Dengue: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் டாக்டர்!

Dengue Cases Spike In Chennai: சமீபத்திய மழைக்குப் பிறகு சென்னையில் டெங்கு பாதிப்பு நிச்சயமாக அதிகரித்து வருகிறது. மாநகராட்சி தரவுகளின்படி, இந்த ஆண்டு ஜூலை வரை சுமார் 522 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 381 ஆக இருந்தது. அடையார், சோழிங்கநல்லூர், கோடம்பாக்கம், ஆலந்தூர் போன்ற பகுதிகளில் அதிகமான டெங்கு பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. முக்கியமாக சென்னையில் மட்டுமின்றி, தமிழ்நாடு அளவிலும் இந்த ஆண்டு பாதிப்பு எண்ணிக்கை 20,000-ஐ கடந்துள்ளது. குறிப்பாக குழந்தைகள் விஷயத்தில் பெற்றோர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Dengue Cases Spike In Chennai Doctor Explains Warning Signs Prevention Tips And Foods For Recovery

இப்படிப்பட்ட சூழலில், சென்னையில் உள்ள கிளீனீகிள்ஸ் மருத்துவமனையின் மூத்த தொற்றுநோய் நிபுணரான டாக்டர். சுப்ரமணியன் சுவாமிநாதன் அவர்கள் டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள், சிகிச்சைகள், தடுப்பு முறைகள் என டெங்கு காய்ச்சல் குறித்து ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள் பற்றி தமிழ் போல்ட்ஸ்கையிடம் பகிர்ந்து கொண்டார்.

டெங்குவின் ஆபத்தான அறிகுறிகள்

"ஆரம்பத்தில் டெங்கு, மற்ற வைரஸ் காய்ச்சல் போலவே இருக்கும். திடீரென அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, கண்களுக்குப் பின்புறம் வலி, உடல் முழுவதும் வலி மற்றும் மூட்டு வலி ஏற்படலாம். இதனால்தான் இதை சிலர் "Break-bone fever" என்றும் அழைக்கிறார்கள். 2-3 நாட்களுக்குப் பிறகு சிலருக்கு தோலில் தடிப்புகள், வாந்தி, பசியின்மை போன்றவை ஏற்படலாம்.

ஆனால் ஆபத்தானது அதன் எச்சரிக்கை அறிகுறிகள் தான். அதில் காய்ச்சல் குறைந்த பிறகு கடுமையான வயிற்று வலி, தொடர்ந்து வாந்தி, ஈறுகள் அல்லது மூக்கில் ரத்தம் வருதல், வாந்தி அல்லது மலத்தில் ரத்தம் இருப்பது, அதிக சோர்வு, அமைதியின்மை, சிறுநீர் வெளியேறாமல் இருப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். இவை டெங்குவின் தீவிர நிலைக்கான எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம்.

பிளேட்லெட் எண்ணிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு வீட்டில் காத்திருக்கக் கூடாது. டெங்குவில் இரத்த அழுத்தம் குறைவதும், ரத்தத்தில் உள்ள திரவம் வெளியேறுவதும் (Plasma leakage) முக்கியமான ஆபத்துகளாகும்" என்று டாக்டர் கூறினார்.

Dengue Cases Spike In Chennai Doctor Explains Warning Signs Prevention Tips And Foods For Recovery

சிகிச்சை - நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்?

"டெங்கு வைரஸை நேரடியாக அழிக்கும் குறிப்பிட்ட மருந்து எதுவும் இல்லை. ஆண்டிபயாடிக் (Antibiotics) மருந்துகள் டெங்குவுக்கு வேலை செய்யாது. எனவே இதற்கு முக்கியமான சிகிச்சை என்றால், அது உடலில் போதுமான திரவம் இருப்பதை உறுதி செய்தல் மற்றும் நோயாளியின் நிலையை தொடர்ந்து கண்காணிப்பது தான்.

காய்ச்சலுக்கு பாராசிட்டமால் (Paracetamol) மட்டுமே பயன்படுத்துகிறோம். டெங்கு இருக்கும் போது Brufen, Combiflam, Aspirin, Diclofenac போன்ற மருந்துகளைத் தவிர்க்க வேண்டும். இவை ரத்தக்கசிவு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்.

பெரும்பாலான லேசான பாதிப்புகளை வீட்டிலேயே கவனித்துக் கொள்ளலாம். தண்ணீர், இளநீர், ஓஆர்எஸ், கஞ்சி போன்றவற்றை மருத்துவர் அறிவுறுத்தும் அளவில் எடுத்துக் கொள்ளலாம். முக்கியமாக முழுமையான ஓய்வு மிகவும் அவசியம்.

மேலும் நோயாளியின் நிலையைப் பொறுத்து பிளேட்லெட் மற்றும் ஹீமட்டோக்ரிட் (Hematocrit) அளவை தொடர்ந்து கண்காணிக்க இரத்தப் பரிசோதனைகள் செய்யப்படலாம்.

டெங்குவின் எச்சரிக்கை அறிகுறிகள் இருந்தால், அதாவது வாய்வழியாக திரவங்களை எடுத்துக் கொள்ள முடியாவிட்டால், பிபி குறைவாக இருந்தால், சிறுநீர் அளவு குறைந்தால் அல்லது நோயாளி மிகவும் தூக்கமாக இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கலாம். மருத்துவமனையில் நரம்பு வழியாக திரவங்கள் (IV fluids) செலுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

பிளேட்லெட் செலுத்துதல் (Platelet transfusion) குறித்து பலருக்கும் தேவையற்ற பயம் உள்ளது. பிளேட்லெட் எண்ணிக்கை குறையும் எல்லோருக்கும் Platelet transfusion தேவையில்லை. இரத்தக்கசிவு மற்றும் நோயாளியின் ஒட்டுமொத்த நிலை உள்ளிட்ட காரணிகளைப் பொறுத்தே மருத்துவர் இதை முடிவு செய்வார்.

