன் மூலம் உங்கள் செல்லப் பிராணிகளின் உடலில் உள்ள நீர் வற்றாமல் பார்த்துக் கொள்ளலாம்.

கோடையில் நாய்களின் பசிக்கும் திறன் குறைந்துவிடும். எனவே உலர் உணவுகளைத் தவிர்த்து நீர் நிரம்பிய உணவுகளைக் கொடுக்கவும். தர்பூசணி, சப்போட்டா போன்ற பழங்கள், வைட்டமின் சி, டி நிரம்பிய உணவு வகைகளைக் கொடுக்க வேண்டும். சிறிய குட்டி நாய்களுக்கு பசும்பாலை விட ஆட்டுப்பாலை கொடுக்கலாம். இதனால் வயிற்றுப்போக்கு ஏற்படுவது தடுக்கப்படும்.

குளிர்ச்சியாக வைத்திருங்கள்

செல்லப்பிராணிகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் குளிர்ந்த நீரில் குளிப்பாட்டலாம். மதிய நேரத்தில் குளிர்ந்த நீரில் நன்றாக நனைக்கப்பட்ட ஒரு துணியை அவற்றின் உடலைச் சுற்றி கட்டுவதனால் வெப்பம் தாக்காமல் பாதுகாக்கலாம்.

English summary

Summer Pet Care Tips | செல்லங்களுக்கு வெயில் ஒத்துக்காது, பத்திரமா பாத்துக்கங்க!

Summer is a time for both you and your pet to enjoy the sunshine and outdoors, but along with the fun, the season also offers up situations that can endanger your pet. By taking precautions, you can decrease the chance that disaster will happen.
Story first published: Tuesday, March 27, 2012, 16:44 [IST]
Desktop Bottom Promotion