பன்னீரும், உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் நேரத்துல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணிப் பாருங்க..

Posted By:

Paneer Potato Donuts Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைகளின் பசியைப் போக்க, ஒரு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கும், பன்னீரும் இருந்தால், அவற்றைக் கொண்டு அருமையான சுவையில் பன்னீர் உருளைக்கிழங்கு டோனட்டை செய்து கொடுங்கள்.

இந்த டோனட் நன்கு மொறுமொறுவென்று இருப்பதோடு, சுவையும் வித்தியாசமாக இருக்கும். அதுவும் மழை நேரத்தில் இப்படியான ஸ்நாக்ஸை செய்யும் போது, வீட்டில் உள்ளோர் அனைவரும் போட்டி போட்டு காலி செய்வார்கள். குறிப்பாக இந்த டோனட் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இதை செய்ய குறைவான பொருட்களே போதுமானது.

Paneer Potato Donuts How To Make a Paneer Potato Donuts Recipe

உங்களுக்கு பன்னீர் உருளைக்கிழங்கு டோனட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் உருளைக்கிழங்கு டோனட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* வேக வைத்த உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
* பன்னீர் - 200 கிராம்
* உப்பு - சுவைக்கேற்ப
* சில்லி ப்ளேக்ஸ் - சிறிது
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
* மிக்ஸ் ஹெர்ப்ஸ் - 1 ஸ்பூன்
* சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* பிரட் தூள் - தேவையான அளவு
* மைதா - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 100 மிலி
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் வேக வைத்த உருளைக்கிழங்குகளின் தோலை நீக்கிவிட்டு, நன்கு கட்டிகளின்றி மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பன்னீரை சேர்த்து, அதையும் நன்கு மசித்து விட வேண்டும்.
* அடுத்து அதில் சுவைக்கேற்ப உப்பு, சில்லி ப்ளேக்ஸ், காஷ்மீரி மிளகாய் தூள், மிக்ஸ் ஹெர்ப்ஸ், சோள மாவு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு கிண்ணத்தில் மைதா மாவை எடுத்து, 100 மிலி நீரை ஊற்றி கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு தட்டில் பிரட் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து பிசைந்து வைத்துள்ள கலவையை கொஞ்சம் எடுத்து உருட்டி, தட்டையாக தட்டி, நடுப்பகுதியை மட்டும் ஒரு வட்டமான கட்டர் கொண்டு வெட்டி, டோனட் வடிவத்தில் செய்து கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து கலவையையும் டோனட் போன்று செய்து தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், செய்து வைத்துள்ள டோனட்டை மைதா மாவில் பிரட்டி, பின் பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து டோனட்டுகளையும் பொரித்து எடுத்தால், உருளைக்கிழங்கு பன்னீர் டோனர் தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, November 13, 2025, 17:30 [IST]
Desktop Bottom Promotion