முகம் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா இருக்கணுமா? அப்ப சாக்லேட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க...

World Chocolate Day 2025: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று தான் சாக்லேட். இந்த சுவையான சாக்லேட்டை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 07 ஆம் தேதி உலக சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது.

இப்படிப்பட்ட சாக்லேட் வெறுமனே ருசியான உணவுப் பொருள் மட்டுமல்ல, உடலுக்கு ஒருசில நன்மைகளை வழங்கக்கூடியது. முக்கியமாக டார்க் சாக்லேட் ஏராளமான நன்மைகளை உடலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் வழங்கக்கூடியது. சொல்லப்போனால் தினமும் ஒரு துண்டு டார்க் சாக்லேட் சாப்பிட்டு வந்தால், பலவிதமான நல்ல மாற்றங்களை உடலில் காணலாம்.

World Chocolate Day 2025 Top 5 Dark Chocolate Face Packs For Glowing Skin

இப்படிப்பட்ட சாக்லேட்டுகள் சருமத்திற்கு நல்லதா என்ற கேள்வி பலரது மனதில் இருக்கும். இதுக்குறித்து சரும நிபுணரான டாக்டர். சஞ்சிகா குப்தா தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது, " சாக்லேட்டுகள் சருமத்திற்கு மிகவும் நல்லதா என்றால், அது நாம் தேர்ந்தெடுத்து சாப்பிடும் சாக்லேட்டுகளைப் பொறுத்தது. மில்க் சாக்லேட்டில் சர்க்கரையும், பாலும் அதிகம் இருப்பதால், அவை சருமத்தில் முகப்பரு மற்றும் சரும சுருக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும்.

அதே சமயம், டார்க் சாக்லேட்டை எடுத்துக் கொண்டால், அது மிகவும் நல்லது. அதுவும் கொக்கோ அதிகம் உள்ள டார்க் சாக்லேட்டில், ப்ளேவோனாய்டுகள் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இவை சருமத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், சருமத்தை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளும், முதுமைக்கான அறிகுறிகளை எதிர்த்துப் போராடும். முக்கியமாக முகப்பருக்கள் வராமல் தடுக்கும். எனவே டார்க் சாக்லேட்டை சாப்பிடுவதாக இருந்தால், அதில் 70% கொக்கோவும், 30%-க்கும் குறைவான சர்க்கரையும் இருக்கும் டார்க் சாக்லேட்டை தேர்ந்தெடுத்து உட்கொள்ளுங்கள்." என்று கூறினார்.

இவ்வளவு சத்துக்கள் நிறைந்த டார்க் சாக்லேட்டை சாப்பிடுவது மட்டுமின்றி, அதைக் கொண்டு ஃபேஸ் பேக்குகளை போட்டு வந்தால், முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும். இப்போது சரும அழகை மேம்படுத்த உதவும் சில சாக்லேட் ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.

1. டார்க் சாக்லேட் மற்றும் தேன் ஃபேஸ் மாஸ்க்

* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு, 1 கப் உருக்கிய டார்க் சாக்லேட்டை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு மென்மையாக சுழற்சி முறையில் மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

2. டார்க் சாக்லேட் மற்றும் க்ளே ஃபேஸ் மாஸ்க்

* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு 1/2 கப் உருக்கிய டார்க் சாக்லேட்டை எடுத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* பின்பு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி, முகத்தைத் துடைக்க வேண்டும்.

3. டார்க் சாக்லேட் மற்றும் தயிர் ஃபேஸ் மாஸ்க்

* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு 5 துண்டுகள் டார்க் சாக்லேட்டை எடுத்து உருக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 1/2 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மென்மையாக ஸ்க்ரப் செய்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

4. டார்க் சாக்லேட் மற்றும் மில்க் க்ரீம் ஃபேஸ் மாஸ்க்

* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1/4 கப் உருக்கிய டார்க் சாக்லேட்டை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் மில்க் க்ரீம் மற்றும் சில துளிகள் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் துணியால் முகத்தை துடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு டோனரை முகத்தில் தடவ வேண்டும்.

5. டார்க் சாக்லேட் மற்றும் ஃபுரூட் ஃபேஸ் மாஸ்க்

* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு தர்பூசணி மற்றும் ஸ்ட்ராபெர்ரியை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பௌலில் டார்க் சாக்லேட்டை உருக்கி எடுத்து, குளிர்ந்த பின், அரைத்த பழ விழுதை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion