தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க..

Hair Growth Tips In Tamil: ஒருவரது அழகை மேம்படுத்தி காட்டுவதில் தலைமுடி முக்கிய பங்கினை வகிக்கிறது. அதுவும் அடர்த்தியான தலைமுடியைப் பெறவே அனைவரது விருப்பமாக இருக்கும். ஆனால் தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழல், வேலைப்பளுவால் மிகுந்த மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் தலைமுடியின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக தலைமுடி உதிர்வை நிறைய பேர் சந்திக்கின்றனர்.

பொதுவாக ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு தலைமுடி உதிர்வது சாதாரணம் தான். ஆனால் கொத்து கொத்தாக தலைமுடி உதிர்வதை கண்டால், தாமதிக்காமல் தலைமுடிக்கு போதுமான பராமரிப்பைக் கொடுக்க வேண்டும்.

5 Curry Leaf Oil Combinations for Hair Growth Thickness and Strength

அப்படி தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பழங்காலம் முதலாக பயன்படுத்தப்பட்டு வரும் பொருள் தான் தேங்காய் எண்ணெய். இந்த தேங்காய் எண்ணெயைத் தவிர வேறு பல எண்ணெய்களும் தலைமுடியின் வளர்ச்சிக்கும், அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.

அதுவும் இந்த எண்ணெய்களை வெறுமனே பயன்படுத்துவதற்கு பதிலாக, அத்துடன் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் தலைமுடியின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த கறிவேப்பிலையை சேர்த்து பயன்படுத்தும் போது அடர்த்தியான, வலிமையான மற்றும் நீளமான தலைமுடியைப் பெறலாம். இப்போது முடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலையை எந்த எண்ணெய்களுடன் சேர்த்து எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைக் காண்போம்.

1. தேங்காய் எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை

தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்க நினைக்கும் பலரும் நிச்சயம் கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தியிருப்பார்கள். ஏனெனில் தேங்காய் எண்ணெயில் தலைமுடியை அழகாகவும், ஆரோக்கியமாகவும் பராமரிக்க தேவையான கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அதுவும் இந்த எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் தலைமுடிக்குள் ஆழமாக ஊடுருவுவதை எளிதாக்குகிறது. எனவே வறண்ட அல்லது சேதமடைந்த தலைமுடிக்கு சிறப்பான தலைமுடி சிகிச்சையை செய்ய கறிவேப்பிலையுடன் இதைப் பயன்படுத்தலாம். அதுவும் கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தும் போது அது முடியில் ஏற்படும் புரத இழப்பைக் குறைத்து, தலைமுடி உதிர்வை தடுத்து, முடியின் வளர்ச்சியையும், அடர்த்தியையும் அதிகரிக்கும்.

2. ஜொஜோபா எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை

நீங்கள் குறைந்த அடர்த்தியுடைய எண்ணெயை விரும்பினால், ஜொஜோபா எண்ணெய் சிறந்த தேர்வாக இருக்கும். ஜொஜோபா எண்ணெயின் வேதியியல் அமைப்பு சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப் பசையை ஒத்திருப்பதால், இது சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புப் பொருட்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அதுவும் இந்த எண்ணெயை சூடேற்றி, அதில் கறிவேப்பிலை சேர்த்து ஊற வைத்து, அந்த எண்ணெயை பயன்படுத்தும் போது, தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும், முடியின் வளர்ச்சியும் மேம்படும். இந்த வகை எண்ணெய் சாதாரண மற்றும் எண்ணெய் பசை கொண்ட ஸ்கால்ப் வகைகளுக்கு ஏற்றது.

3. நல்லெண்ணெய் மற்றும் கறிவேப்பிலை

இந்தியாவில் தலைமுடி பராமரிப்பிற்கு பயன்படுத்தப்படும் மற்றொரு எண்ணெய் தான் நல்லெண்ணெய். இந்த நல்லெண்ணெயுடன் கறிவேப்பிலை சேர்த்து சூடேற்றி, அந்த எண்ணெயை தலைக்கு தடவி நன்கு சிறிது நேரம் மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலசும் போது, ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

4. பாதாம் எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை

நீங்கள் மென்மையான தலைமுடி பராமரிப்பு சிகிச்சையை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் அதிக பிசுபிசுப்பு இல்லாத எண்ணெயை தேடுகிறீர்களா? அப்படியானால் பாதாம் எண்ணெய் சிறந்த தேர்வாக இருக்கும். அதற்கு சூடான பாதாம் எண்ணெயில் சிறிது கறிவேப்பிலை சேர்த்து ஊற வைத்து, அந்த எண்ணெயை தலைமுடிக்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இந்த எண்ணெய் சிகிச்சையானது மயிர்கால்களை வலிமையாக்கி, முடி உதிர்வதைத் தடுத்து, முடி வளர வழிவகை செய்யும். முக்கியமாக இந்த எண்ணெய் பொலிவிழந்த மற்றும் வறண்ட முடியை கொண்டவர்களுக்கு ஏற்றது.

5. நெல்லிக்காய் எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை

தலைமுடி பராமரிப்பு என்று வரும் போது, இயற்கை வழியின் முடியின் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும் மேம்படுத்த உதவும் இரண்டு பொருட்கள் என்றால் அது நெல்லிக்காயும், கறிவேப்பிலையும் தான். பல நூற்றாண்டுகளாக, இவ்விரு பொருட்களையும் தான் தலைமுடி பராமரிப்பில் நம் முன்னோர்கள் அதிகம் பயன்படுத்தியுள்ளனர். இந்த நெல்லிக்காயையும், கறிவேப்பிலையையும், சூடான தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து ஊற வைத்து, அந்த எண்ணெயைக் கொண்டு வாரம் 2-3 முறை எண்ணெய் குளியல் எடுக்கும் போது, தலைமுடியில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Wednesday, August 12, 2026, 20:37 [IST]
Desktop Bottom Promotion