வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க..

Mosquito Repellent Plants In Tamil: மழைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டின் சென்னை மற்றும் பிற பகுதிகளில் நாளுக்கு நாள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுவும் இந்த காய்ச்சலுக்கு பெரும்பாலும் டெங்கு தான் காரணமாகவும் இருந்து வருகிறது. டெங்கு காய்ச்சலானது கொசுக்கள் மூலம் பரவக்கூடியது. ஏடிஸ் வகை கொசுக்கள் தான் இந்த டெங்கு காய்ச்சலை பரப்பி வருகின்றன. எனவே கொசுக்களைக் கட்டுப்படுத்துவது என்பது மிகவும் முக்கியம்.

Keep These Mosquito Repellent Plants In Balcony To Get Rid Of Mosquitoes Naturally

அதுவும் மாலை நேரத்திலேயே கொசுக்கள் படையெடுத்து தாக்குகின்றன. இந்த கொசுக்களை அழிக்க எத்தனையோ கொசு விரட்டிகள் கடைகளில் விற்கப்படுகின்றன மற்றும் அவற்றை நிறைய பேரும் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கெமிக்கல் கலந்த கொசுவிரட்டிகளை அதிகம் பயன்படுத்தினால், அது சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்துவதால், இயற்கை வழிகளின் மூலம் கொசுக்களை கட்டுப்படுத்த நினைக்கின்றனர். அப்படி நீங்களும் இயற்கை வழியில் கொசுக்களை கட்டுப்படுத்த நினைக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டின் பால்கனியில் ஒருசில செடிகளை வளர்ப்பதன் மூலம் கொசுக்கள் வராமல் தடுக்கலாம். இப்போது அந்த செடிகள் என்னவென்பதை காண்போம்.

1. துளசி

துளசி மிகவும் புனிதமான செடி. இந்த துளசி செடி வீட்டில் இருந்தால் கொசுக்கள் உள்ளே நுழைவதற்கான வாய்ப்புக்கள் குறைவு. ஏனெனில் கொசுக்களுக்கு துளசி இலைகளின் வாசனை பிடிக்காது. எனவே இந்த துளசி செடியை கொசுக்கள் நுழையும் இடத்திற்கு அருகில் வையுங்கள். இதனால் கொசுக்கள் வீட்டிற்குள் நுழைவது குறைந்திருப்பதைக் காணலாம். மேலும் துளசி செடியை வீட்டில் வளர்ப்பதன் மூலம் நேர்மறை ஆற்றல் வீட்டில் அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது.

2. புதினா

நல்ல வலுவான நறுமணமிக்க புதினா கொசுக்களை வீட்டிற்குள் வரவிடாமல் தடுக்கும். அதற்கு ஒரு புதினா செடியை கொசுக்கள் நுழையும் ஜன்னலுக்கு அருகில் வைத்து வளர்க்கலாம் அல்லது புதினாவை அரைத்து பேஸ்ட் செய்து, அதை கொசுக்கள் நுழையும் இடத்தில் வைக்கலாம். இப்படி வைப்பதன் மூலம் புதினாவின் வலுவான நறுமணம் கொசுக்களை வீட்டிற்குள் நுழையாமல் தடுக்கும்.

3. சாமந்தி பூ

சாமந்திப் பூக்கள் மிகவும் அழகாக இருப்பதோடு, இதன் நறுமணம் கொசுக்களுக்கு பிடிக்காது. எனவே இந்த செடியை தொட்டியில் வைத்து வளர்க்கலாம். இல்லாவிட்டால் அந்த பூக்களை கொசுக்கள் நுழையும் பகுதிகளான ஜன்னல் மற்றும் பிரதான கதவுகளுக்கு அருகில் வையுங்கள். இதனால் கொசுக்கள் வீட்டிற்குள் நுழையாமல் இருக்கும்.

பிற வழிகள்

* உங்கள் அறையில் கொசுக்கள் அதிகம் இருந்தால், ஒரு கிண்ணத்தில் நீரை நிரப்பி, அதில் சில கற்பூர வில்லைகளை போட்டு வையுங்கள். இதனால் அதன் வலுவான வாசனை கொசுக்களை விலக்கி வைக்கும்.

* வேப்பிலைகளை எரிப்பது அல்லது வேப்ப எண்ணெயை பயன்படுத்துவன் மூலமும் கொசுக்களின் எண்ணிக்கையை குறைக்கலாம். ஏனெனில் வேப்பிலையின் வாசனை கொசுக்களுக்கு பிடிக்காது.

* முக்கியமாக கொசுக்களானது நீர் தேங்கி பகுதி, குப்பைகள் மற்றும் ஈரப்பதமான இடங்களில் இனப்பெருக்கம் செய்யும். எனவே தினமும் வீட்டையும், வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தம் செய்து, சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி சுத்தமாக வைத்துக் கொண்டாலே கொசுக்களை தடுக்கலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Tuesday, September 22, 2026, 19:42 [IST]
Desktop Bottom Promotion