ஒருவருக்கு மாரடைப்பு வந்தால் செய்ய வேண்டியது என்ன? - விளக்குகிறார் டாக்டர். ஃபரூக்..!

Heart Attack In Tamil: உலகளவில் மாரடைப்பால் ஏராளமானோர் மரணத்தை சந்தித்து வருகிறார்கள். இந்த மாரடைப்பு ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். எனவே இதயம் தொடர்பான பிரச்சனைகளைக் கொண்டவர்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் மாரடைப்பு வந்தால், உடனே முதலுதவியைக் கொடுத்து, மருத்துவமனைக்கு விரைவில் அழைத்து செல்வதன் மூலம் மரணத்தை தடுக்கலாம்.

இன்னும் நிறைய பேருக்கு மாரடைப்பு வந்தால் என்ன செய்வது என்று தெரிவதில்லை. சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் டாக்டர்.அ.ப.ஃபரூக் அப்துல்லா தனது முகநூல் பக்கத்தில் ஹார்ட் அட்டாக் வந்தால் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.

What To Do If Someone Has A Heart Attack Explained By Dr Farooq

அதில் அவர் கூறியதாவது: "இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை அளிக்கும் மூன்று முக்கிய தமனிகளில் அடைப்பு ஏற்படுவதை இதய ரத்த நாள அடைப்பு ( MYOCARDIAL INFARCTION) என்கிறோம். இதய ரத்த நாள அடைப்பு என்பது அவசர நிலையாகும். ரத்த நாள அடைப்பு ஏற்பட்ட நொடியில் இருந்து அடைப்புக்குள்ளான அந்த குறிப்பிட்ட தமனியால் ஊட்டம் பெறும் இதயத்தின் தசைப்பகுதி செல்கள் வேகமாக இறக்க ஆரம்பிக்கின்றன.

நாம் இதை அவசர நிலையாகக் கருதி உடனடியாக ரத்த நாள அடைப்பை சரிசெய்யாவிடில் இதயத்தின் பெரும்பகுதி தசைகள் இறந்து அதனால் இதயத்தின் ரத்தத்தை உந்தும் ஆற்றல் குறைந்து இதயம் செயலிழந்து மரணம் சம்பவிக்கும். அல்லது காலம் முழுவதும் இறந்த இதயத் தசைகளை வைத்துக் கொண்டு செயல்குன்றிய இதயத்தை வைத்துக் கொண்டு வாழ வேண்டியிருக்கும்.

அறிகுறிகள்

இடது பக்க நெஞ்சுப் பகுதியில் உள்ளிருந்து குடைவதைப் போல அதீத வலி ஏற்பட்டாலோ, இடப்பக்க நெஞ்சு வலி இடப்பக்க தோள் பகுதி வரை, தாடை வரை, இடப்பக்க நெஞ்சின் பின் பகுதி, கழுத்துப் பகுதி வரை வலி பரவலாம். சில நேரங்களில் நெஞ்சுப்பகுதியில் வாயுக்குத்து போல வலி ஏற்படக்கூடும். வாந்தி, குமட்டல், வயிற்று வலி என்று ஃபுட் பாய்சனிங்கின் அறிகுறிகள் போலவும் தோன்றலாம். இவையன்றி

* மூச்சு விடுவதில் சிரமம்
* மூச்சுத் திணறல்
* தலைசுற்றல் / பதட்டம் / படபடப்பு
* முழுவதும் மயக்கமடைதல் போன்ற அறிகுறிகளுடன் இதய ரத்த நாள அடைப்பு வெளிப்படக்கூடும்.

மேற்கூறிய அறிகுறிகள் தோன்றியவுடன் அவசர சிகிச்சை பிரிவிற்கு சென்று ஈசிஜி (ELECTRO CARDIOGRAM) எனும் இதயத்தின் மின்இயங்குவியல் வரை படத்தைப் பார்த்து இதய ரத்த நாள அடைப்பை கண்டறிய முடியும் . எனினும் ஹார்ட் அட்டாக் வந்த சிலருக்கு ஈசிஜி நார்மலாக இருக்கும். அறிகுறிகள் அனைத்தும் இதய ரத்த நாள அடைப்பை விளக்கும் விதமாக இருக்கும். இவர்களுக்கு ட்ரோபோனின் (TROPONIN) எனும் நொதியை அளக்கும் பரிசோதனை செய்யப்படும். இதயத்தின் தசைகள் காயத்துக்கு உள்ளாவதை ட்ரோபோனின் அதிகரிப்பை வைத்து அறிய முடியும்.

இதய ரத்த நாள அடைப்பு ஏற்பட்டிருப்பதை நவீன இதய மீட்பு சிகிச்சை வசதிகள் இல்லாத கிளினிக்குகள் / ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற இடங்களில் கண்டறியப்படும் வாய்ப்பே அதிகம். அதுவரை ரத்த நாள அடைப்பை கரைக்கும் வண்ணமாய் LOADING DOSE எனப்படும் ரத்த உறைதலை மட்டுப்படுத்தச் செய்யும்

ஆஸ்பிரின்(ASPIRIN) மாத்திரை 325 மில்லிகிராம் அளவு
+
க்ளோபிடோக்ரெல் (CLOPIDOGREL) 300 மில்லிகிராம் அளவு
+
அடோர்வாஸ்டாட்டின்(ATORVASTATIN) 80 மில்லிகிராம்

என்ற மூன்று மாத்திரைகளையும் உட்கொள்ள வேண்டும். இந்த மாத்திரைகள் ரத்தக் கட்டியை மேலும் உறைந்து கட்டிப்படாமல் பார்த்துக் கொள்ளும். இதன் விளைவாக இதயத்தின் தசைகள் இறக்காமல் காத்திட முடியும்.

இதய ரத்த நாள அடைப்பு ஏற்பட்ட நொடியில் இருந்து முதல் மூன்று மணிநேரங்களுக்குள் நவீன இதய மீட்பு சிகிச்சை இருக்கும் மருத்துவமனையை அடைந்தால் ரத்தக்கட்டியை கரைக்கும் மருந்தை (THROMBOLYSIS) சிரை வழியாக செலுத்தி அடைப்பைக் கரைக்க முடியும். இது முதல் மூன்று மணிநேரங்களுக்குள் நவீன சிகிச்சை கிடைக்கும் ஐசியூ வசதி உள்ள மருத்துவமனைகளுக்கு சென்றால் மட்டுமே கிடைக்கும்.

ஸ்ட்ரெப்டோகைனேஸ், ஆல்டெப்லேஸ், டெனெக்டெப்லேஸ் போன்ற மருந்துகள் ரத்த கட்டியை கரைக்கும் தன்மையுடன் செயல்படும். அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் போன்றவற்றை மூன்று மணிநேரங்களுக்குள் அடைவது மூலம் ரத்த நாள அடைப்பை நீக்கும் THROMBOLYSIS சிகிச்சை பெற முடியும்.

நவீன கேத் லேப் எனப்படும் இதய அவசர சிகிச்சை கிடைக்கும் மருத்துவமனைகளுக்கு செல்லும் போது தோல் வழி கேதிட்டர் எனும் நெழிவுத்தன்மை கொண்ட குழாய் சிரை வழியாக செலுத்தப்படும். இதயத்தின் அடைபட்ட ரத்த நாளத்திற்கு சென்றதும் இந்த கேதிட்டரின் முனையில் இருக்கும் பலூன் ஊதப்படும். இதனால் ரத்த நாள அடைப்பு எடுக்கப்படும். அங்கே ஸ்டெண்ட் எனும் எஃகினால் செய்யப்பட்ட கருவி பொருத்தப்படும்.

இந்த ஸ்டெண்ட்டில் இருந்து மேற்கொண்டு ரத்த கட்டியோ கொழுப்பு கட்டியோ உருவாகாத படி சிறிய அளவில் மருந்து உமிழப்பட்டுக் கொண்டே இருக்கும். இதை PRIMARY PERCUTANEOUS INTERVENTION என்று அழைக்கிறோம்.

ஹார்ட் அட்டாக் வந்தால் முதல் மூன்று மணிநேரத்திற்குள் இதய அவசர சிகிச்சை செய்யத்தகுந்த மருத்துவமனையை அடைய வேண்டும். லோடிங் டோஸ் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். ஹார்ட் அட்டாக் மரணங்களில் பெரும்பான்மை மரணங்கள் சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்காததால் நிகழ்வதாகவே இருக்கின்றன. எனவே இதை கவனத்தில் கொண்டு உடனே செயல்படுவோம், உயிர்களைக் காப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மாரடைப்பு வராமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்:

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் ஆரோக்கியமான கொழுப்புக்கள் நிறைந்த எண்ணெய் ஆகும். இதில் இதயத்திற்கு பாதுகாப்பளிக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இவை இரத்த நாளங்களை பாதுகாக்கும். உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். எனவே மாரடைப்பு போன்ற இதய நோய் வரக்கூடாதெனில், சமையலில் ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்துங்கள்.

வால்நட்ஸ்

ஒரு கையளவு வால்நட்ஸை தினடும் உட்கொண்டு வந்தால், அது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். மேலும் இது இதய தமனிகளில் அழற்சிகள் ஏற்படுவதைத் தடுக்கும். ஏனெனில் வால்நட்ஸில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நல்ல கொழுப்புக்களான மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், தாவர வகை ஸ்டெரால்கள் மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகம் நிறைந்துள்ளன. எனவே இந்த வால்நட்ஸை தினமும் உணவில் சேர்த்து வர இதய நோய்களைத் தடுக்கலாம்.

பாதாம்

நட்ஸ்களில் ஒன்றான பாதாம் மிகவும் சத்தானது. தினமும் பாதாமை உட்கொண்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும். ஏனெனில் இதில் தாவர வகை ஸ்டெரால்கள், நார்ச்சத்து மற்றும் இதயத்திற்கு நன்மை விளைவிக்கும் கொழுப்புக்கள் அதிகம் உள்ளன. எனவே தினமும் பாதாமை உட்கொண்டு வாருங்கள்.

ஆரஞ்சு

நல்ல ஜூஸியான ஆரஞ்சு பழங்களில் கொழுப்புக்களை எதிர்க்கும் நார்ச்சத்தான பெக்டின் உள்ளது. மேலும் இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆய்வு ஒன்றில், ஒரு நாளைக்கு 2 கப் ஆரஞ்சு சாறு அதிக எடை கொண்ட நோயாளிகளில் டயஸ்டாலிக் இரத்த அழுத்தத்தைக் குறைத்தது. எனவே இதய நோயைத் தடுக்க ஆரஞ்சு பழத்தை அதிகம் உட்கொள்ளுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion