காலையில் இந்த அறிகுறிகள் தெரிஞ்சா அசால்ட்டா இருக்காதீங்க.. மாரடைப்பைத் தூண்டும் 'ஹை பிபி' இருக்குன்னு அர்த்தம்

High Blood Pressure Symptoms: தற்போதைய அவசரமான மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையினால், நிறைய பேர் இரத்த அழுத்த பிரச்சனையை சந்திக்கிறார்கள். இரத்த அழுத்த பிரச்சனையில் இரண்டு வகைகள் உள்ளன. இவை இரண்டுமே ஆபத்தானது தான். அதுவும் உயர் இரத்த அழுத்த பிரச்சனையானது ஒரு சைலண்ட் கில்லர். அதாவது அமைதியாக இருந்து ஆளைக் கொல்லக்கூடியது.

ஏனெனில் இதன் அறிகுறிகள் ஆரம்பத்தில் அதிகம் தெரியாது. அப்படியே தெரிந்தாலும், அது தினசரி சந்திக்கும் பிரச்சனைகளைப் போன்றே இருக்கும். இதனால் பலரும் இந்த அறிகுறிகளை புறக்கணிக்கக்கூடும். மேலும் மருத்துவர்களின் கூற்றுப்படி, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பெரும்பாலானோருக்கு எந்த அறிகுறிகளும் தெரியவதில்லை. எனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளதா என்பதை பரிசோதனை மூலம் மட்டுமே உறுதிபடுத்த முடியும்.

High Blood Pressure Symptoms Top 5 Early Morning Signs Of Hypertension In Tamil

முக்கியமாக சமீப காலமாக உலகளவில் பெரும்பாலானோர் உயர் இரத்தஅழுத்தம் காரணமாக மாரடைப்பு தூண்டப்பட்டு இறப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே 30 வயதை எட்டியதுமே ஒவ்வொருவரும் தங்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்தி, சீரான இடைவெளியில் பரிசோதனைகளை மேற்கொள்வது, ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றுவது மற்றும் தினசரி உடற்பயிற்சியில் ஈடுபடுவது போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற முயற்சிக்க வேண்டும்.

உயர் இரத்த அழுத்தத்திற்கு என்று எந்த ஒரு முக்கியமான அறிகுறிகள் வெளிப்படாவிட்டாலும், பொதுவாக உடலில் எந்த ஒரு பிரச்சனை இருந்தாலும், அது ஒருசில சிக்னல்களை வெளிப்படுத்தும். அதுவும் உயர் இரத்த அழுத்தம் இருப்பின், காலையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நீங்களும் அந்த பிரச்சனைகளை காலை வேளையில் சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

1. மங்கலான பார்வை

நீண்ட காலமாக உயர் இரத்த அழுத்தம் இருப்பதை கண்டுபிடிக்காமல் இருந்தால், ஒரு கட்டத்தில் கண்களுக்கு செல்லும் இரத்தக்குழாய்கள் மெதுவாக சேதமடையத் தொடங்கி, பார்வை மங்கலாக தெரியத் தொடங்கும். எனவே திடீரென்று உங்களுக்கு இரண்டாக தெரியத் தொடங்கினாலோ, பார்வை மங்கலாவதை உயர்ந்தாலோ, உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் உடனே மருத்துவரை அணுக வேண்டும். உடனடி சிகிச்சையை மேற்கொள்ளாமல் இருந்தால், அது நிரந்தமாக பார்வையை இழக்க வைத்துவிடும்.

2. மூக்கில் இருந்து இரத்தக்கசிவு

உயர் இரத்த அழுத்தம் இருந்தால் மூக்கில் இருந்து இரத்தம் கசிவது என்பது மிகவும் அரிதான நிகழ்வு. நீண்ட காலமாக உயர் இரத்த அழுத்த பிரச்சனையை கொண்டிருந்து அதற்கு சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால், மூக்கில் உள்ள சிறிய இரத்தக்குழாய்கள் எளிதில் உடைந்து, இரத்தக்கசிவை உண்டாக்கக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

3. மிகுந்த தாகம்

உங்களால் இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்ள முடியாமல், அடிக்கடி விழிக்கிறீர்களா? அதுவும் காலையில் தாகம் அதிகமாக எடுத்தால், உடனே இரத்த அழுத்தத்தை பரிசோதிக்க வேண்டும். மருத்துவர்களின் கூற்றுப்படி, சோடியம் நிறைந்த உணவுகள், அதாவது உப்புள்ள உணவுகள் தான் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் அதிக தாகத்தை ஏற்படுத்தும். உப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளும் போது, அது இரத்தத்தின் அடர்த்தியை அதிகரிக்கும் மற்றும் இரத்த நாளங்களை சுருங்கச் செய்யும். இதன் விளைவாக குறுகிய குழாய்களில் இரத்தம் அதிகமாக தள்ளப்படும். இது இப்படியே நீடித்தால், பின் அது ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்திவிடும்.

4. வாந்தி மற்றும் குமட்டல்

காலையில் எழுந்ததும் வாந்தி அல்லது குமட்டல் உணர்வை சந்திக்கிறீர்களா? அப்படியானால் உயர் இரத்த அழுத்தம் இருக்க வாய்ப்புள்ளது. எப்போது ஒருவரது உடலில் இரத்த ஓட்ட அளவு அதிகரிக்கிறதோ, அப்போது அந்நபர் மிகுந்த பதட்டமடைவதோடு, மிகுந்த சோர்வை உணர்வார் மற்றும் வாந்தி வருவது போன்ற உணர்வை சந்திப்பார். எனவே இந்த அறிகுறி தெரிந்தால், தாமதிக்காமல் உடலை பரிசோதனை செய்யுங்கள்.

5. உடல் சோர்வு

நிபுணர்களின் கூற்றுப்படி, மிகுந்த உடல் சோர்வானது உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறியாகும். ஏனெனில் உயர் இரத்த அழுத்தமானது சிறுநீரகங்களில் உள்ள சிறிய இரத்தக்குழாய்களை சேதப்படுத்துகிறது. இதன் விளைவாக சிறுநீரக நோய் மற்றும் சிறுநீரகங்களில் நச்சுக்கள் அதிகம் குவிந்து, மிகுந்த உடல் சோர்வை உண்டாக்குவதோடு, வீங்கிய கணுக்கால், கால்கள், கைகள், சரும அரிப்பு போன்ற அறிகுறிகளையும் உண்டாக்கும். எனவே இந்த அறிகுறிகளை சந்தித்தால் அசால்ட்டாக இருக்காதீர்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Monday, August 5, 2024, 11:54 [IST]
Desktop Bottom Promotion