இதுவரை கொத்தமல்லி வெச்சு சட்னி செஞ்சுருப்பீங்க.. அடுத்தமுறை குழம்பு செய்யுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்...

Posted By:

Kothamalli Kuzhambu Recipe In Tamil: மதிய வேளையில் எப்போதும் ஒரே மாதிரி காய்கறிகளைப் போட்டு சாம்பார், குழம்பு செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான, அதே சமயம் சத்தான ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கொத்தமல்லி நிறையா இருக்கா? இதுவரை நீங்கள் கொத்தமல்லியை வெச்சு சட்னி தான் செய்திருப்பீர்கள்.

ஆனால் அடுத்தமுறை அந்த கொத்தமல்லியை வைத்து குழம்பு செய்யுங்கள். இந்த கொத்தமல்லி குழம்பு சாதத்துடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது ஒரு சத்தான குழம்பு. குழந்தைகள், பெரியோர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

Kothamalli Kuzhambu Recipe

உங்களுக்கு கொத்தமல்லி குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொத்தமல்லி குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சின்ன வெங்காயம் - 5-6 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* பூண்டு - 2-3 பல்
* கொத்தமல்லி - 1 1/2 கப்
* புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 2-3 டேபிள் ஸ்பூன்

வதக்கி அரைப்பதற்கு...

* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4-5
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - சிறிது
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு, சீரகம், வரமிளகாய், மல்லி, துவரம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின் புளியை நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் கொத்தமல்லியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு புளிச்சாற்றுடன், அரைத்து வைத்துள்ள பொடி, மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்ததாக, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் புளிச்சாற்றினை ஊற்றி மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி பேஸ்ட்டை சேர்த்து கிளறி, 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து எண்ணெய் பிரியும் வரை 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான கொத்தமல்லி குழம்பு தயார்.

Image Courtesy:

[ of 5 - Users]
Story first published: Saturday, December 16, 2023, 14:37 [IST]
Desktop Bottom Promotion