கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்!

Mars Jupiter Conjunction In Cancer 2026: ஜோதிடத்தின் படி கிரகங்களின் இயக்கங்கள் மற்றும் அவற்றின் சேர்க்கைகளால் உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையிலும், பூமியிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதன் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

Mars Jupiter Conjunction In Cancer 2026 Predictions For 12 Zodiac Signs By Astrologer Jeyalakshmi

அந்த வகையில் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகாவன் தனது உச்ச ராசியான கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் கிரகங்களின் தளபதியும், தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் செவ்வாய் பகவானும் கடக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்திருக்கிறார். கடக ராசி செவ்வாய் பகவானுக்கு நீச்ச வீடு என்றாலும் குரு பகவானுக்கு உச்ச வீடு.

தற்போது உச்சம் பெற்று பயணம் செய்யும் குரு உடன் நீச்சம் பெற்ற செவ்வாய் இணைந்து நீச பங்க ராஜயோகம் அடைகிறார். குரு செவ்வாய் கூட்டணியால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது. இந்த குரு மங்கள யோகமானது அடுத்த 45 நாட்கள் நீடித்திருக்கப் போகிறது. இப்போது மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு குரு செவ்வாய் கூட்டணியால் உருவாகியுள்ள குரு மங்கள யோகம் என்ன பலன்களை தரப்போகிறது என்பது குறித்து ஜோதிடர் ஜெயலட்சுமி அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார். உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்

ராசிநாதன் செவ்வாய் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் குரு உடன் இணைந்து நீச பங்க ராஜயோகம் அடைந்துள்ளதால் சுகமும் சந்தோஷமும் அதிகரிக்கும். நிலம், வீடு வாங்கும் யோகம் வரும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியம் மேம்படும். செவ்வாய்கிழமை முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

ரிஷபம்

தைரிய ஸ்தானத்தில் குரு செவ்வாய் கூட்டணி அமைந்து குரு மங்கள யோகம் கூடி வந்துள்ளதால், நினைத்த காரியம் நிறைவேறும். சகோதரர்களால் சந்தோஷம் அதிகரிக்கும்.சிறு தூர பயணங்களால் நன்மை உண்டு, ஆன்மீக பயணம் செல்வீர்கள். வியாழக்கிழமையன்று தட்சிணாமூர்த்தியை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

மிதுனம்

குடும்ப வாக்கு ஸ்தானத்தில் குரு செவ்வாய் கூட்டணி அமைந்துள்ளதால் பேசும் வார்த்தைகளுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பண வருமானம் அதிகரிக்கும். வாக்கு பலிதம் உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்ய நன்மைகள் அதிகரிக்கும்.

கடகம்

உங்க ராசியில் உச்சம் பெற்ற குரு உடன் செவ்வாய் இணைந்து குரு மங்கள யோகத்தை கொடுத்துள்ளார். உங்களின் சொல்வாக்கும் செல்வாக்கும் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். அந்தஸ்து உயரும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றியடைவீர்கள். செவ்வாய்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

சிம்மம்

உங்களுடைய ராசிக்கு 12 ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் குரு மங்கள யோகம் கைகூடி வந்துள்ளதால் சுப விரைய செலவுகள் ஏற்படும். வீடு, வாகனம் வாங்க செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலைக்காகவும், படிப்பிற்காகவும் வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இரவு நேர பயணங்களில் கவனம் தேவை. வியாழக்கிழமையன்று சித்தர் ஜீவசமாதியில் அன்னதானம் செய்ய நன்மைகள் அதிகரிக்கும்.

கன்னி

உங்க ராசிக்கு லாப ஸ்தானமான 11ஆவது வீட்டில் குரு செவ்வாய் கூட்டணி சேர்ந்துள்ளதால் தொட்டதெல்லாம் பொன்னாகும், புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்களின் நீண்ட நாள் ஆசையெல்லாம் நிறைவேறும். எதிர்பாராத பண வரவு வந்து திக்குமுக்காட வைக்கும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். வியாழக்கிழமையன்று குருபகவானுக்கு கொண்டைக்கடலை நிவேதனம் செய்து வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

துலாம்

தொழில் ஸ்தானமான பத்தாவது வீட்டில் குரு செவ்வாய் கூட்டணி சேர்ந்து குரு மங்கள யோகத்தை தருகிறது. படித்து விட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். சுய தொழில் தொடங்கும் யோகம் கை கூடி வந்துள்ளது. செவ்வாய்கிழமையன்று கந்த சஷ்டி கவசம் படித்து முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

விருச்சிகம்

பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் குரு செவ்வாய் இணைந்து குரு மங்கள யோகத்தை தருகிறது. மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வந்துள்ளது. ஆன்மீக பயணம் செல்வீர்கள். அதிர்ஷ்டம் தேடி வந்துள்ளது. அப்பாவின் ஆதரவு கிடைக்கும். அப்பா வழி உறவுகளால் நன்மைகள் அதிகரிக்கும். வியாழக்கிழமையன்று பிரதோஷ நாளில் சிவ ஆலயங்களுக்கு சென்று வணங்க நன்மைகள் அதிகரிக்கும்.

தனுசு

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காராகளுக்கு ஆயுள் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் குரு செவ்வாய் இணைந்துள்ளதால் விபரீத ராஜயோகம் தேடி வரப்போகிறது. திடீர் பண வருமானம் வரும். பூர்வீக சொத்து விற்பனையின் மூலம் லாபம் கிடைக்கும். இரவு நேரங்களில் வண்டி வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. வெள்ளிக்கிழமையன்று துர்க்கையம்மனுக்கு விளக்கேற்றி வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

மகரம்

உங்களுடைய ராசிக்கு 7 ஆவது வீடான களத்திர ஸ்தானத்தில் குரு செவ்வாய் கூட்டணி சேர்ந்து குரு மங்கள யோகத்தை தருகிறது. கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதன்கிழமையன்று பெருமாளை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

கும்பம்

உங்களுடைய ராசிக்கு ஆறாவது வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் குரு செவ்வாய் கூட்டணி சேர்ந்துள்ளதால் நீண்ட நாள் கடன் பிரச்சினை நீங்கும். எதிரிகள் தொல்லை முடிவுக்கு வரும். நீண்ட நாள் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். செவ்வாய்கிழமையன்று விநாயகப்பெருமானை அருகம்புல் மாலை சாற்றி வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

மீனம்

உங்களுடைய ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 ஆவது வீட்டில் குரு செவ்வாய் கூட்டணி சேர்ந்துள்ளதால், பூர்வீக சொத்துக்களால் லாபம் வரும். பிள்ளைகள் மூலம் நன்மைகள் அதிகரிக்கும். பிள்ளைகளால் சுப செய்திகள் தேடி வரும். தாத்தா வழி சொந்தங்களால் புதிய வாய்ப்புகள் தேடி வரும். வியாழக்கிழமைகளில் சித்தர் கோவிலுக்கு சென்று அகல் விளக்கு ஏற்றி வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, September 21, 2026, 10:22 [IST]
Desktop Bottom Promotion