காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்!

Foods To Eat Empty Stomach In Tamil: காலையில் எழுந்ததும் வெறும் சாப்பிடும் உணவுகள் நமது உடலில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் தான் காலையில் எழுந்ததும் சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டியது அவசியம். சொல்லப்போனால் காலையில் இப்படி நல்ல சத்தான உணவுகளை உண்ணும் போது, அது செரிமானம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல் என அனைத்திற்கும் நல்லது.

Doctor Lists Top 15 Best Foods To Eat On An Empty Stomach In The Morning

ஆனால் வாட்ஸ் அப், சமூக வலைத்தளங்களில் காலையில் இத சாப்பிடுங்க, காலையில் அத சாப்பிடுங்க என்று சில தவறான உணவுகள் பகிரப்பட்டு வருகின்றன. இது தெரியாமல், அதை உண்மை என நம்பி நிறைய பேர் அதை பின்பற்றுகிறார்கள். எனவே மக்களின் நலனுக்காக டாக்டர் கார்த்திகேயன் அவர்கள் தனது சமூகவலைத்தள பக்கத்தில் சித்த மருத்துவம் மற்றும் நவீன அறிவியல் உண்மைகளைக் கொண்டு காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய 15 உணவுகள் குறித்து பகிர்ந்துள்ளார். அந்த உணவுகள் பின்வருமாறு:

1. வெதுவெதுப்பான நீர்

காலையில் எழுந்ததும் இந்த வெதுவெதுப்பான நீரைத் தான் முதலில் குடிக்க வேண்டும். ஏனெனில் இரவு முழுவதும் நீர் குடிக்காமல் இருந்ததால், உடல் தண்ணீர் இல்லாமல் இருந்திருக்கும். எனவே காலையில் எழுந்ததும் அதை முதலில் சரிசெய்ய வேண்டும். அதுவும் வெதுவெதுப்பான நீரை குடிக்கும் போது, அது செரிமான அக்னியை தூண்டி, செரிமானத்தை சீராக்கும். வெந்நீர் குடித்தால், கொழுப்பு குறையும் என்று சொல்வார்கள். ஆனால் அதற்கு வலுவான ஆதாரங்கள் எல்லாம் எதுவும் இல்லை என்று டாக்டர் கூறினார்.

2. துளசி

காலையில் எழுந்ததும் துளசி இலையை மென்று சாப்பிடுங்கள். இல்லாவிட்டால் நீரில் போட்டு குடியுங்கள். துளசி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் இது இரத்த சர்க்கரை மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுவதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளன. எனவே இந்த இலையை காலையில் மென்று சாப்பிடுவது ஒரு நல்ல பழக்கம்.

3. கறிவேப்பிலை

காலையில் எழுந்ததும் 4-5 கறிவேப்பிலையை மென்று சாப்பிடும் போது, அது உடலின் செரிமான சக்தியை அதிகரிக்கவும், இரும்புச்சத்து ஹீமோகுளோபினை அதிகரிக்கவும் உதவுகிறது. உணவில் ஒதுக்கி வைக்கும் கறிவேப்பிலையை காலையில் எழுந்ததும் மென்று சாப்பிட்டால், உடலுக்கு பல வகையில் நன்மையைத் தரும். முக்கியமாக தலைமுடிக்கு மிகவும் நல்லது.

4. சீரக நீர்

இரவு 1 ஸ்பூன் சீரகத்தில் ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்ததும், அந்நீரை வடிகட்டி குடிக்கலாம். இது வாயு, அஜீரணம், வயிற்று உப்புசம் போன்றவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கும். சொல்லப்போனால் சித்த மருத்துவத்தில் இது செரிமான பிரச்சனைகளுக்கு மருந்தாக பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் உடல் எடை மற்றும் கொழுப்பை குறைக்க கூட உதவுவதாக ஆரம்பகட்ட ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளன.

5. இஞ்சி நீர்

ஒரு சிறிய துண்டு இஞ்சியை வெந்நீரில் போட்டு காலையில் எழுந்ததும் குடிக்கும் போது குமட்டல், வாந்து போன்ற உணர்வுகளை தடுக்கும். ஆனால் அல்சர் மற்றும் அசிடிட்டி உள்ளவர்கள் இந்நீரை குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

6. மோர்

தயிர், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து செய்யக்கூடிய மோர் காலையில் எழுந்ததும் குடிக்க ஏற்ற அற்புதமான பானம். இது வயிற்றை குளிர்விக்கும் மற்றும் செரிமானத்திற்கும் நல்லது. இதில் உள்ள நல்ல பாக்டீரியாவான ப்ரோபயாட்டிக் கிருமிகள் குடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. ஆனால் அசிடிட்டி உள்ளவர்களால் இதை குடிக்க முடியாது. அத்தகையவர்கள் காலை உணவுக்கு பின் குடிக்கலாம்.

7. முளைக்கட்டிய பச்சை பயிர்

முளைக்கட்டிய பச்சை பயறை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. இந்த பயறுகளில் புரதம், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து உள்ளது. ஆனால் வயிற்று உப்புசம் உள்ளவர்கள், வயதானவர்கள் வேக வைத்து சாப்பிடுவது நல்லது.

8. ஊற வைத்த கொண்டைக்கடலை

இரவு முழுவதும் கொண்டைக்கடலையை நீரில் ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் புரோட்டீன், நார்ச்சத்து மற்றும் சர்க்கரையை மெதுவாக ஏற்றும் தன்மை கொண்டது. குறைவான கிளைசீமிக் இன்டெக்ஸ் கொண்டது.

9. ஊற வைத்த பேரிச்சம்பழம்

இரவு 2-3 பேரிச்சம் பழத்தை நீரில் ஊற வைத்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொண்டால், இரும்புச்சத்தும், நார்ச்சத்தும் கிடைக்கும். ஆனால் சர்க்கரை நோயாளிகள் இதைத் தவிர்க்க வேண்டும். வேண்டுமானால் 1 பேரிச்சம்பழம் சாப்பிடலாம்.

10. ஊற வைத்த கருப்பு உலர் திராட்சை

நீரில் ஊற வைத்த கருப்பு உலர் திராட்சையில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை அதிகம் உள்ளன. மேலும் இது ஒரு மலமிளக்கியாகவும் செயல்படக்கூடியது. எனவே மலச்சிக்கல் உள்ளவர்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும் போது நல்ல பலன் கிடைக்கும். ஆனால் இதிலும் சர்க்கரை அதிகம் இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் அளவாக எடுக்கலாம்.

11. பப்பாளி

காலையில் ஒரு கப் பப்பாளி சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் நார்ச்சத்து மற்றும் பப்பாயின் அதிகம் உள்ளது. இது வயிறு மற்றும் குடல் சுத்தத்திற்கு நல்லது என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

12. முருங்கை இலை சூப்

இந்த சூப்பை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் எடுப்பது நல்லது. நல்ல சத்தான பானம். இரத்த சோகைக்கு அற்புதமான மருந்து. நீரிழிவுக்கு முந்தைய நிலையில் இருப்பவர்களுக்கு இந்த சூப் மிகவும் நல்லது. முழுமையா சர்க்கரை நோயா அது மாறாம தடுக்க கூடியது. அதற்கு பல ஆராய்ச்சி ஆதாரங்களும் உள்ளன.

13. நெல்லிக்காய்

காலையில் எழுந்ததும் நெல்லிக்காயை சாப்பிடுவது நல்லது. நெல்லிக்காயானது மூன்று தோஷத்தையும் சமன் செய்யக்கூடியது. ஆய்வுகளிலும் நெல்லிக்காய் கொலஸ்ட்ரால், சர்க்கரை அளவு போன்றவற்றை குறைக்க உதவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

14. வெந்தய நீர்

1 ஸ்பூன் வெந்தயத்தை இரவு நீரில் ஊற வைத்து காலையில் எழுந்ததும் நீருடன் அந்த வெந்தயத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது. முக்கியமாக இது சர்க்கரை அளவைக் குறைக்க பெரிதும் உதவும்.

15. ஊற வைத்த பாதாம்

இரவு தூங்கும் முன் 4-6 பாதாமை நீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. ப்ரீ டயாபெட்டிஸ் உள்ளவர்களுக்கு பாதாம் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் பாதுகாக்கும். மேலும் இது எடை இழப்புக்கும், கொழுப்பை குறைக்கவும் உதவுவதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாகவும் டாக்டர் கார்த்திகேயன் கூறினார்.

எனவே நண்பர்களே! இதுவரை உங்களுக்கு காலையில் எந்த மாதிரியான உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் என்பது தெரியாமல் இருந்திருந்தால், இனி தெரிந்து கொண்டு, அவற்றை உட்கொண்டு நன்மை பெறுங்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Thursday, September 17, 2026, 14:21 [IST]
Desktop Bottom Promotion