பிரியாணி சாப்பிட்டு போரடிச்சிருச்சா? அப்ப இந்த நவரத்தின புலாவை செஞ்சு பாருங்க... அட்டகாசமாக இருக்கும்...!

Posted By:

Navaratna Pulao Recipe in Tamil: வழக்கமான பிரியாணி மற்றும் தக்காளி சாதம் சாப்பிட்டு போரடித்து விட்டதா? ஆம் எனில் இந்த புதிய நவரத்தின புலாவை ட்ரை பண்ணி பாருங்க. வழக்கமான புலாவ் போலவோ அல்லது தக்காளி சாதம் போலவோ இது நிச்சயம் இருக்காது. அதற்கு காரணம் இதில் சேர்க்கப்படும் பொருட்களும், இது சமைக்கப்படும் முறையும்தான்.

முக்கியமாக காரம் இல்லாத இந்த புலாவ் உங்கள் வீட்டு குட்டீஸ்களுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும். இந்த பதிவில் சூப்பரான வட இந்தியாவில் மிகவும் பிரபலமான நவரத்தின புலாவை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

Navaratna Pulao Recipe How to Make Navaratna Pulao

தேவையான பொருட்கள்:

- 1 கப் பாசுமதி அரிசி
- 200 கிராம் பன்னீர்
- கால் கப் பச்சை பட்டாணி
- 10 பீன்ஸ்
- 2 கேரட்
- கால் கப் காலிபிளவர்
- 1 உருளைக்கிழங்கு
- 1 பெரிய வெங்காயம்
- 10 முந்திரிப் பருப்பு
- 10 பாதாம்
- 10 உலர் திராட்சை
- 10 ஸ்பூன் குங்குமப்பூ பால்(விருப்பத்திற்கு ஏற்ப)
- 1 ஸ்பூன் மிளகு
- 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு
- 2 பிரியாணி இலை
- 3 ஏலக்காய்
- 2 இலவங்கப்பட்டை
- 7 கிராம்பு
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 அன்னாசி பூ
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு நெய்
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு தண்ணீர்

செய்முறை:

- முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி அதை சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

- பின்னர் பீன்ஸ், கேரட், காலிபிளவர், உருளைக்கிழங்கு, வெங்காயம், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, மற்றும் பன்னீரை நறுக்கி, பச்சை பட்டாணியை உரித்து, மற்றும் எலும்பிச்சம்பழத்தைப் பிழிந்து சாறை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.

- பின்பு சுமார் பத்து மேஜைக்கரண்டி அளவு பாலில் குங்குமப்பூவை போட்டு அதை சுடவைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும். இல்லையென்றால் வெறும் பாலையும் சேர்த்துக் கொள்ளலாம்.

- பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சுமார் இரண்டு மேஜைகரண்டி அளவு எண்ணெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.

- எண்ணெய் சூடானதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் நன்கு பொன்னிறமாகும் வரை அதை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

- இப்பொழுது ஒரு அகலமான பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாசுமதி அரிசியை வேக வைப்பதற்க்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதில் ஊற வைத்திருக்கும் பாசுமதி அது அரிசியை போடவும்.

- பின்பு அதில் ஒரு மேஜைகரண்டி அளவு எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து அதை வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

- அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சுமார் இரண்டு மேஜைகரண்டி அளவு நெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.

- நெய் சுட்ட பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் முந்திரி பருப்பு மற்றும் பாதாம் பருப்பை போட்டு அது நன்கு பொன்னிறமாகும் வரை அதை வதக்கவும்.

- அவை பொன்னிறமானதும் அதில் உலர் திராட்சையை சேர்த்து சுமார் அரை நிமிடம் வரை வறுத்து எடுத்து அனைத்தையும் ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

- பின்பு கடாயில் நெய்யை சேர்த்து அதில் நறுக்கி வைத்திருக்கும் பன்னீர் துண்டுகளை ஒவ்வொன்றாக வறுக்கவும். பன்னீர் துண்டுகளை சீரான இடைவெளியில் திருப்பி போட்டு எல்லா பக்கமும் நன்கு வறுத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.

- அடுத்து கடாயில் மீண்டும் சிறிது நெய்யை சேர்த்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டை சேர்த்து அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.

- ஒரு நிமிடத்திற்க்குப் பிறகு அதில் ஒரு சிட்டிகை அளவு உப்பை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு சுமார் ஐந்து நிமிடம் வரை வேக விட்டு ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

- பின்னர் கடாயில் மீண்டும் நெய்யை சேர்த்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் காலிபிளவர், பீன்ஸ், மற்றும் பச்சை பட்டாணியை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு சுமார் ஐந்து நிமிடம் வரை வேக விடவும்.

- ஐந்து நிமிடத்திற்க்குப் பிறகு மூடியை திறந்து அதில் ஒரு சிட்டிகை அளவு உப்பை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு சுமார் ஐந்து நிமிடம் வரை வேக விட்டு ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

- இப்பொழுது ஒரு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 2 ஸ்பூன் நெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.

- நெய் சூடானதும் அதில் பிரியாணி இலை, ஏலக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு, நட்சத்திர சோம்பு, மிளகு, மற்றும் சீரகத்தை சேர்த்து அதை சுமார் அரை நிமிடம் வரை வறுக்கவும்.

- அரை நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் பாசுமதி அரிசியை சேர்த்து அதை நன்கு பக்குவமாக அரிசி உடைந்து விடாமல் கிளறி விடவும்.

- பின்பு அதில் நாம் வதக்கி எடுத்து வைத்திருக்கும் காய்கறிகள் மற்றும் வறுத்து எடுத்து வைத்திருக்கும் பன்னீரை சேர்த்து அதை நன்கு பக்குவமாக கிளறி விடவும்.

- அடுத்து அதில் எலுமிச்சை சாறு மற்றும் குங்குமப்பூ பாலை சேர்த்து அதை நன்கு பக்குவமாக கிளறி விடவும்.

- பின்னர் அதில் நாம் வறுத்த முந்திரி, பாதாம் பருப்பு மற்றும் திராட்சையை சேர்த்து நன்கு கிளறி விடவும்.

- இப்பொழுது வறுத்து வைத்திருக்கும் வெங்காயத்தை இதன் மேலே தூவி ஒரு மூடி போட்டு சுமார் ஐந்து நிமிடம் வரை அதை வேக விடவும்.

- ஐந்து நிமிடத்திற்க்குப் பிறகு மூடியை திறந்தால் கமகமக்கும் நவரத்தின புலாவ் ரெடி!

[ of 5 - Users]
Story first published: Tuesday, June 24, 2025, 18:44 [IST]
Desktop Bottom Promotion