ஆண்களை விட பெண்களுக்கு ஏன் சிறுநீர்ப்பாதை தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது தெரியுமா?

UTI In Tamil: நமது உடலில் மிகவும் முக்கியமான பணியை சற்றும் ஓய்வின்றி செய்யக்கூடிய ஒரு உறுப்பு தான் சிறுநீரகங்கள். இப்படிப்பட்ட சிறுநீரகங்களில் தொற்றுக்கள் ஏற்படுவற்கான அபாயம் அதிகம் உள்ளன.

குறிப்பாக பலர் அடிக்கடி சிறுநீர்ப் பாதை தொற்றால் அவதிப்படுவார்கள். இதை சரியாக கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், நாளடைவில் அது சிறுநீரகம் வரை பரவி, நிலைமையை மோசமாக்கிவிடும்.

Why Are Women More Prone To Urinary Tract Infections Than Men In Tamil

மேலும் ஆண்களை விட பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர்ப் பாதை தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதுக்குறித்து சிவகங்கை அரசு மருத்துவமனை பொது நல மருத்துவர் டாக்டர் ஃபரூக் அப்துல்லா தனது சமூக வலைத்தள பக்கத்தில் விரிவாக கூறியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, பொதுவாக நீர்க்கடுப்பு என்று கூறப்படும் அறிகுறி சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் கிருமித் தொற்றால் ஏற்படுவதாகும். அது என்ன சிறுநீர்ப்பாதை? நமது உடலில் ரத்தத்தை வடிகட்டி உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் தேவையற்ற விஷயங்களை வெளியேற்றும் வேலையை சிறுநீரகங்கள் 24 X 7 ஓய்வின்றி செய்து வருகின்றன.

நமக்கிருக்கும் இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றில் பத்து லட்சம் என மொத்தம் இருபது லட்சம் நெஃப்ரான்கள் (நுண்ணிய ரத்த வடிகட்டிகள்) இருக்கின்றன. அதில் இருந்து உருவாகும் சிறுநீர், அங்கிருந்து தொடங்கும் யூரிடர் எனப்படும் இரண்டு சிறுநீர்க் குழாய்கள் மூலம் சிறுநீர்ப்பையை வந்தடைகின்றன. சிறுநீர்ப்பையில் சிறுநீர் சிறிது சிறிதாக சேகரிக்கப்படும்.

சிறுநீர்ப்பை என்றால் என்ன?

சிறுநீர்ப்பை என்பது சுருக்குப் பை என்று கற்பனை செய்து கொள்ளலாம். அதன் கொள்ளளவை எட்டியதும் நமக்கு மூளையில் இருந்து அலாரம் அடிக்கும் "ஏலேய் உடனே கழிப்பறை சென்று கடமையை நிறைவேற்று" என்று சமிக்ஞை செய்யும்.

கழிப்பறை சென்று சிறுநீர் கழிக்க தயாரானதும் அந்த சுருக்குப்பை போன்ற தசை அமைப்பு லேசாக சுருக்கை அவிழ்க்கும். சிறுநீர் மடை திறந்த வெள்ளம் போல சிறுநீர்ப்பையில் இருந்து வெளியேறி யூரித்ரா எனும் வெளியேற்றக் குழாய் வழியே வெளியேற்றப்படும்.

இத்தகைய அமைப்பை "சிறுநீர்ப்பாதை" என்கிறோம். இந்தப் பாதையில் ஏற்படும் கிருமித் தொற்றை "சிறுநீர்ப்பாதை தொற்று" என்று அழைக்கிறோம். இதில் இந்த வெளியேற்றக் குழாயும், சிறுநீர்ப்பையும் தொற்று கண்டால் அது கீழ் சிறுநீர்ப்பாதை தொற்று. அதுவே சிறுநீர்க் குழாய் மற்றும் சிறுநீரகங்களில் தொற்று ஏற்படுவது மேல் சிறுநீர்ப்பாதை தொற்றாகும்.

கீழ் சிறுநீர்ப்பாதையில் தொடங்கும் தொற்றை கவனிக்காமல் விட்டால் அது மெல்ல மேலேறி சிறுநீரகங்கள் வரை செல்லும் தன்மை கொண்டதாக இருக்கிறது. பொதுவாக நம்மைப் போன்ற பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள வெப்ப மண்டல நாடுகளில் உடலில் வியர்வை மிக அதிகமாக வெளியேறும்.

எனவே நீர் அருந்துவது சரியாக பராமரிக்கப்பட வேண்டும். சரியாக நீர் அருந்தாமல் விட்டால் சிறுநீரின் நீர்ப்புத்தன்மை குறைந்து விடும். இதனால் கிருமித் தொற்று ஏற்படும் நிலை உருவாகும்.

நீர்க்கடுப்பு என்றால் என்ன?

சிறுநீர் கழிக்கும் போது லேசான வலி, எரிச்சல் தோன்றுவது, சிறுநீர் கழித்து முடிக்கும் தருவாயில் அடிவயிற்றில் கனமாக கவ்வுவது போன்ற வலி ஏற்படுவதை நம் பகுதிகளில் "நீர்க்கடுப்பு" என்கிறோம்.

பொதுவாக இந்த நிலையில் நீர்ச்சத்தை அதிகரிப்பது, இளநீர், பழச்சாறுகள், எலுமிச்சை சாறு அருந்துவது போன்றவற்றை செய்தால் சரியாகும். எனினும் பலர் பயணங்களில் சிறுநீர் கழிக்கும் இச்சை தோன்றினாலும், சரியான நேரத்தில் சிறுநீர் கழிக்க மாட்டார்கள்.

குறிப்பாக பெண்கள் சரியான சுத்தமான கழிப்பறை வசதி இருக்காது என்பதால் சரியாக தண்ணீரும் அருந்த மாட்டார்கள். சிறுநீரையும் அடக்கி வைப்பார்கள். இதனாலேயே சிறுநீர்த் தொற்றுக்கு அதிகமாக ஆளாவார்கள்.

கூடவே பெண்களின் சிறுநீர்ப்பாதை வெளியே சென்று முடியும் இடத்தின் அருகிலேயே இனப்பெருக்க உறுப்பான யோனியும் முடியும். அதற்கு வெகு அருகில் ஆசன வாயும் உள்ளது.

அதுபோக பெண்களின் சிறுநீர்ப்பாதை ஆண்களின் சிறுநீர்ப்பாதையை விட குறிப்பாக யூரித்ரா எனும் சிறுநீர் வெளியேற்றக் குழாயின் நீளம் சிறியதாக இருப்பதால் ஆண்களை விட பெண்களுக்கு சிறுநீர்ப்பாதை தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது

எவ்வாறு சிறுநீர்ப்பாதை தொற்றை ஏற்படாமல் தடுப்பது?

* ஆண்களைப் பொருத்தவரை கட்டாயம் ஒருநாளைக்கு இரண்டு லிட்டர் சிறுநீர் - அதிலும் வெளிர் மஞ்சள் நிறத்தில் செல்லுமாறு 3 முதல் 4 லிட்டர் நீர் அருந்த வேண்டும். சிறுநீர் கழிக்கும் இச்சையை அடக்கி வைப்பது தவறு.
* முதியோரில் புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்துக்கு முறையான சிகிச்சை எடுக்க வேண்டும். கேதிடர் எனும் செயற்கை சிறுநீர்க் குழாய் போடப்பட்டிருந்தால் அதை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையேனும் மாற்றிவிட வேண்டும்.
* பெண்களைப் பொருத்தவரை, பொதுக் கழிப்பிடங்களில் இந்தியன் டைப் கழிப்பறைகளில் குதப்பகுதி நேரடியாக கழிப்பறையில் படாதவாறு சிறுநீர் கழிப்பது தொற்று ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கும்.
* வெஸ்டர்ன் டைப் கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டிய நிலை வந்தால் டாய்லெட் பேப்பர் / நியூஸ் பேப்பர் போன்றவற்றை விரித்து அதில் அமர்ந்து சிறுநீர் கழிக்கலாம்.
* கையில் ஆல்கஹால் சானிடைசர் ஸ்ப்ரே கொண்டு சென்று கழிக்க அமரும் இடத்தில் அடித்து பின் அமரலாம்.
* பொதுக்கழிப்பறையில் உள்ள நீரைக் கழுவ பயன்படுத்தாமல் வெட் வைப்ஸ் வைத்து சிறுநீர்ப்பாதையை சுத்தம் செய்து முறையாக அதை அப்புறப்படுத்தலாம்.
* கழிப்பறையில் இருந்து வெளியே வந்ததும் கைகளை சானிடைசர் கொண்டு சுத்தமாக கழுவி விட வேண்டும்.
* மலம் கழிக்கும் போது ஆசன வாயை முன்பக்கத்தில் இருந்து பின்பக்கம் நோக்கி கழுவ வேண்டும். ஆசன வாயில் தொடங்கி முன்பக்கம் நோக்கி கழுவினால் மலத்தில் இருக்கும் சில கிருமிகள் சிறுநீர்ப்பாதை மற்றும் இனப்பெருக்கப் பாதைக்குள் புகுந்து பிரச்சனையை ஏற்படுத்தக் கூடும்.
* உடலுறவு கொள்வதற்கு முன்னும் பின்னும் கட்டாயம் சிறுநீர் கழிக்க வேண்டும். சிறுநீர் கழித்த பின் சில டம்ளர் நீர் அருந்துவது நல்லது.
* வல்வா எனும் பெண்ணுறுப்பை கட்டாயம் சோப் / கிருமி நாசினி போன்றவற்றை உபயோகப்படுத்தி சுத்தப்படுத்தக் கூடாது. அந்தப் பகுதிக்கென்றே பிரத்யேகமாக நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளன. உபயோகிக்கும் சோப் /சாம்பூ போன்றவை அந்த பாக்டீரியாக்களை இல்லாமல் செய்து தீங்கு விளைவிக்கும் தொற்றுகள் ஏற்பட வழிவகுத்துவிடும்.

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

அடிக்கடி சிறுநீர்ப்பாதை தொற்று ஏற்படும் நிலையில் துணைக்கு கிருமித் தொற்று இருக்கிறதா என்பதை அறிந்து அதை குணப்படுத்த வேண்டும்.
- சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் /வலி/ கடுப்பு
- சிறுநீர் குறைவாக செல்லுதல்
- குளிர் நடுக்கத்துடன் காய்ச்சல்
- அடிவயிற்று வலி போன்றவை முக்கிய அறிகுறிகள்
மேற்சொன்ன அறிகுறிகள் தோன்றினால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion