உடல் எடையை குறைப்போருக்கான ஓட்ஸ் உப்புமா - இந்த பக்குவத்துல ஒருடைம் செய்யுங்க.. அடிக்கடி செய்வீங்க..

Posted By:

Oats Upma Recipe In Tamil: தற்போது உடல் எடையைக் குறைக்க நினைப்போரின் காலை உணவாக இருப்பது என்றால் அது ஓட்ஸாகத் தான் இருக்கும். ஏனெனில் ஓட்ஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதை உட்கொள்ளும் போது நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இதன் மூலம் எடை இழப்புக்கும் உதவும். ஆனால் ஓட்ஸை சாப்பிடும் பலரும் அதை விரும்பி சாப்பிடுவதில்லை. ஏனெனில் இதை பெரும்பாலானோர் கஞ்சி வடிவில் தான் உட்கொண்டு வருகின்றனர். இருப்பினும் ஓட்ஸைக் கொண்டு அட்டகாசமான சுவையில் உப்புமா செய்யலாம் என்பது தெரியுமா? அதுவும் இந்த பக்குவத்தில் உப்புமா செய்யும் போது, உதிரி உதிரியாகவும் இருக்கும், சுவையாகவும் இருக்கும்.

Oats Upma How To Make Oats Upma Recipe

உங்களுக்கு இந்த ஓட்ஸ் உப்புமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஓட்ஸ் உப்புமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* நெய் - 2 டீஸ்பூன்
* இன்ஸ்டன்ட் ஓட்ஸ் - 1 கப்
* ரவை - 2 டேபிள் ஸ்பூன்
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - சிறிது
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1/2 (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - 1 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், ஓட்ஸ் மற்றும் ரவையை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி, ஒரு தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதே வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வெங்காயத்தை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய கேரட்டை சேர்த்து 3-4 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் 1 1/2 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, நீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் வறுத்து வைத்துள்ள ஓட்ஸ் மற்றும் ரவையை சேர்த்து நன்கு கிளறி, சமமாக பரப்பி, மூடி வைத்து குறைவான தீயில் 5 நிமிடம் தம் போட்டு வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து நன்கு கிளறி, துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான ஓட்ஸ் உப்புமா தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, November 25, 2026, 23:03 [IST]
Desktop Bottom Promotion