1 கப் ஜவ்வரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி வடை செஞ்சு சாப்பிடுங்க..

Posted By:

Javvarisi Vadai Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? அதுவும் சற்று புதுமையான ஸ்நாக்ஸ் செய்து தர கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் ஜவ்வரிசி உள்ளதா? அப்படியானால் அந்த ஜவ்வரிசியைக் கொண்டு வடை செய்து கொடுங்கள். இப்படி ஜவ்வரிசியைக் கொண்டு வடை செய்யும் போது, அந்த வடை ருசியாகவும், மொறுமொறுவென்றும் இருக்கும். முக்கியமாக இந்த வடை செய்வது மிகவும் சுலபம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறும் இருக்கும்.

Javvarisi Vadai How To Make Sabudana Vada Recipe

உங்களுக்கு ஜவ்வரிசி வடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஜவ்வரிசி வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு...

* மாவு ஜவ்வரிசி - 1 கப்
* தண்ணீர் - 1 கப்

வடைக்கு..

* வேக வைத்த உருளைக்கிழங்கு - 2 (துருவியது)
* வறுத்த வேர்க்கடலை - 3 டேபிள் ஸ்பூன் (அரைத்தது)
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* சோம்பு தூள் - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் மாவு ஜவ்வரிசியை எடுத்து, நீரில் ஒருமுறை கழுவி, பின் அதில் 1 கப் நீரை ஊற்றி, மூடி வைத்து 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* ஜவ்வரிசி நன்கு ஊறிய பின், அதில் வேக வைத்த 2 உருளைக்கிழங்கை துருவி சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் வறுத்த வேர்க்கடலையை ஒன்றிரண்டாக அரைத்து சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், சோம்பு தூள் சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* பின் கைகளில் நீரை தொட்டு, பிசைந்த வடை கலவையை சிறிது எடுத்து உருட்டி தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள வடையை சேர்த்து, மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். அதேப் போல் அனைத்து கலவையையும் வடைகளாக தட்டிப் போட்டு பொரித்து எடுத்தால், சுவையான மற்றும் மொறுமொறுப்பான ஜவ்வரிசி வடை தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, October 11, 2026, 19:21 [IST]
Desktop Bottom Promotion