பெரும்பாலான நோயாளிகள் சரியான திரவங்கள் மற்றும் ஓய்வு மூலம் குணமடைந்து விடுகிறார்கள். எனவே பிளேட்லெட் எண்ணிக்கையைப் பார்த்து பயப்பட வேண்டாம். முக்கியமாக மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் ஸ்டீராய்டுகள் (Steroids) அல்லது ஆண்டிபயாடிக்ஸ் (Antibiotics) எடுத்துக் கொள்ளக் கூடாது" என்று டாக்டர் கூறினார்.

Dengue Cases Spike In Chennai Doctor Explains Warning Signs Prevention Tips And Foods For Recovery

தடுப்பு - உண்மையில் எது உதவும்?

"சிகிச்சையை விட அதை தடுப்பது என்பது மிகவும் முக்கியம். டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசு (Aedes mosquito) பகல் நேரத்தில் கடிக்கும். குறிப்பாக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் இந்தக் கொசு கடிக்கலாம். இந்தக் கொசுக்கள் அழுக்கு சாக்கடையில் மட்டும் இனப்பெருக்கம் செய்வதில்லை. தேங்கியிருக்கும் சுத்தமான தண்ணீரிலும் அவை இனப்பெருக்கம் செய்யும்.

எனவே சென்னை குடும்பங்களுக்கு நான் சொல்வது என்னவென்றால், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 10 நிமிடங்கள் உங்கள் வீட்டைச் சுற்றிப் பாருங்கள். பூந்தொட்டி தட்டுகள், ஃப்ரிட்ஜ்ஜில் தேங்கும் தண்ணீர், AC-யில் இருந்து வெளியேறும் தண்ணீர், தண்ணீர் டிரம்கள், தொட்டி, தேங்காய் ஓடுகள், மொட்டை மாடியில் இருக்கும் பழைய டயர்கள் போன்றவற்றில் தண்ணீர் தேங்கியிருந்தால் அதை அகற்றுங்கள்.

பகல் நேரத்திலும் குறிப்பாக குழந்தைகளுக்கு கொசு விரட்டும் கிரீம் (Mosquito repellent cream) பயன்படுத்துங்கள். குழந்தைகளை முழுக்கை ஆடைகளை அணியச் செய்யுங்கள். ஜன்னல் மற்றும் கதவுகளில் கொசு வலை பயன்படுத்துங்கள்.

அடையார், சோழிங்கநல்லூர் போன்ற அதிக பாதிப்பு உள்ள பகுதிகளில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். மாநகராட்சி ஊழியர்கள் கொசு ஒழிப்பு புகை தெளித்தல் அல்லது கொசு புழுக்கள் குறித்து சோதனை செய்ய வரும்போது அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். டெங்குவைத் தடுக்க அனைவரும் இணைந்து செயல்படுவது அவசியம். டெங்கு தடுப்பில் கொசு இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அகற்றுவதும், கொசுக்கடியைத் தவிர்ப்பதும் தான் மிகவும் முக்கியமானவை." என்று டாக்டர் சுப்ரமணியன் கூறினார்.

டெங்குவில் இருந்து குணமடைய எந்த உணவுகள் உதவும்?

* "டெங்குவின் போது பசி குறைவதுடன், உடலில் நீர்ச்சத்து குறையலாம். எனவே முதலில் திரவ உணவுகள் மற்றும் பானங்கள் முக்கியம். தண்ணீர், இளநீர், ஓஆர்எஸ், கஞ்சி மற்றும் லேசான சூப் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

* உணவில் எளிதில் ஜீரணமாகக்கூடிய வீட்டில் சமைத்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். தயிர் சாதம், இட்லி, கிச்சடி, ரசம் சாதம், வேகவைத்த காய்கறிகள், மென்மையான பருப்பு போன்றவற்றை சாப்பிடலாம். விரைவாக உடல் பலம் பெற தயிர், முட்டை போன்ற புரோட்டீன் நிறைந்த உணவுகளையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆரஞ்சு, கொய்யா, பப்பாளி போன்ற பழங்களையும் எடுத்துக் கொள்ளலாம்.

* பலர் பப்பாளி இலைச்சாறு மற்றும் கிவி போன்றவை பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்குமா என்று கேட்கிறார்கள். இவற்றை துணை உணவாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்பதற்கு வலுவான அறிவியல் ஆதாரம் இல்லை. எனவே இவற்றை மட்டுமே நம்பக்கூடாது. முறையான நீரேற்றம் மற்றும் மருத்துவரின் கண்காணிப்பு தான் முக்கியம்.

* காய்ச்சல் இருக்கும் போது அதிக எண்ணெய், காரமான உணவுகள், வெளியில் வாங்கும் வறுத்த உணவுகள் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இவை குமட்டலை அதிகரித்து, உடல் குணமடைவதை தாமதப்படுத்தலாம்.

* பெரும்பாலான டெங்கு நோயாளிகள் ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சரியான முறையில் திரவங்களை எடுத்துக் கொண்டு மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றினால் குணமடைந்து விடுகிறார்கள். ஆனால் எச்சரிக்கை அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், வீட்டிலேயே சுயமாக சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல், உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்" என்று டாக்டர் சுப்ரமணியன் சுவாமிநாதன் கூறினார்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion