வழுவழுப்பு இல்லாத திருநெல்வேலி ஸ்பெஷல் வெண்டைக்காய் பச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...

Posted By:

Thirunelveli Special Vendakkai Pachadi Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் வெண்டைக்காயின் வழுவழுப்பு தன்மையின் காரணமாக வெண்டைக்காயை சாப்பிடமாட்டார்களா? மேலும் வெண்டைக்காயின் அந்த பிசுபிசுப்புத் தன்மையாலே உங்களுக்கும் வெண்டைக்காயை சமைக்க பிடிக்கவில்லையா?

அப்படியானால் வெண்டைக்காயைக் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு, அதில் குறிப்பிட்டுள்ள குறிப்புகளை மனதில் கொண்டு திருநெல்வேலி ஸ்பெஷல் வெண்டைக்காய் பச்சடியை செய்யுங்கள். இந்த திருநெல்வேலி ஸ்பெஷல் வெண்டைக்காய் பச்சடியை பின்வருமாறு செய்யும் போது, அதில் உள்ள பிசுபிசுப்புத்தன்மை குறைவதோடு, அதன் சுவையால் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த வெண்டைக்காய் பச்சடி புளிக்குழம்புடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

Thirunelveli Special Vendakkai Pachadi How To Make a Vendakkai Pachadi

உங்களுக்கு திருநெல்வேலி ஸ்பெஷல் வெண்டைக்காய் பச்சடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே திருநெல்வேலி ஸ்பெஷல் வெண்டைக்காய் பச்சடியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு...

* துவரம் பருப்பு - 1/4 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 3/4 கப்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* வெண்டைக்காய் - 300 கிராம் (மெல்லியதாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - 1 சிறிய நெல்லிக்காய் அளவு (1/2 கப் நீரில் கரைத்துக் கொள்ளவும்)

அரைப்பதற்கு...

* துருவிய தேங்காய் - 1/2 கப்
* பூண்டு - 2
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* தண்ணீர் - சிறிது

செய்முறை:

* முதலில் குக்கரில் துவரம் பருப்பை கழுவி சேர்த்து, அத்துடன் 3/4 கப் நீரை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து, மிதமான தீயில் வைத்து, 5-7 நிமிடம் வதக்க வேண்டும். அப்படி 7 நிமிடம் வதக்கும் போது, வெண்டைக்காயில் உள்ள பிசுபிசுப்பு குறைந்திருக்கும்.
* அடுத்து அதில் பச்சை மிளகாய், தக்காளியை சேர்த்து, அதோடு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தக்காளி நன்கு குலைந்து வரும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் புளிச்சாற்றினை ஊற்றி கிளறி, 2-3 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் வேக வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து கிளறி, உப்பு சுவை பார்த்து, வேக வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், பூண்டு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* வெண்டைக்காய் நன்கு வெந்ததும், அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கிளறி, மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது சுடுநீரை ஊற்றி கிளறி, 4 நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான வெண்டைக்காய் பச்சடி தயார்.

குறிப்பு: வெண்டைக்காயை நீரில் கழுவி, துணியால் துடைத்துவிட்டு, பின் அதை மெல்லிய துண்டுகளாக வெட்டி, ஒரு அகலமான தட்டில் போட்டு, 10 நிமிடம் அப்படியே விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம், வெண்டைக்காயில் உள்ள வழுவழுப்பு குறையும்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, September 16, 2025, 15:00 [IST]
Desktop Bottom Promotion