Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள்

Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் புண்ணியம் நிறைந்த மாதம். இந்த மாதத்தில் சூரியன் ஆறாவது வீடான கன்னி ராசியில் சஞ்சரிப்பார். இந்த மாதம் முழுக்க விரத நாட்கள்தான். புரட்டாசி மாத கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் கன்னி ராசியில் சூரியன் புதனோடு இணைந்துள்ளார். செவ்வாய் குரு உடன் இணைந்து பயணம் செய்கிறார். சுக்கிரன் ஆட்சி பெற்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.

Purattasi Matha Rasi Palan 2026 Predictions For 12 Zodiac Signs By Astrologer Jeyalakshmi

புரட்டாசி 9 ஆம் தேதி புதன் சுக்கிரனுடன் இணைந்து மகாலட்சுமி யோகத்தை தரப்போகிறார். இப்படியான இந்த கிரகங்களின் கூட்டணி மற்றும் இடப்பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது என்பது குறித்து ஜோதிடர் ஜெயலட்சுமி அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.

மேஷம்

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே! உங்களுக்கு இது யோகமான மாதம். நிதி நிலை அற்புதமாக இருக்கும். பணவரவு வரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். நல்ல வேலை கிடைக்கும். செய்யும் தொழிலில் லாபம் வரும். குரு செவ்வாய் கூட்டணி சுக ஸ்தானத்தில் இருப்பதால் இல்லத்தரசிகளுக்கு ரொம்ப நல்ல மாதம்.

குடும்பத்தோடு ஆலய தரிசனம் செய்வீர்கள். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். அரசியல்வாதிகள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து மாவிளக்கு போட்டு வணங்குங்கள் நிறைய நல்லது நடக்கும். புரட்டாசி அமாவாசை நாளில் தானம் செய்தால் நல்லது நடக்கும்.

ரிஷபம்

சுக்கிரனை ராசி அதிபரியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே! புரட்டாசி மாதம் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் சூரியன் புதன் இணைந்திருப்பதால் முன்னோர்களின் சொத்துக்கள் மூலம் லாபம் வரும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி தேடி வரப்போகிறது. இந்த மாதம் நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்திருக்கும் மாதம்.

நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். கடன் பிரச்சினை நீங்கும். புதிய தொழில் தொடங்கலாம். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பத்தில் பயணம் செய்யும் ராகு பதவி யோகத்தை தரப்போகிறார். சிலருக்கு வேலையில் இடமாற்றம் வரலாம். குடும்பத்திலும் பணியிடத்திலும் மதிப்பு மரியாதை கூடும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வணங்க நன்மைகள் அதிகரிக்கும்.

மிதுனம்

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உங்க ராசி நாதன் புதன் ஆட்சி உச்சம் பெற்று சூரியனோடு இணைந்து அமர்ந்திருக்கிறார். உங்களின் சொல்வாக்கும் செல்வாக்கும் அதிகரிக்கும். வாக்கு ஸ்தானத்தில் உள்ள குரு செவ்வாய் கூட்டணியால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

நீங்கள் பேசும் வார்த்தைகளுக்கு மதிப்பு மரியாதை கூடும். சுய தொழில் செய்பவர்களுக்கு முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் வரும். தடைபட்ட சுபகாரியங்கள் நடைபெறும். திருமணம் கை கூடி வரும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். புதன்கிழமையன்று பெருமாளை வணங்க நன்மைகள் அதிகரிக்கும்.

கடகம்

சந்திர பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த புரட்டாசி மாதம் மகிழ்ச்சி நிறைந்த மாதமாக இருக்கப்போகிறது. குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை கூடும். நிதி நெருக்கடிகள் நீங்கும். அப்பாவினால் நன்மைகள் நடைபெறும். நிதித்துறையில் வேலை செய்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். பண வருமானம் அதிகரிக்கும்.

வேலையில் இருப்பவர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். வாக்கு ஸ்தானத்தில் கேது இருப்பதால் பேச்சில் நிதானமும் கவனமும் தேவை. பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். இந்த மாதத்தில் திங்கட்கிழமை சிவன் கோவிலுக்கு சென்று அபிஷேகத்திற்கு பால் வாங்கி கொடுக்க நன்மைகள் நடைபெறும்.

