Latest Updates
-
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்!
Summer Eye Health: கோடையில் சந்திக்கும் கண் பிரச்சனைகளை தடுப்பது எப்படி? - விளக்கும் டாக்டர்!
Eye Problems During Summer In Tamil: சென்னையில் கடந்த சில வாரங்களாகக் கடுமையான கோடைகால வெப்பமும், அதிகப்படியான ஈரப்பதமும் நிலவி வருகிறது. இந்த மோசமான வானிலையால் ஏற்படும் அசௌகரியங்களுடன், கண் ஒவ்வாமை (Eye allergy), கண் வறட்சி (Dryness), எரிச்சல், கண் சிவத்தல், அரிப்பு, கண்ணீர் வடிதல் மற்றும் கண் சோர்வு (Eye strain) போன்ற புகார்களுடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள கிளெனீகிள்ஸ் மருத்துவமனையின் கண் மருத்துவரான டாக்டர் இ. ரவீந்திர மோகன் தமிழ் போல்ட் ஸ்கையிடம் கூறினார். மேலும் கோடையில் சந்திக்கும் கண் தொடர்பான பிரச்சனைகளைத் தடுப்பதற்கான சில எளிய தடுப்பு முறைகள் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது, "அதிகப்படியான வெப்பமும் வறண்ட வானிலையும், கண்களைப் பாதுகாக்கும் இயற்கையான கண்ணீர் படலத்தைப் (Tear film) பாதிக்கலாம். கண்ணீர் வேகமாக ஆவியாவதால் கண் எரிச்சல், உறுத்தல், கண் சிவத்தல் போன்ற கண் வறட்சிக்கான அறிகுறிகள் ஏற்படுகின்றன. நீண்ட நேரம் வெயிலில் இருப்பது, சுடான காற்று மற்றும் ஏசி-யை அதிகப்படியாகப் பயன்படுத்துவது ஆகியவை இந்த நிலையை மேலும் மோசமாக்கலாம்." என்று கூறினார்.
கண் ஒவ்வாமை
"கோடைகாலத்தில் ஏற்படும் முக்கியமான கண் பிரச்சனை கண் ஒவ்வாமை ஆகும். மகரந்தத் துகள்கள் (Pollen), தூசி, புகை போன்ற ஒவ்வாமையைத் தூண்டும் காரணிகளுடன் கண்கள் தொடர்பு கொள்ளும் போது கண் ஒவ்வாமை ஏற்படுகிறது. இவை கண்களில் வீக்கத்தையும், வலியையும் உண்டாக்குகின்றன. வெப்பமான காலநிலையில் தூசி மற்றும் காற்றில் பரவும் பிற ஒவ்வாமை காரணிகள் அதிகரிக்கும் என்பதால், எளிதில் பாதிப்படையக்கூடிய நபர்களுக்கு இது ஒவ்வாமை எதிர்வினைகளைத் தூண்டுகிறது." என்றும் டாக்டர் கூறினார்.
கண் ஒவ்வாமை அறிகுறிகள்
"கண் ஒவ்வாமையின் பொதுவான அறிகுறிகளில் அரிப்பு, எரிச்சல், கண் சிவத்தல், கண் இமை வீக்கம், கண்ணீர் வடிதல், கண்களில் பீளை தள்ளுதல் மற்றும் அடிக்கடி கண்களைத் தேய்த்தல் ஆகியவை அடங்கும். குறிப்பாகக் குழந்தைகள், கான்டாக்ட் லென்ஸ் (Contact lens) பயன்படுத்துபவர்கள், ஏற்கனவே ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் நீண்ட நேரம் வெளியில் நேரத்தைச் செலவிடுபவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.
மேலும், கோடை விடுமுறை மற்றும் வீட்டுக்குள்ளேயே இருக்கும் சமயங்களில், கணினி மற்றும் மொபைல் திரைகளைப் பார்க்கும் நேரம் (Screen time) அதிகரிப்பதால் டிஜிட்டல் கண் சோர்வு (Digital eye strain) ஏற்படுகிறது. மொபைல் மற்றும் லேப்டாப்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், கண் சிமிட்டும் வேகம் குறைகிறது. இதனால் கண்ணீர் மேலும் ஆவியாகி, கண் வறட்சியை மோசமாக்குவதுடன் கண் சோர்வையும் ஏற்படுத்துகிறது." என்று டாக்டர் கூறினார்.
கோடையில் சந்திக்கும் கண் தொடர்பான பிரச்சனைகளைத் தடுப்பதற்கான வழிகள்:
* "வெளியூர்களுக்கு அல்லது வெளியில் செல்லும் போது புற ஊதாக்கதிர் (UV) பாதுகாப்பு கொண்ட சூரியக் கண்ணாடிகளை (Sunglasses) அணியுங்கள்.
* போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலை எப்போதும் நீரேற்றத்துடன் (Hydrated) வைத்திருங்கள். வயது முதிர்ந்தவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஏசி உள்ள அறைகளில் பணிபுரிபவர்களுக்குத் தாகம் எடுக்காமல் போகலாம். எனவே அவர்கள் போதுமான அளவு திரவ ஆகாரங்களை அருந்துவதை ஒரு வழக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும். இதற்கு சாதாரண குடிநீரை விட சிறந்தது வேறு எதுவும் இல்லை.
* அடிக்கடி கண்களைத் தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
* தூசி நிறைந்த சூழலில் செல்லும் போது பாதுகாப்புக் கண்ணாடிகளைப் பயன்படுத்துங்கள்.
* வேலை அல்லது விளையாட்டை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிய பின், முகத்தைச் சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவ வேண்டும்.
* கண்களில் வலியோ அல்லது கடுமையான அரிப்போ ஏற்பட்டால், குளிர்ந்த குடிநீரால் கண்களைக் கழுவுவதும், மூடிய கண் இமைகளின் மேல் ஐஸ் ஒத்தடம் (Ice compresses) கொடுப்பதும் நல்ல பலனைத் தரும்.
* முக்கியமாக மருத்துவ ஆலோசனையின்றி மருந்தகங்களில் நேரடியாகக் கண் சொட்டு மருந்துகளை (Over-the-counter eye drops) வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்." என்று கூறினார்.
மொபைல், லேப்டாப்களை நீண்ட நேரம் பயன்படுத்தும் போது கண் சோர்வு மற்றும் வறட்சியைத் தடுக்க செய்ய வேண்டியவை:
* "கணினித் திரைக்கான "20-20-20" விதியைப் பின்பற்றுங்கள் - அதாவது, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை, திரையைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு, 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை 20 விநாடிகளுக்குப் பாருங்கள்.
* திரைகளைப் பயன்படுத்தும் போது அடிக்கடி கண்களைச் சிமிட்டுங்கள். பொதுவாக ஒரு நிமிடத்திற்கு 10-15 முறை கண் சிமிட்டுவது இயல்பானதாகும்.
கண்களில் ஏற்படும் சிவத்தல் அல்லது எரிச்சலுக்குத் தற்காலிக நிவாரணம் பெற, பலர் மருத்துவ ஆலோசனையின்றி ஏதேனும் ஒரு கண் சொட்டு மருந்தைப் பயன்படுத்த முனைகிறார்கள். ஆனால், சில கண் சொட்டு மருந்துகளைத் தகுந்த ஆலோசனையின்றி நீண்ட காலம் பயன்படுத்துவது, பாதிப்பை மேலும் மோசமாக்குவதோடு, சரியான நோயறிதலைத் தாமதப்படுத்தவும் கூடும். எனவே, தொந்தரவு தரும் கண் அறிகுறிகளைச் சரியாகக் கண்டறிந்து, உடனடி சிகிச்சை பெற ஒரு கண் மருத்துவ நிபுணரின் (Ophthalmologist) பரிசோதனை மிகவும் அவசியமாகும்." என்று டாக்டர் கூறினார்.
எனவே நண்பர்களே! கோடைகாலத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதும், சரியான நேரத்தில் மருத்துவ உதவியைப் பெறுவதும் கண் பிரச்சனைகளிலிருந்து நம்மைக் காக்க பெரிதும் உதவும் என்பதை உணர்ந்து, கண் தொடர்பான பிரச்சனைகளை சற்றும் புறக்கணிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications



