சுரைக்காய் தோசையும்.. முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க...

Posted By:

Suraikkai Dosa With Mullangi Chutney Recipe In Tamil: தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இப்படியான நேரத்தில் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும், அதே சமயம் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளும்படியான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்வது நல்லது. அதுவும் காலையில் என்ன டிபன் செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்தால், வீட்டில் சுரைக்காயும், முள்ளங்கியும் இருந்தால், அவற்றைக் கொண்டு சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் செய்யுங்கள்.

Suraikkai Dosa With Mullangi Chutney How To Make This Healthy Breakfast

இந்த டிபன் காம்போ காலையில் சாப்பிட அருமையாக இருக்கும். அதோடு இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். அதுவும் முள்ளங்கியை வைத்து சாம்பார் செய்திருப்பீர்கள். ஆனால் சட்னி செய்யும் போது சுவை வேற லெவலில் இருக்கும்.

உங்களுக்கு சுரைக்காய் தோசை மற்றும் முள்ளங்கி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுரைக்காய் தோசை மற்றும் முள்ளங்கி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

சுரைக்காய் தோசைக்கு...

* மாவு பச்சரிசி - 1 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* துருவிய சுரைக்காய் - 1 கப்
* பச்சை மிளகாய் - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது

முள்ளங்கி சட்னிக்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 ஸ்பூன்
* வரமிளகாய் - 5
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பூண்டு - 7 பல்
* பெரிய முள்ளங்கி - 1 (தோல் நீக்கி பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* புளி - சிறிய துண்டு
* கறிவேப்பிலை - 2 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது

சட்னி தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1

செய்முறை:

* முதலில் பச்சரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் நீரை ஊற்றி, 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* 2 மணிநேரம் கழித்து மிக்சர் ஜாரில் பச்சரிசியை கழுவி சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே ஜாரில் துருவிய சுரைக்காய், பச்சை மிளகாயை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை அரைத்த மாவுடன் சேர்த்து, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு, மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கலந்து, ரவா தோசை மாவு பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் சட்னிக்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு சேர்த்து நிறம் மாற வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வரமிளகாயை சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய முள்ளங்கியை சேர்த்து, நிறம் மாற வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளி, புளியை சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில் சிறிது நீரை ஊற்றி அலசி சட்னியுடன் சேர்த்து கலந்து விட வேண்டும்.
* அடுத்து சட்னி தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், முள்ளங்கி சட்னி தயார்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை, ரவா தோசை சுடுவது போன்று அள்ளி ஊற்றி, மிதமான தீயில் வைத்து, எண்ணெய் ஊற்றி மொறுமொறுவென்று வேக வைத்து எடுத்தால், சுரைக்காய் தோசை தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, July 16, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion