வெங்காயம், பூண்டு சேர்க்காம பன்னீர் கிரேவி செய்யணுமா? அப்ப இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க..

Posted By:

No Onion No Garlic Paneer Gravy Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி, பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா? ஆனால் உங்கள் வீட்டில் வெங்காயம், பூண்டு எதுவும் இல்லையா?

கவலை வேண்டாம். இந்த இரண்டும் இல்லாமலேயே அட்டகாசமான சுவையில் பன்னீர் கிரேவி செய்யலாம். இந்த வெங்காயம், பூண்டு சேர்க்காமல் செய்யக்கூடிய பன்னீர் கிரேவியானது, நீங்கள் எதிர்பார்க்கும் சுவையில் நிச்சயம் இருக்கும்.

No Onion No Garlic Paneer Gravy Recipe

உங்களுக்கு வெங்காயம், பூண்டு சேர்க்காமல் பன்னீர் கிரேவியை எப்படிசெய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த பன்னீர் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பன்னீர் - 250 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* கடலை எண்ணெய் - 100 மிலி
* மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* வெண்ணெய் - தேவையான அளவு

வதக்கி அரைப்பதற்கு..

* கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 15 கிராம்
* பிரியாணி இலை - 5
* கிராம்பு - 10
* ஏலக்காய் - 10
* வரமிளகாய் - 6
* இஞ்சி - 25 கிராம்
* சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 3 டேபிள் ஸ்பூன்
* குடைமிளகாய் - 1
* பெரிய தக்காளி - 5
* முந்திரி - 100 கிராம்
* மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
* தண்ணீர் - 1/2 லிட்டர்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து நல்ல மணம் வரும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், இஞ்சி, சீரகம், மல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பிறகு குடைமிளகாயை சேர்த்து 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும். அதன் பின் தக்காளியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து முந்திரி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, 1/2 லிட்டர் நீரை ஊற்றி கிளறி, 10 நிமிடம் நன்கு உயர் தீயில் வைத்து வேக வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* வதக்கிய பொருட்களை நன்கு குளிர்ந்ததும், மிக்சர் ஜாரில் போட்டு, 1 டம்ளர் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 100 மிலி கடலை எண்ணெய் சேர்த்து சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடாவதற்குள், ஒரு பௌலில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 100 மிலி நீரை ஊற்றி நன்கு கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அந்த மசாலா கலவையை வாணலியில் உள்ள எண்ணெயில் ஊற்றி நன்கு கிளறி 5-7 நிமிடம் வேக வைக்க வேண்டும். பச்சை வாசனை போய் எண்ணெய் மேலே மிதக்க தொடங்கும் போது, அரைத்து வைத்துள்ள கிரேவியை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* கிரேவி நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக பன்னீர் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து, இறுதியாக வெண்ணெயை சேர்த்தால், சுவையான பன்னீர் கிரேவி தயார்.

Image Courtesy: Jeyashri's kitchen

[ of 5 - Users]
Story first published: Tuesday, December 19, 2023, 18:08 [IST]
Desktop Bottom Promotion