கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்..

Posted By:

Kalan Milagu Varuval Recipe In Tamil: புரட்டாசி மாதம் தொடங்கிவிட்டது. இனி அடுத்த ஒரு மாதம் அசைவம் சாப்பிடமாட்டீங்களா? வாய்க்கு ருசியான சைவ உணவுகளை தேடி தேடி கண்டுபிடிச்சு சமைத்து சாப்பிட வேண்டுமா? கவலை வேண்டாம். உங்களுக்காக இந்த புரட்டாசி மாதத்தில் அசைவ உணவின் ஏக்கத்தைக் குறைக்கும்படியாக சில சுவையான சைவ உணவுகளை அளிக்கவுள்ளோம்.

Mushroom Pepper Fry How To Make Kalan Milagu Varuval Recipe

அந்த வகையில் இன்று அசைவ உணவிற்கு இணையான சுவையைக் கொண்ட ஒரு அற்புதமான காளான் ரெசிபியைத் தான் பார்க்கப் போகிறோம். அது தான் காளான் மிளகு வறுவல். இந்த காளான் மிளகு வறுவல் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். அதே வேளையில் இதன் மணமும், சுவையும் வேற லெவலில் இருக்கும். இந்த காளான் மிளகு வறுவலை சாதம், சப்பாத்தி, பூரி என அனைத்துடனும் சேர்த்து சாப்பிடலாம்.

உங்களுக்கு இந்த காளான் மிளகு வறுவல் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காளான் மிளகு வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வறுத்து பொடி செய்வதற்கு...

* கிராம்பு - 3
* ஏலக்காய் - 2
* பட்டை - சிறிய துண்டு
* மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 4
* காஷ்மீரி வரமிளகாய் - 3
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

இஞ்சி பூண்டு விழுதிற்கு..

* முழு பூண்டு - 1
* இஞ்சி - 2 துண்டு

வறுவல் தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு விழுது
* காளான் - 400 கிராம்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/4 கப்
* அரைத்து வைத்துள்ள மசாலா பொடி
* கொத்தமல்லி - சிறிது
* எலுமிச்சை - பாதி

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், மல்லி, வரமிளகாய், காஷ்மீரி வரமிளகாய், மிளகு, சீரகம், சோம்பு, கசகசா, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த பொடியை ஒரு கிண்ணத்தில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதே ஜாரில் ஒரு முழு பூண்டு மற்றும் இஞ்சியை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை, நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் காளானை சேர்த்து 1 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி, 1/4 கப் நீரை ஊற்றி பிரட்டி மூடி வைத்து, 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கைவிடாமல் 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும். இப்படி கிளறும் போது, வறுவல் சற்று கெட்டியாகத் தொடங்கும், அப்போது அடுப்பை அணைத்துவிட்டு, அதில் கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான காளான் மிளகு வறுவல் தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, September 20, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion