ரம்ஜான் ஸ்பெஷல் திண்டுக்கல் மட்டன் பிரியாணி - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு தெரியுமா?

Posted By:

Ramzan Special Dindigul Mutton Biryani Recipe In Tamil: இன்று ரம்ஜான் பண்டிகை. ரம்ஜான் என்றாலே நினைவிற்கு வருவது மட்டன் பிரியாணி தான். அதுவும் இஸ்லாமிய நண்பர்கள் தங்கள் வீடுகளில் தெருவே மணக்கும் அளவில் மட்டன் பிரியாணியை செய்வார்கள். மற்ற நாட்களில் இஸ்லாமிய நண்பரை சந்திக்கிறோமோ இல்லையோ, ரம்ஜான் பண்டிகையன்று தவறாமல் அவர்களது வீட்டிற்கு சென்று வாழ்த்துக்களை சொல்ல பலர் செல்வார்கள்.

இதற்கு அந்த மட்டன் பிரியாணி தான் முதன்மையான காரணம். பிரியாணி என்றாலே மட்டன் பிரியாணி தான் மிகவும் சுவையாக இருக்கும். அதுவும் திண்டுக்கல் மட்டன் பிரியாணி இன்னும் அல்டிமேட்டாக இருக்கும். இந்த ரம்ஜான் பண்டிகையன்று நீங்கள் உங்கள் வீட்டில் பிரியாணி செய்ய நினைத்தால், திண்டுக்கல் மட்டன் பிரியாணியை செய்யுங்கள்.

Ramzan Special Dindigul Mutton Biryani How To Make a Dindigul Mutton Biryani Recipe

உங்களுக்கு திண்டுக்கல் மட்டன் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே திண்டுக்கல் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* மட்டன் - 1 கிலோ
* சீரக சம்பா அரிசி - 2 கப்
* தண்ணீர் - 1 1/2 கப்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* கல் உப்பு - 2 டீஸ்பூன்
* எலுமிச்சை - 1
* தயிர் - 200 மிலி
* புதினா - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* சுடுநீர் - 2 கப்

பிரியாணி ஸ்பெஷல் மசாலா பொடிக்கு...

* மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 10
* சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
* கல்பாசி - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் - 6
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 2
* அன்னாசிப்பூ - 2
* பட்டை - 2 துண்டு
* ஜாவித்ரி - 2 துண்டு
* கிராம்பு - 10
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்

மசாலா விழுது அரைப்பதற்கு...

* சின்ன வெங்காயம் - 15
* பச்சை மிளகாய் - 5
* பூண்டு - 5 பல்
* இஞ்சி - 1 பெரிய துண்டு

செய்முறை:

* முதலில் மட்டனை நீரில் கழுவி, குக்கரில் போட்டு, 1 1/2 கப் நீரை ஊற்றி, குக்கரை அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் பிரியாணி மசாலா பொடிக்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, நன்கு மென்மையாக பொடி போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே ஜாரில் 15 சின்ன வெங்காயம், 5 பச்சை மிளகாய், 5 பல் பூண்டு, பெரிய துண்டு இஞ்சியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதையும் தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு அகலமான பிரியாணி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், அரைத்த மசாலா விழுதை சேர்த்து, மசாலாவின் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 4 டேபிள் ஸ்பூன் அரைத்த பிரியாணி பொடியை சேர்க்க வேண்டும்.
* பின் அதில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன்மிளகாய் தூள், கல் உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து, வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் வேக வைத்துள்ள மட்டன் துண்டுகளை மட்டும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு எலுமிச்சை பழத்தின் சாறு மற்றும் தயிரை ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் 1 கையளவு புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அடுத்து 2 கப் மட்டன் வேக வைத்த நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 25 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* சீரக சம்பா அரிசியை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதை ஒருமுறை கழுவிவிட்டு, நீரை ஊற்றி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 20 நிமிடம் கழித்து அரிசியில் உள்ள நீரை வடிகட்டி விட வேண்டும்.
* பின் வெந்து கொண்டிருக்கும் மட்டனை கரண்டியால் கிளறி, பின் ஊற வைத்த அரிசியை சேர்த்து நன்கு கிளறி, 2 கப் சுடுநீரை ஊற்றி கிளறி, மிதமான தீயில் வைத்து மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்தால், அரிசி பாதியாக வெந்திருக்கும். பின், மற்றொரு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, கல் சூடானதும், அதன் மேல் இந்த பிரியாணி பாத்திரத்தை வைத்து, பிரியாணியை கிளறி, மேலே 1 டீஸ்பூன் நெய் மற்றும் கொத்தமல்லி, புதினாவை சிறிது தூவி, வாழை இலையால் பிரியாணியை மூடி, பின் பாத்திரத்தை அலுமினியம் ஃபாயிலால் மூடி, மேலே ஒரு தட்டு வைத்து மூடி, 20 நிமிடம் குறைவான தீயில் தம் செய்ய வேண்டும்.
* 20 நிமிடம் கழித்து, அடுப்பை அணைத்து விட்டு, மூடியைத் திறந்து, அலுமினியம் ஃபாயில் மற்றும் வாழை இலையை நீக்கிவிட்டு, பிரியாணியை கிளறி, மேலே சிறிது கொத்தமல்லி மற்றும் புதினாவை சேர்த்து கிளறினால், சுவையான திண்டுக்கல் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, March 31, 2025, 14:07 [IST]
Desktop Bottom Promotion