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே! இந்த மாதம் உங்க ராசி நாதன் சூரியன் கன்னி ராசியில் ஆட்சி உச்சம் பெற்ற புதனுடன் இணைந்து சஞ்சரிப்பதால் நிறைய தன லாபம் கிடைக்கும். புகழ் செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அதிகரிக்கும்.

உங்க பேச்சிற்கு மதிப்பு, மரியாதை கூடும் என்றாலும் ஒவ்வொரு சொல்லையும் யோசித்து பேசுவது நல்லது. கோபத்தோடு பேசாதீர்கள் கவனம் தேவை. அரசு வேலைக்காக தேர்வு எழுதியவர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். சுப விரைய செலவுகள் ஏற்படும். இந்த மாதம் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

கடன் கொடுக்காதீங்க அப்புறம் திரும்ப வரலையேன்னு வருத்தப்பட வேண்டியிருக்கும். பெண்களுக்கு இது ரொம்ப நல்ல மாதம் ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். தொழில் வியாபாரம் முன்னேற்றமடையும் மாதமாக இது அமைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனை வணங்க நன்மைகள் அதிகரிக்கும்.

கன்னி

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த புரட்டாசி மாதத்தில் அற்புதங்கள் நிகழப்போகிறது காரணம் உங்க ராசிநாதன் புதன் உங்க ராசியில் ஆட்சி பெற்று சூரியனோடு இணைந்திருக்கிறார். தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும்.

அரசு துறையில் வேலை செய்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்படும். சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கும். உங்களின் சுறுசுறுப்பும் உற்சாகமும் ஏற்படும். மாதத்தின் பிற்பகுதியில் புதன் இடப்பெயர்ச்சியாகி இரண்டாம் வீட்டில் சுக்கிரனோடு இணைந்து பயணம் செய்யப்போவதால் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும்.

பெண்களுக்கு நகை ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். எதிரிகள் பிரச்சினை நீங்கும். கன்னி ராசிக்காரர்கள் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை கொடுத்து வணங்கலாம் நன்மைகள் நடைபெறும்.

துலாம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு இது அற்புதமான மாதம். சூரியனும் புதனும் விரைய ஸ்தானத்தில் இணைந்து பயணம் செய்வதால், உங்களுடைய வாழ்க்கையில் நல்ல மாற்றம் வரும். வேலை தொழிலில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.

உயரதிகாரிகள் சொல்வதை கேட்டு நடந்து கொண்டால் நன்மைகள் அதிகரிக்கும். ராசி நாதன் சுக்கிரன் ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்வதால் செய்யும் தொழிலில் நிறைய லாபமும் பண வருமானம் இருமடங்காகும். எந்த அளவிற்கு பணவருமானம் வருகிறதோ அதே போல சுப செலவுகளும் வரும். வீட்டில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நிறைய நடைபெறும்.

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பதவியில் உயர்வு கிடைக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். மொத்தத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு பொருளாதார வளர்ச்சி நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று தாயாருக்கு தாமரை மலர் சாற்றி வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

விருச்சிகம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு புரட்டாசி மாதம் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படும். லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் பயணம் செய்வதால் உங்களுக்கு ராஜ சன்மானம் கிடைக்கும். புகழ், செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். வேலையில் உற்சாகம் அதிகரிக்கும். செய்யும் தொழிலில் லாபம் கூடும்.

அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். அப்பா வழி சொத்துக்கள் கிடைக்கும். அம்மாவிற்கு இருந்த நோய்கள் நீங்கும், மருத்துவ செலவுகள் குறையும். எதிர்பாராத தன வரவு வந்து திக்குமுக்காட வைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும்.

பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் அதிகரிக்கும். உங்களுடைய பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். யோசித்து பேசுவது நல்லது. புதிய வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். புதிய வீடு வாங்க நினைப்பவர்கள் இந்த மாதம் அட்வான்ஸ் கொடுக்கலாம். செவ்வாய்கிழமை முருகப்பெருமானை அரளிப்பூ மாலை சாற்றி வணங்க நன்மைகள் அதிகரிக்கும்.

தனுசு

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே! புரட்டாசி மாதம் உங்க ராசிக்கு யோகாதிபதியான சூரியன் 10 ஆம் வீட்டில் புதனோடு பயணம் செய்வதால் நீங்கள் புதிய தொழில் தொடங்கலாம். பத்தில் சூரியன் பதவி யோகத்தை தரப்போகிறார்.

தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மாத பிற்பகுதியில் புதன் லாப ஸ்தானத்தில் சுக்கிரனோடு இணைந்து பயணம் செய்வதால் கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.பெரிய பதவிகள் தேடி வரும்.

வீடு மனை வாங்கலாம். இந்த மாதம் நீங்கள் புதிய வண்டி வாகனம் வாங்கலாம். உணவு விசயத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் உயர்கல்விக்காக செலவுகள் வரும். கடன் வாங்குவீர்கள். குடும்பத்தோடு ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள். வியாழக்கிழமையன்று குரு பகவானை வணங்க நன்மைகள் நடைபெறும்.

மகரம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே! சூரியன் உங்க ராசிக்கு பாக்ய ஸ்தானமான 9 ஆவது வீட்டில் இந்த மாதம் பயணம் செய்வதால் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனம் தேவை. யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள் அப்படி கொடுத்தாலும் கொடுத்த பணம் திரும்ப வராது.

பாக்ய ஸ்தானத்தில் சூரியன் புதனோடு இணைந்து வலுவாக இருப்பதால் புதிய தொழில் தொடங்கலாம். உங்களின் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பணியில் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

குரு பகவானின் பார்வையும் செவ்வாய் பகவானின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைப்பதால் திருமணம்,சுபகாரியம் நடைபெறும். பிள்ளைகளின் திருமண விசயம் பற்றி பேச ஆரம்பிக்கலாம். வரன் பார்க்க தொடங்கலாம். சனிக்கிழமை ஸ்ரீ காலபைரவரை வணங்கி தானம் செய்ய நன்மைகள் அதிகரிக்கும்.

கும்பம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களுக்கு சூரியன் புதனோடு இணைந்து எட்டாவது வீட்டில் பயணம் செய்வதால் பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனமாக இருங்க. ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் கடன் வாங்கி கொடுக்காதீர்கள். பொருளாதாரத்தில் எச்சரிக்கையும் கவனமும் தேவை.

சுக்கிரன் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். உங்களுக்கு பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குரு பகவானின் பார்வை குடும்ப ஸ்தானத்திற்கு கிடைப்பதால் திருமண யோகம் கைகூடி வரும்.

புத்திர பாக்கியம் கிடைக்கும். சொல்வாக்கும் செல்வாக்கும் அதிகரிக்கும் மாதமாக இந்த மாதம் அமைந்துள்ளது. ஏழரை சனியில் பாத சனி நடப்பதால் சனிக்கிழமையன்று சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

மீனம்

மீனம் ராசிக்காரர்களே! புரட்டாசி மாதத்தில் உங்களுக்கு நிறைய சாதகமான சம்பவங்கள் நடைபெறும். சூரியன் ஏழாம் வீட்டில் ஆட்சி உச்சம் பெற்று அமர்ந்து உங்க ராசியை பார்ப்பதால் அரசு பதவியில் இருப்பவர்களுக்கு நல்ல யோகமான மாதம், பதவி உயர்வு தேடி வரும். யோகமான நேரம் கைகூடி வருகிறது.

அரசியல்வாதிகள் வரும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதே நேரத்தில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, உடல் உஷ்ணம் அதிகரிக்கும். செவ்வாய் பகவான் ஐந்தாம் வீட்டில் குரு உடன் இணைந்து பயணம் செய்வதால் ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

சகோதர சகோதரிகளால் லாபம் கிடைக்கும். குரு பார்வை உங்களுடைய ராசிக்கு கிடைப்பதால், திருமண யோகம் கைகூடி வருகிறது. குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களுக்கு முன்பு கடனாக கொடுத்த பணம் வசூலாகும். புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்து ஏழுமலையானை வணங்குங்கள். ஏழைகளுக்கு தானமாக கொடுங்கள் நன்மைகள் அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Thursday, September 17, 2026, 10:57 [IST]
Desktop Bottom Promotion