Father's Day: நல்ல தந்தையாக இருக்க உங்க குழந்தையிடம் நீங்க சொல்ல வேண்டிய 3 விஷயங்கள் என்னனு தெரிஞ்சிக்கோங்க...

Father's Day: அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பது ஔவையார் வாக்கு. தெய்வத்தை காட்டிலும் பெற்றோரே உயர்வாக வணங்க பட வேண்டியவர்கள். மாதா, பிதா, குரு, மற்றும் தெய்வம் என்கிற வரிசையில் கூட தாய் தந்தையருக்கே முதலிடம். குழந்தை பிறந்த உடன் தங்கள் விருப்பு வெறுப்புகளை மறந்து குழந்தைகளுக்காவே நம் வாழ்க்கை இனி என்னும் தீர்மானத்திற்கு வர பெற்றோர்களாலேயே முடியும். என்னதான் நாம் பெற்றோர் என்று தாய் தந்தையை சேர்த்து சொன்னானும், நம் ஊரில் அம்மாக்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பெரும்பாலும் தந்தைகளுக்கு கொடுப்பதில்லை. அன்னையர் தினம் என்றவுடன் நினைவிற்கு வரும் தேதி கூட, தந்தையர் தினத்தை தேடி தான் காண வேண்டியுள்ளது.

Father s Day What Are the 3 Things You Want to Tell Your Children If You Become a Father in Tamil

இப்படி தான், தாயை இழந்து தன் தந்தையால் 6 குழந்தைகளில் ஒருவராக வளர்க்க பட்ட அமெரிக்காவை சேர்ந்த சொனாரா ஸ்மார்ட் டாட், தந்தையர் தினத்தை கொண்டாட வலியுறுத்தினார். அதன் பின் 1907ம் ஆண்டு மேற்கு விர்ஜினியா பகுதியில் நிகழ்ந்த நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்த 362 பேருக்கு அஞ்சலி செலுத்திய நிகழ்வின் தாக்கம் தந்தையர் தினத்திற்கான முதல் அடியாக அமைந்தது. சொனாரா ஸ்மார்ட் டாட்டின் தொடர் கோரிக்கை வாஷிங்டனில் ஏற்றுக்கொள்ளப்பட்டு 1910, ஜூன் 19-ம் தேதி முதல் முறையாக அதிகாரப்பூர்வ தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. அன்றிலிருந்து, ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுகிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.

அம்மா என்றவுடன் அன்பு மட்டும் தான் நினைவிற்கு வரும், அப்பா என்றால் கண்டிப்பானவர், சிடுமூஞ்சி, முசுடு, கோவக்காரர் என பல வடிவங்கள் தோன்றும். அதிலும் ஆண் பிள்ளைகள் சிலருக்கு அப்பா என்றாலே ஏக வசனம் தான். பெண் பிள்ளைகள் சிலருக்கு அப்பா என்றால் கொள்ளை பிரியம் தான். இன்றைய இளம் தலைமுறை ஆண்கள், அதாவது அடுத்த தலைமுறையில் அப்பாவாக போகின்றவர்கள், தங்கள் அப்பாவிடம் கற்ற வாழ்க்கை அனுபவங்கள், தங்கள் குழந்தைகளுக்கு எடுத்து சொல்ல நினைக்கும் 3 விசயங்கள் பற்றி பார்க்கலாம்.

ராஜேஷ் கோயம்புத்தூரிலிருந்து, அப்பா பெயர் மணி

அப்பா எப்போதும் என் விருப்பத்திற்கு என்றும் துணையாக இருந்தவர். என்ன இருந்தாலும், அப்பா என்னும் உறவு பதின் பருவத்தில் சிறிது விரிசலை சந்தித்துவிடும். மற்ற ஆண் குழந்தைகளை போலவே அப்பாவின் செயல்கள், மற்றும் அறிவுரைகளை நானும் அந்த வயதில் கவனிக்க தவறிவிட்டேன். அவரை இழந்துவிட்ட நிலையில், தற்போது அவருடைய செயல்கள் அனைத்தும் எனக்காக வழிகாட்டுதலாகவும், ஊன்றுகோலாகவும் இருக்கின்றன.

அப்பாவிடம் இருந்து கற்றது

குடும்பத்தின் மீதான உண்மையான அக்கறை, எதற்கும் பிறரை சார்ந்தோ அல்லது எதிர்பார்க்காதா போக்கு, கடின உழைப்பே வெற்றி தரும் என்னும் நம்பிக்கையின் சான்றாக வாழ்ந்தவர்

குழந்தைகளுக்கு சொல்ல நினைக்கும் 3 விஷயங்கள்

- எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்.
- வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுவிட்டு நிம்மதியாக இரு.
- நல்லவர்களுக்கு நல்லவனாக இருந்து நல்லது செய்.

ஸ்டாலின் சிதம்பரத்திலிருந்து, அப்பா பெயர் முத்துக்குமாரசுவாமி

அப்பாவின் கை பிடித்து நடந்தது முதல் வேலையில் முதல் அடி வைக்கும் வரை எனக்கு துணையாக என் பின்னால் இருந்தவர். வளர்த்து வரும் பருவத்தில் சில மனக்கசப்புகளும் கருத்து வேறுபாடுகளும் தந்தையுடன் ஏற்பட்டாலும், நமக்கான வாழ்க்கை அனுபவத்திற்கான பிள்ளையார் சுழி அவரிடமே துவங்குகிறது.

