1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..

Posted By:

Pachai Payaru Puttu Recipe In Tamil: மாலை வேளையில் பசியுடன் இருக்கும் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல சத்தான, அதே சமயம் சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் பிள்ளைகளுக்கு புட்டு பிடிக்குமா? அப்படியானால் வழக்கமாக செய்யும் அரிசி புட்டு செய்து கொடுக்காமல், புரோட்டீன் அதிகம் நிறைந்த பச்சை பயறு கொண்டு புட்டு செய்து கொடுங்கள். இப்படி பச்சை பயறு கொண்டு செய்யக்கூடிய புட்டு சுவையாக இருப்பதோடு, வளரும் பிள்ளைகளுக்கு மிகவும் நல்லதும் கூட. இந்த புட்டு ஒருமுறை செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்க சொல்வார்கள்.

Green Gram Puttu How To Make Pachai Payaru Puttu Recipe

உங்களுக்கு இந்த பச்சை பயறு புட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பயறு புட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பச்சை பயறு - 1 கப்
* ஏலக்காய் - 3
* வெதுவெதுப்பான நீர் - சிறிது
* துருவிய தேங்காய் - தேவையான அளவு
* நாட்டு சர்க்கரை - சுவைக்கேற்ப
* நெய் - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பச்சை பயறை சேர்த்து, அத்துடன் ஏலக்காயை சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு வறுத்ததை மிக்சர் ஜாரில் சேர்த்து ஓரளவு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்ததை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, வெதுவெதுப்பான நீரை சிறிது சேர்த்து பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் அதை மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் மூடியைத் திறந்தால் மாவு சற்று உலர்ந்து போயிருக்கும். அப்போது சிறிது நீரைத் தெளித்து புட்டு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். சரியான மாவு பதம் பார்க்க, மாவை கைகளால் அழுத்தி பிடிக்கும் போது, அப்படியே இறுக்கமாகவும், உடைத்து விடும் போது எளிதில் உடையக்கூடியவாறும் இருக்க வேண்டும்.
* பின்பு ஒரு குழிக்கரண்டியை எடுத்து, அதில் சிறிது துருவிய தேங்காயை எடுத்துக் கொண்டு, பின் அதன் மேல் புட்டு மாவை வைத்து அழுத்த வேண்டும்.
* பின் இட்லி தட்டில் ஈரமான துணியை விரித்து, அதில் குழிக்கரண்டியில் உள்ள புட்டை வைக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் குழிக்கரண்டியில் அழகாக செட் செய்து, இட்லி தட்டில் வைக்க வேண்டும்.
* பிறகு அந்த இட்லி தட்டை, இட்லி பாத்திரத்தினுள் வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.
* புட்டு ரெடியானதும், ஒவ்வொரு புட்டை பரிமாறும் போது, அதன் மேல் சுவைக்கேற்ப நாட்டுச்சர்க்கரை தூவி, சிறிது நெய் சேர்த்து பரிமாறினால், சுவையான மற்றும் சத்தான பாசி பயறு புட்டு தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, September 24, 2026, 17:06 [IST]
Desktop Bottom Promotion