திருச்செந்தூர் திருப்பாகம் - சூரசம்ஹாரம் அன்று மறக்காமல் முருகனுக்கு செஞ்சு படைங்க..

Posted By:

Kandha Shasti Special Thiruchendur Thirupagam Recipe In Tamil: கந்த சஷ்டி விழாவின் மிகவும் முக்கியமான நிகழ்வு தான் சூரசம்ஹாரம். சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்வான சூரசம்ஹாரம், அனைத்து முருகன் கோவிலிலும் நடைபெற்றாலும், திருச்செந்தூரில் மிகவும் கோலாகலமாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். அப்படி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின்போது முருகப்பெருமானுக்குப் படைக்கப்படும் ஒரு பாரம்பரிய பிரசாதம் தான் திருப்பாகம்.

Kandha Shasti Special Recipe How To Make Thiruchendur Thirupagam

இந்த திருப்பாகம் முருகனுக்கு மிகவும் விருப்பமான ஒன்றாகும். இது பாதாம் அல்வா மற்றும் மைசூர் பாக் ஆகிய இரண்டையும் ஒன்று சேர்த்து சாப்பிட்டால் எப்படி இருக்குமோ, அந்த சுவையில் இருக்கும். இந்த ஆண்டின் சூரசம்ஹார நிகழ்வின் போது முருகனுக்கு மறக்காமல் இந்த திருச்செந்தூர் திருப்பாகம் செய்து படைத்து வழிபாடு செய்து, முருகனின் பரிபூர்ண அருளைப் பெறுங்கள்.

உங்களுக்கு இந்த திருச்செந்தூர் திருப்பாகம் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே திருச்செந்தூர் திருப்பாகம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* நெய் - 50 மிலி
* கடலை மாவு - 150 கிராம்
* காய்ச்சிய வெதுவெதுப்பான பால் - 1 1/2 கப்
* குங்குமப்பூ - சிறிது (சூடான பாலில் ஊற வைக்கவும்)
* சர்க்கரை - 150 கிராம்
* முந்திரி - 100 கிராம் (பொடித்தது)
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் சிறிது குங்குமப்பூவை எடுத்து, சூடான பாலில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் 100 கிராம் முந்திரியை ஜாரில் போட்டு நன்கு பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 50 மிலி நெய்யை ஊற்றி சூடானதும், கடலை மாவை சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* கடலை மாவு நெய்யில் நன்கு கரைந்ததும், அதில் காய்ச்சிய வெதுவெதுப்பான பாலை ஊற்றி கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் ஊற வைத்துள்ள குங்குமப்பூவை பாலுடன் அப்படியே சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் சர்க்கரையை சேர்த்து கிளறி விட வேண்டும். சர்க்கரை கரைந்த பின், அதில் பொடித்து வைத்துள்ள முந்திரியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் ஏலக்காய் தூளை சேர்த்து கிளறி, மிதமான தீயில் வைத்து நன்கு அல்வா போன்று திரண்டு வரும் வரை கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* கலவையானது நன்கு திரண்டு வந்ததும், அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி கிளறி இறக்கினால், சுவையான திருச்செந்தூர் திருப்பாகம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, November 14, 2026, 18:30 [IST]
Desktop Bottom Promotion