குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்..

Posted By:

Kuzhambu Milagai Podi Recipe In Tamil: நீங்க எப்படி சமைச்சாலும் ருசியா இருக்கமாட்டீங்குதா? அப்படியானால் நீங்கள் பயன்படுத்தும் குழம்பு மிளகாய் பொடி அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். உங்களுக்கு கடைகளில் விற்கப்படும் குழம்பு மிளகாய் பொடியை வாங்கி சமையலுக்கு பயன்படுத்த பிடிக்கவில்லையா? வீட்டிலேயே குழம்பு மிளகாய் பொடி அரைக்க விரும்புகிறீர்களா? ஆனால் உங்களுக்கு அது எப்படி என்று தெரியாதா? அப்படியானால் உங்களுக்காகவே இன்று குழம்பு மிளகாய் பொடியை எப்படி வீட்டிலேயே அரைப்பது என்பது குறித்து கொடுத்துள்ளோம்.

Kuzhambu Milagai Podi How To Make Kulambu Podi Recipe In Tamil

இந்த பக்குவத்தில் குழம்பு மிளகாய் பொடியை அரைத்தால், சைவம், அசைவம் என அனைத்திற்கும் பயன்படுத்தலாம். முக்கியமாக இந்த குழம்பு மிளகாய் பொடியை நன்கு சூடு ஆற குளிர வைத்து, டப்பாவில் போட்டு வைத்தால், 6 மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம்.

உங்களுக்கு வீட்டிலேயே குழம்பு மிளகாய் பொடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குழம்பு மிளகாய் பொடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சீரகம் - 1 கப் அல்லது 100 கிராம்
* மிளகு - 1/3 கப் அல்லது 50 கிராம்
* கடலைப் பருப்பு - 1/4 கப் அல்லது 50 கிராம்
* உளுத்தம் பருப்பு - 1/4 கப் அல்லது 50 கிராம்
* துவரம் பருப்பு - 1/4 கப் அல்லது 50 கிராம்
* இட்லி அரிசி - 1/4 கப் அல்லது 50 கிராம்
* வெந்தயம் - 2 டேபிள் ஸ்பூன் அல்லது 25 கிராம்
* கடுகு - 2 டேபிள் ஸ்பூன் அல்லது 25 கிராம்
* கறிவேப்பிலை - 1 கைப்பிடி
* விரலி மஞ்சள் - 7 அல்லது 25 கிராம்
* மல்லி - 1/2 கிலோ
* நீட்டு வரமிளகாய் - 1/2 கிலோ
* கல் உப்பு - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், சீரகத்தை சேர்த்து நன்கு பொரிய விட்டு இறக்கி ஒரு அகலமான தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் மிளகு சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து, அதையும் அந்த தட்டில் போட வேண்டும்.
* பிறகு அதே வாணலியில் கடலைப் பருப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக வறுத்து இறக்கி, அதையும் அந்த தட்டில் போட வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் உளுத்தம் பருப்பை சேர்த்து, பொன்னிறமாக வறுத்து, அதையும் அந்த தட்டில் போட வேண்டும்.
* அதன் பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி, அதையும் அந்த தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின் அதில் இட்லி அரிசியை சேர்த்து பொரிய விட்டு இறக்கி, அதையும் அந்த தட்டில் போட வேண்டும்.
* பிறகு அதில் கடுகு சேர்த்து குறைவான தீயில் வைத்து நன்கு பொரிய விட்டு இறக்கி, அதையும் அந்த தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதில் 1 கைப்பிடி கறிவேப்பிலையை சேர்த்து, குறைவான தீயில் வைத்து, மொறுமொறுவென்று வறுத்து இறக்கி தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் விரலி மஞ்சளை சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே வாணலியில் மல்லியை சேர்த்து நன்கு ஈரப்பதம் போக வறுத்து, தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மீண்டும் அடுப்பில் வாணலியை வைத்து, அதில் நீட்டு வரமிளகாயை சேர்த்து, அத்துடன் சிறிது உப்பு சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* வறுத்த பொருட்கள் அனைத்தும் குளிர்ந்ததும், அவை அனைத்தையும் ஒன்றாக கலந்து, மிக்சர் ஜாரில் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து, ஒரு அகலமான தட்டில் போட்டு நன்கு குளிர வைத்து, பின் காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்தால், மணமணக்கும் குழம்பு மிளகாய் தூள் தயார்.

குறிப்பு: மிக்சர் ஜாரில் குழம்பு மிளகாய் பொடி அரைப்பதாக இருந்தால், அரைப்பதற்கு முன் ஒரு கைப்பிடி கல் உப்பை ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து விட்டு, பின் அந்த ஜாரில் வறுத்த பொருட்களை அரைக்கும் போது, பொடி நன்கு மென்மையாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Thursday, September 17, 2026, 16:07 [IST]
Desktop Bottom Promotion