கல்யாண வீட்டு பூரி மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..

Posted By:

Kalyana Veetu Poori Masala Recipe In Tamil: புரட்டாசி மாதம் என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை டிபனாக பலரது வீடுகளில் பூரி தான் இருக்கும். அப்படி பூரி செய்யும் போது, அதற்கு சைடு டிஷ்ஷாக உருளைக்கிழங்கு மசாலாவை தான் பெரும்பாலானோர் செய்வார்கள். ஏனெனில் பூரி உருளைக்கிழங்கு மசாலா தான் சூப்பரான காம்போ. அப்படி உங்கள் வீட்டில் உள்ளோருக்கும் உருளைக்கிழங்கு மசாலாத தான் பிடிக்குமானால், எப்போதும் செய்வது போன்று செய்யாமல், ஒருமுறை கல்யாண வீட்டு பூரி மசாலாவை செய்யுங்கள். இப்படி செய்யும் போது வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவார்கள்.

Marriage Style Poori Masala How To Make Kalyana Veetu Poori Masala

உங்களுக்கு இந்த கல்யாண வீட்டு பூரி மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கல்யாண வீட்டு பூரி மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 10
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 3 (கீறியது)
* இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)
* பெரிய வெங்காயம் - 2 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1/2 லிட்டர்
* வேக வைத்த உருளைக்கிழங்கு - 4 (வேக வைத்து மசித்தது)
* கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன் (1/4 கப் நீரில் கரைத்துக் கொள்ளவும்)
* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
* கேரட் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* பச்சை பட்டாணி - 1/4 கப்
* கொத்தமல்லி - சிறிது
* பால் - 1/4 கப்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் முந்திரியை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் துருவிய இஞ்சியை சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் வெங்காயம், மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 1/2 லிட்டர் நீரை ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும், அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய கேரட், பச்சை பட்டாணியை சேர்த்து, அதன் பின் கரைத்து வைத்துள்ள கடலை மாவை சேர்த்து கிளறி, 5-10 நிமிடம் நன்கு காய்கறிகள் வேகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான கல்யாண வீட்டு பூரி மசாலா தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, October 11, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion