ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும்

Posted By:

Iyengar Style Puli Kulambu Recipe in Tamil: ஒவ்வொரு நாளும் என்ன சமைப்பது என்பதுதான் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை. தினமும் ஒரே மாதிரியான குழம்பு செய்து போரடித்துவிட்டதா? அவ்வப்போது சற்று வித்தியாசமான ரெசிபிக்களை வீட்டில் செய்து சுவைக்க விரும்புவீர்களா? அப்படியென்றால் ஐயங்கார் ஸ்டைலில் ஒருமுறை வெண்டைக்காய் புளிக் குழம்பை முயற்சி செய்து பாருங்கள்.

Iyengar Style Puli Kulambu Recipe How to Make at Home in Tamil

பொதுவாக ஐயங்கார் ஸ்டைல் குழம்பு ரெசிபி என்றாலே அதற்கு தனித்துவமான ருசியும், மணமும் இருக்கும் என்று கூறுவார்கள். இந்த வெண்டைக்காய் புளிக்குழம்பும் அதற்கு விதிவிலக்கல்ல. சாம்பார், ரசம் என்று சாப்பிட்டு போரடித்தவர்களுக்கு இந்த குழம்பு புதுவிதமான சுவையைக் கொடுக்கும். இந்த ஸ்டைல் வெண்டைக்காய் புளிக்குழம்பு செய்வதற்கு எளிதானது, இதன் சுவையும் மிகவும் தனித்துவமானதாக இருக்கும்.

உங்களுக்கு ஐயங்கார் ஸ்டைல் வெண்டைக்காய் புளிக்குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழெ ஐயங்கார் ஸ்டைல் வெண்டைக்காய் புளிக்குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- வெண்டைக்காய் - கால் கிலோ
- துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்
- தக்காளி - 1
- சின்ன வெங்காயம் - 10
- புளிக்கரைசல் - 2 ஸ்பூன்
- அரிசி - 2 ஸ்பூன்
- வெந்தயம் - 1 ஸ்பூன்
- பெருங்காயத்தூள் - 2 ஸ்பூன்
- சாம்பார் பொடி - 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
- வெல்லம் - 1 ஸ்பூன்
- நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்
- கறிவேப்பிலை - 2 கொத்து
- கொத்தமல்லி இலை - அலங்கரிக்க

செய்முறை:

- வெண்டைக்காயை நன்றாகக் கழுவி ஒரு துணியால் துடைக்கவும். சிறிது நேரம் உலர விடவும். பின்னர் வெண்டைக்காயை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

- ஒரு கோப்பையில் அரிசியை சிறிது நேரம் ஊறவைத்து, அதனுடன் தேங்காயைச் சேர்த்து அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.

- ஒரு கப்பில் புளியை ஊறவைக்கவும், அதோடு வெல்லத்தையும் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

- ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் வெந்தயம் மற்றும் பெருங்காயம் சேர்க்கவும். அவை பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

- பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, அவை மென்மையாகும் வரை வதக்கவும்.

- இப்போது வெண்டைக்காயைச் சேர்த்து, சில நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.

- பின்னர் சாம்பார் பொடி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, மிதமான தீயில் சுமார் 10 நிமிடங்கள் எண்ணெயிலேயே நன்றாக வதக்கவும்.

- வெண்டைக்காய் முக்கால் பதம் வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து சுமார் 5 நிமிடங்கள் நன்றாக வேகவைக்கவும்.

- இப்போது புளிக் கரைசலைச் சேர்த்து, அதிகத் தீயில் சிறிது நேரம் கொதிக்கவிடவும், இடையிடையே கிளறிவிடவும். குழம்பின் மேல் எண்ணெய் மிதந்து வரும்போது, ​​வெல்லத்தைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

- பிறகு தீயைக் குறைத்து வைத்து 2 நிமிடங்கள் கொதிக்கவிடவும். இறுதியாக, கொத்தமல்லி இலைகளைத் தூவி அலங்கரிக்கவும்.

- அவ்வளவுதான் ஐயங்கார் ஸ்டைல் வெண்டைக்காய் புளிக்குழம்பு ரெடி!

[ of 5 - Users]
Story first published: Monday, June 22, 2026, 14:40 [IST]
Desktop Bottom Promotion