அப்பாவிடம் இருந்து கற்றது

யாரிடமும் எதிர்பார்ப்பின்றி சொந்த வருமானத்தில் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது, பணத்தை செலவு செய்யும் போது அதற்காக வருந்த கூடாது, இதை விட அதிகம் சம்பாதிக்க முடியும் என்கிற நேர்மறை சிந்தனை கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு சொல்ல நினைக்கும் 3 விஷயங்கள்

- உனக்கான ஒரு வாழ்வை முடிந்தவரை சந்தோசமாக வாழ்ந்திடு.
- உன் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை உனக்கு உண்டு, உன் சொந்த காலில் நிற்க துவங்கிய உடன்.
- எந்த சூழலிலும் யாரையும் காயப்படுத்தி விடாதே, எல்லாரையும் அன்போடு பார்.

பாலாஜி பெங்களூரிலிருந்து, அப்பா பெயர் முருகேசன்

அப்பாவுடன் ஒரே வீட்டில் வசிப்பவர்களுக்கு அப்பாவின் தோற்றம் ஒரு விதமாகவும், அப்பாவிடமிருந்து விலகி வளரும் குழந்தைகளுக்கு அப்பாவின் தோற்றம் வேறு விதமாகவும் இருக்கும். சிறுவயதில் இருந்தே விடுதியில் தங்கி படித்த நான், விடுமுறைகளுக்கு வரும் போது கூட என் அப்பாவிடம் நெருங்கி பழகிட சந்தர்ப்பம் அமையவில்லை. நானும் அதற்கு முயற்சிக்கவில்லை.

அப்பாவிடம் இருந்து கற்றது

வியாபாரத்தில் சிறந்த உழைப்பாளியாக இருப்பது, தொழிலின் நெளிவு சுளிவுகளை புரிந்து அதற்கு ஏற்றார் போல் வருமானம் ஈட்டுவது என சில நல்ல குணங்களை கற்றிருந்தாலும், எதிர்பாலினத்தாரை அவமதிப்பது, குறைத்து மதிப்பிடுவது போன்றவற்றை செய்ய கூடாது என்பதையும் கற்றுக் கொண்டேன்.

குழந்தைகளுக்கு சொல்ல நினைக்கும் 3 விஷயங்கள்

- வாழ்க்கையை சந்தோசமாக வாழ், நிகழ்காலத்திற்கு முக்கியத்துவம் கொடு.
- மற்றவர்களை குறைத்து மதிப்பிடாதே.
- உன் தவறுகளில் இருந்து பாடங்களை கற்றுக்கொள்

ஆனந்த் கரூரிலிருந்து, அப்பா பெயர் பாஸ்கர்

எல்லா ஆண் பிள்ளைகளுக்கும் முதல் ஹீரோ அவங்க அப்பா தான். அவங்க அப்பாவோட செயல்களை கவனிச்சு அத செய்யவும் செய்வாங்க. சின்ன வயசுல எவ்ளோ நெருக்கமா இருந்தாலும், வளர வளர அதே அப்பாவ நாம பாக்கற விதம் மாறும். அவர் நம்ம நல்லதுக்கு சொல்ற விஷயங்கள் கூட தப்பா தான் தெரிஞ்சுது. அதுக்கு காரணம் அவர் சில விஷயங்கள்ல்ல எடுத்த தவறான முடிவுகளும் தான், என்னை பற்றிய மற்றவர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்ததும், என்னை நம்பாததும் அதுல ஒரு காரணம்.

அப்பாவிடம் இருந்து கற்றது

தேனீயை போல சுறுசுறுப்பான கடின உழைப்பு, கிடைக்கிற நேரத்தை வீணாக்காம வருமானம் ஈட்ட நினைக்கிற புத்திசாலிதனம், வீண் செலவு செய்யாமல் இருப்பது, இப்படி எவ்ளோ நல்ல விஷயம் இருந்தாலும், தொழில்ல ஏற்பட்ட தோல்வியால துவண்டு போய்ட்டாரு. தோல்விய எப்படி எதிர்கொள்வதுன்னும் அவரோட தோல்வியில இருந்து கத்துக்கிட்டேன்.

குழந்தைகளுக்கு சொல்ல நினைக்கும் 3 விஷயங்கள்

- கடந்த காலத்தை நினைத்து வருந்தக் கூடாது, எதிர்காலத்தை நினைத்து பயப்படக் கூடாது.
- புத்திசாலித்தனத்தோடு நேர்மையாக இருக்க வேண்டும். புத்திசாலிதனம் இல்லாத நேர்மை முட்டாள்தனத்திற்கு சமமானது.
-உனக்கு விருப்பமில்லாத மற்றும் முடியாத விஷயங்களுக்கு "No" சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.

Story first published: Saturday, June 15, 2024, 18:05 [IST]
Desktop Bottom Promotion