For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொன்னிறம் தரும் புங்கை பால்!

By Mayura Akilan
|

Pungai Tree
புங்கை மரத்தின் தாயகம் இந்தியா. குறிப்பாக தென்னிந்தியாவில் இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலேயே இவை தோன்றியிருக்க வேண்டும் என்று தாவரவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவிலிருந்து இந்த மரம் தென்கிழக்கு ஆசியாவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும், ஹவாய்க்கும், அமெரிக்காவில் உள்ள புளோரிடாவிற்கும் இந்த மரம் பரவியிருக்கிறது.

ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் மூங்கிலுக்கு அடுத்து புங்க மரம்தான். எந்தப் பகுதியிலும், எத்தகைய சீதோஷ்ண நிலையிலும் வளரக்கூடியவை. அதிக நிழலை தரக்கூடியது. பசுமை படர்ந்த மரமாக காட்சியளிக்கும். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படும். சாலை ஓரங்களில் நிழல் தரவும், மண் அரிப்பைத் தடுக்கவும் புங்கை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. புவி வெப்பமயமாதலை தடுக்கும் தன்மையுள்ள மரங்களில் புங்க மரமும் ஒன்று. வெப்பத்தின் தன்மையை உறிஞ்சி சீரான சீதோஷ்ண நிலையை ஏற்படுத்தும் குணம் இதற்கு உண்டு. புங்கை மரத்தின் மலர்கள், விதைகள், இலைகள், பட்டை,வேர் போன்றவை மருத்துவ பயன் உடையவை.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

விதை, எண்ணெய், மலர்கள்,இலைகள், தண்டுப்பட்டை, ஆகியவற்றில் இருந்து பல ரசாயனப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. கருஞ்சின்,பொன்காப்பின்,பொன்காக்ளாப்ரோன்,பொன்கால்,கரஞ்சாக்ரோமின்,கனுகின்,நீயோக்ளாப்ரின் போன்றவை.

நோய் எதிர்ப்பு சக்தி

புங்கன் கிருமிகளை அகற்றி உடலைத் தேற்றும் குணம் உடையது. புங்கன் இலையைக் குடிநீரிட்டு குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்த கணத்திற்குக் கொடுக்கலாம்.

புங்கன் இலையை நீரில் போட்டுக் கொதிக்க வைத்து அதை குளித்து வந்தாலும் அல்லது ஒற்றடமாக கொடுத்து வந்தாலும் கீல் வாத நோய்கள் கட்டுப்படும். புங்கன் இலைச்சாற்றை வயிறு பொருமலுக்கும், கழிச்சலுக்கும் குறிப்பிட்ட அளவு உள்ளுக்குக் கொடுக்க குணம் தெரியும். புங்கன் இலையை அரைத்து ரத்த மூலத்திற்குப் பற்றிடலாம்.

இலைகளின் சாறு, இருமல், வாயுக்கோளாறு, அஜீரணம்,பேதி ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாகும்.கஷாயம் பெரி-பெரி நோயை குணப்படுத்தும்.

புங்கமரத்தின் பால் புண்களையும், வாய்வையும் நீக்கும் தன்மை கொண்டது. உடலுக்கு பொன்போன்ற நிறத்தைக் கொடுக்கும். இந்த பாலை புண்களுக்குப் போட்டு வந்தால் விரைவில் அவை ஆறும்.

நீரிழிவை குணமாக்கும் மலர்கள்

மலர்கள் நீரிரிழிவு நோய்க்கு மருந்தாகும். நீரிழிவு நோயினருக்கு அதிக தாகம் ஏற்படும். இதற்கு புங்கம் பூவை கசாயமிட்டு அருந்தி வரலாம்.

புங்கன் பூவை தேவையான அளவுஎடுத்துக் கொண்டு சிறிது நெய் விட்டு வறுத்து இடித்துப் பொடிசெய்து 500 மி.கி. முதல் 1 கிராம் வீதம் உண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மேக நோய்கள் குணமாகும் புளிப்பு, வாயு பதார்த்தங்களை இச்சமயம் நீக்க வேண்டும்.

பூவை நிழலில் உலர்த்தி நெய்யில் வறுத்துப் பொடி செய்து 1 சிட்டிகை காலை, மாலை 2 அல்லது 3 மண்டலம் தேனில் கொள்ள மதுமேக ரணங்கள் தீரும். புகை, போகம், புளி, மீன் கருவாடு நீக்கவும்.

புண்களை ஆற்றும் விதைகள்

விதைகளின் பொடி கக்குவான் இருமலுக்கு நல்லது. எண்ணெய் அஜீரணத்துடன் கூடிய ஜுரத்தை குணப்படுத்தும். தோல் நோய்களுக்கு புறப்பூச்சு மருந்தாகப் பயன்படும். புழுவைத்த புண்களை ஆற்றும்.

புங்கம் விதையிலிருந்து குழித்தைல முறைப்படி எடுக்கப்பட்ட எண்ணெயை குறிப்பிட்ட அளவு உள்ளுக்கும், மேலும் பூசி வர மேகம், பாண்டு முதலிய நோய்கள் குணமாகும். நரை,திரை,மூப்பு நீங்கி இளமையோடு நீண்ட காலம் வாழலாம்.

சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் கக்குவான் இருமலுக்கு புங்கன் விதைப் பொடியை தேனுடன் கலந்து 1 முதல் 5 அரிசி எடை அளவு கொடுக்க குணம் தரும். இதையே தேள் கடி நஞ்சுக்கும் உண்டால் அவ்விஷம் முறியும்.

வேரில் எடுக்கப்படும் சாறு ஆழமான புழுவைத்த புண்களை ஆற்றும், பற்களை சுத்தப்படுத்தவும்,ஈறுகளை வலுப்படுத்தவும் பயன்படும். புங்கன் வேரை காடியில் அரைத்து விதை வீக்கத்திற்கு பற்றிட்டு வர வீக்கம் குறையும். புங்கன் வேர்ப் பட்டையைப் பொடி செய்து 500 மி.கி. வீதம் மூன்று வேளை உட்கொண்டு வந்தால் இருமல், ஈளை முதலியவை குணமாகும்.

பயோடீசலாகும் விதை

புங்கன் எண்ணெயிலிருந்து தற்பொழுது பயோடீசல் தயார் செய்து வாகனம் மற்றும் ஆயில் இஞ்ஜின்களுக்கு உபயோகப்படுத்தி வருகிறார்கள். இந்த ஆயிலைப் பிரிக்கும் போது கிளசரின் மற்றும் மெத்தனால் கிடைக்கின்றது. இந்த ஆயில் சோப்பு செய்யப் பயன்படுத்தப் படுகிறது. அதன் புண்ணாக்கு பயிர்களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுத்துகிறார்கள்.

English summary

Medicinal benefits of Indian beech tree | பொன்னிறம் தரும் புங்கை பால்!

Indian Beech tree is widely spread over all parts of India. It is very commonly seen in Central Himalayas. Extending from South India Indian Beech is widely seen in Sri Lanka also. Oil is extracted from roots, stem, leaves, fruits and seeds of this herbal plant.The herbal oil cures skin diseases, scabies, sores, herpes and eczema.The oil is taken for assisting digestion(stomachic) and very useful for those who have indigestion problem.
Story first published: Friday, August 19, 2011, 11:22 [IST]
Desktop Bottom Promotion