மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு சர்க்கரை நோய் அபாயம் ஏன் அதிகரிக்கிறது?

Menopause And Diabetes Risk In Tamil: மாதவிடாய் சுழற்சி என்பது பெண்களின் உடலில் இயற்கையாக நடைபெறும் முக்கியமான செயல்முறையாகும். இது இனப்பெருக்க திறனை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உடல்நலம் மற்றும் ஹார்மோன் சமநிலையையும் பராமரிக்க உதவுகிறது. இந்த மாதவிடாய் சுழற்சியானது ஒரு குறிப்பிட்ட வயதை அடையும் போது பெண்களுக்கு நின்றுவிடும். அதையே மாதவிடாய் நிறுத்தம்/மெனோபாஸ் என்று அழைப்பர்.

Why Menopause Can Increase Diabetes Risk In Women

இந்த மாதவிடாய் நிறுத்தம் பொதுவாக 45 முதல் 55 வயதிற்குள் நடக்கும். இந்த காலகட்டத்தில் பெண்களின் உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் போன்ற ஹார்மோன்களின் அளவுகள் குறையத் தொடங்குவதால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு ஆளாகக்கூடும். அதில் முக்கியமான ஒன்று டைப்-2 சர்க்கரை நோய் ஆகும்.

தற்போது உலகெங்கிலும் சர்க்கரை நோயால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்க்கரை நோய் என்பது ஒரு நோய் அல்ல, அது ஒரு நாள்பட்ட நிலையாகும். அதாவது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் (குளுக்கோஸ்) அளவு மிக அதிகமாக இருக்கும் போது ஏற்படும் ஒரு நிலையாகும். கணையம் போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யாத போதோ அல்லது முற்றிலும் உற்பத்தி செய்யாத போதோ இந்நிலை உருவாகிறது. இந்த சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாவிட்டால், பல உள்ளுறுப்புக்கள் சேதமடையக்கூடும்.

Why Menopause Can Increase Diabetes Risk In Women

எனவே இந்த சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த, தமிழ் போல்ட்ஸ்கை சன் பார்மாவுடன் இணைந்து 'வின் ஓவர் டயாபடீஸ்' (Win Over Diabetes) என்னும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இந்த பிரச்சாரத்தின் நோக்கமே அதன் பெயருக்கு ஏற்ப சர்க்கரை நோயை வெல்வது தான். இப்படிப்பட்ட சர்க்கரை நோயின் அபாயம் மெனோபாஸ் பெண்களிடையே அதிகம் இருப்பதாக பல ஆய்வுகளில் தெரிய வந்துள்ளன.

மாதவிடாய் நிறுத்தம் மற்றும் டைப்-2 சர்க்கரை நோய் குறித்த ஆய்வுகள்

கைசர் பெர்மனென்டே ஆராய்ச்சியாளர் எரின் லெப்ளாங்க் தலைமையிலான ஒரு ஆய்வு குறித்து வட அமெரிக்க மாதவிடாய் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இதழான 'மெனோபாஸ்' இதழில் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வில் 46 முதல் 55 வயதுக்குள் இறுதி மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் ஒப்பிடும் போது, ​​46 வயதுக்கு முன்பு இறுதி மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 25 சதவீதம் அதிகம் என்று கண்டறிந்துள்ளது. மேலும் 55 வயதுக்குப் பிறகு இறுதி மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதேப் போல், மற்றொரு ஆய்விலும், இளம் வயதில் மாதவிடாய் நிற்கும் பெண்களிடையே வகை 2 நீரிழிவு நோய்க்கான அபாயம் கணிசமாக அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

மெனோபாஸ் என்றால் என்ன?

ஒரு பெண்ணுக்கு தொடர்ந்து 12 மாதங்கள் மாதவிடாய் வராமல் இருந்தால் அது மெனோபாஸ் எனக் கருதப்படுகிறது. இது வயது அதிகரிப்பின் இயல்பான ஒரு பகுதியாகும். இந்த நிலையில் கருப்பை செயல்பாடு குறைந்து, இனப்பெருக்க ஹார்மோன்களின் உற்பத்தி குறைகிறது.

மெனோபாஸ் காலத்தில் காணப்படும் பொதுவான அறிகுறிகள்:

* உடல் சூடு அதிகரித்தல் (Hot Flashes)
* இரவில் அதிகமாக வியர்ப்பது
* தூக்கமின்மை
* மனநிலை மாற்றங்கள்
* உடல் எடை அதிகரித்தல்
* உடல் சோர்வு
* மூட்டு வலி

மெனோபாஸ் காலத்தில் சர்க்கரை நோயின் அபாயம் ஏன் அதிகரிக்கிறது?

இதுக்குறித்து சென்னை பெரும்பாக்கம் சோழிங்கநல்லூரில் உள்ள க்ளீனிகிள்ஸ் மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவரான டாக்டர் பத்மப்ரியா விவேக் அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையிடம் கூறியதாவது, "பொதுவாக 45 முதல் 55 வயதுக்குள் மாதவிடாய் நிரந்தரமாக நிற்கும் நிலையே மெனோபாஸ் ஆகும். இந்த காலத்தில் உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் போன்ற ஹார்மோன்களின் அளவு குறைவதால் பல்வேறு உடல் மற்றும் மனநல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உடலில் இன்சுலின் செயல்பாட்டை சீராக வைத்திருக்க உதவுகிறது. இந்த ஹார்மோன் குறையும் போது, உடல் இன்சுலினை திறம்பட பயன்படுத்த முடியாமல் போகலாம். இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து, டைப்-2 நீரிழிவு நோய் (Type 2 Diabetes) ஏற்படும் அபாயம் உயர்கிறது.

மெனோபாஸ் காலத்தில் பல பெண்களுக்கு உடல் எடை அதிகரிப்பது, குறிப்பாக அடிவயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்வது போன்ற மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த வயிற்றுக் கொழுப்பு இன்சுலின் எதிர்ப்பை அதிகரித்து, நீரிழிவு அபாயத்தை மேலும் உயர்த்தக்கூடும். மேலும், தூக்கமின்மை, மனஅழுத்தம் , சோர்வு, உடற்பயிற்சி குறைவு மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களும் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை பாதிக்கலாம்.

எனவே குடும்பத்தில் நீரிழிவு நோய் வரலாறு இருப்பவர்கள், அதிக உடல் எடை கொண்டவர்கள் அல்லது உயர் ரத்த அழுத்தம் உள்ள பெண்கள் மெனோபாஸ் காலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்." என்று கூறினார்.

நீரிழிவு நோய் அபாயத்தை குறைப்பது எப்படி?

"மெனோபாஸ் என்பது பெண்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு இயல்பான மாற்றமாக இருந்தாலும், இந்த காலம் உடல்நலத்தை கவனிக்க வேண்டிய முக்கியமான கட்டமாகும். சீரான உணவுமுறை , தினசரி உடற்பயிற்சி , போதுமான தூக்கம், மனஅழுத்த மேலாண்மை மற்றும் வழக்கமான உடல்நல பரிசோதனைகள் மூலம் நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்க முடியும்.

மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் மாற்றங்களை புரிந்துகொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது, நீண்டகால நலனுக்கு மிகவும் அவசியமானது." என்றும் டாக்டர் பத்மப்ரியா கூறினார்.

Story first published: Monday, June 1, 2026, 13:17 [IST]
Desktop Bottom Promotion