ஜலதோஷம் மற்றும் ஃப்ளூ பற்றிய 7 தகவல்கள்!!!

By Karthikeyan Renganathan

மழைக்காலம் என்றாலே ஜலதோஷம் மற்றும் ஃப்ளூ காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு தயாராக இருப்பது அவசியம். அதுமட்டுமின்றி அது தொடர்பான அடிப்படை விஷயங்களை தெரிந்து வைத்திருப்பதும் மிக அவசியம் அல்லவா.!

அதற்கு பேப்பர் மற்றும் டி.வியில் தொற்று வியாதிகள் தொடர்பான செய்திகளை கவனமாக பார்க்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் பகுதியில் ஏதேனும் இதுப்போன்ற பரவலான நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும். எனவே இது போன்ற செய்திகளை தவறாமல் கவனிக்க வேண்டும். இங்கு ஜலதோஷம் மற்றும் ஃப்ளூ பற்றிய ஒருசில தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

7 Surprising Facts About Colds & Flus

ஒரு ‘சின்ன' விஷயத்தை செய்ய மறக்க வேண்டாம்.

அது வேறு ஒன்றுமில்லை - உங்கள் கைகளை அவ்வப்போது சுத்தமாக கழுவிக்கொள்வதுதான்!. 20 நொடிகளுக்கு நன்கு இரண்டு கைகளையும் தேய்த்து கழுவவேண்டும். ஜலதோஷம் மற்றும் ஃப்ளூ காய்ச்சல் போன்றவை நம் கைகளில் ஒட்டிக்கொள்ளும் கிருமிகள் வழியாகத்தான் அதிகம் பரவுகின்றன.

உடற்பயிற்சி கூட ஜலதோஷம் மற்றும் காய்ச்சலை விரட்டும் தெரியுமா?!

உடலுழைப்போ அல்லது உடற்பயிற்சியோ சீராக மேற்கொண்டு வரும் பட்சத்தில் நமது உடலுக்கு தேவையான எதிர்ப்புச்சக்தி கிடைத்துவிடுகிறது. அது மட்டுமன்றி ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் போன்றவை வந்தாலும் எளிதில் குணமடைந்துவிடும் வலிமை உடலுக்கு வாய்க்கிறது. எனவே உடற்பயிற்சி என்பது ஒரு நோய்த்தடுப்பு மருந்தும்கூட என்பதை மறந்துவிடக்கூடாது. (அதற்காக சளிபிடித்து காய்ச்சல் அடிக்கும்போது பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொள்ள புறப்படக்கூடாது)

ஃப்ளூ காய்ச்சலை லேசாக நினைக்காதீர்கள்!

1918 மற்றும் 1919ம் ஆண்டுகளில் சுமார் 50 மில்லியன் மக்கள் அதாவது அப்போதைய மொத்த உலக மக்கள் தொகையில் 3-5 சதவீதம் பேர் ‘ஸ்பானிஷ் ஃப்ளூ' எனும் நோயால் மாண்டு போயினர். இந்த எண்ணிக்கையானது 20ம் நூற்றாண்டில் நிகழ்ந்த போர்களில் மாண்டவர்களைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஃப்ளூ காய்ச்சல் என்பதை ஒரு பயங்கரமான தோற்று நோய் என்றே சொல்லலாம். தற்போதைய நவீன மருத்துவ யுகத்தில் இதுபற்றி அந்த அளவுக்கு மிரள வேண்டியதில்லை என்றாலும், இப்போதும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நோய் தொற்றுக்கு பலியாகின்றனர். கடந்த 30 வருடங்களில் அமெரிக்க நாட்டில் 3000 முதல் 49000 மக்கள் இறந்துள்ளனர்.

ஜலதோஷத்தை ஏற்படுத்தும் கிருமியானது 6 அடி சுற்றளவில் பரவும் சக்தி கொண்டது!

ஜலதோஷமோ அல்லது ஃப்ளூ காய்ச்சலோ உள்ள ஒருவரிடமிருந்து நீங்கள் 6 அடி சுற்றளவில் இருந்தாலே போதும், அந்த நோய் உங்களுக்கும் தொற்றுவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே அவர்களிடமிருந்து இந்த 6 அடி தூரத்தில் தள்ளி இருப்பது நல்லது.

மூக்கை ‘சிந்த' ஒரு முறை இருக்கிறதா?

உண்மையில் அப்படி ஏதுமில்லை. இருந்தாலும் ஜலதோஷத்தால் மூக்கு அடைபட்டிருக்கும் போது, ஒரு மூக்கை அழுத்திக் கொண்டு மற்றொன்றால் மெதுவாக சிந்த வேண்டும். கன்னாபின்னாவென்று மூக்கை உதறி அழுத்தி இழுத்து துடைத்து சரி செய்ய நினைத்தால், பிரச்சனை இன்னும் அதிகமாகி காது வலியில் சென்று முடியும்.

ஃப்ளூ தடுப்பூசி போட்டிருந்தாலும் ஃப்ளூ காய்ச்சல் வரக்கூடும்!

ஆமாம். அது உண்மைதான். நாம்தான் தடுப்பூசி போட்டுக்கொண்டோமே - நமக்கு வராது என்று அலட்சியமாக இருக்கக்கூடாது. அதே சமயம், எல்லாம் ஒன்றுதானே என்று தடுப்பூசி போடாமலும் இருக்கக்கூடாது.

பாட்டி வைத்தியம் மற்றும் இயற்கை வைத்தியம் போன்றவையே நல்லது!

சிலது பலனளிக்கும் சிலது பலனளிக்காமல் போகலாம் என்பதுதான் உண்மை. பொதுவாக வைட்டமின் சி மற்றும் சிக்கன் சூப் போன்றவை இந்த வியாதிகளுக்கு ஏற்றவையாக சொல்லப்படுகிறது. நம்ம ஊர் மருத்துவ பாரம்பரியம் இந்த வகையில் ஒரு நீண்ட பட்டியலையே வைத்திருக்கிறது. பலவகை கஷாயங்கள், ஆவி பிடிப்பது என்று ஏராளம் இருக்கின்றன. அவற்றில் நம்மால் முடிந்ததை நமக்கு ஏற்றதை மட்டும் முயற்சிக்கலாம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Tuesday, December 10, 2013, 23:47 [IST]
Desktop Bottom Promotion