பச்சை பயறு வேர்க்கடலை தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

Posted By:

Pachai Payaru Verkadalai Dosa With Thakkali Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு புரோட்டீன் நிறைந்த காலை டிபனை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் பச்சை பயறு வேர்க்கடலை தோசையை செய்து கொடுங்கள். இந்த தோசைக்கு இரவு தூங்கும் போது பொருட்களை ஊற வைத்து விட்டு, மறுநாள் காலையில் அதை நன்கு அரைத்து, அந்த மாவை புளிக்க வைக்காமல் அப்படியே தோசையாக சுட்டு சாப்பிடலாம். இந்த தோசைக்கு தக்காளி சட்னி அருமையான காம்பினேஷனாக இருக்கும். வளரும் பிள்ளைகளுக்கு காலையில் இந்த டிபனை செய்து கொடுப்பது நல்லது.

Green Gram Peanut Dosa With Tomato Chutney How To Make Pachai Payaru Verkadalai Dosa With Thakkali Chutney

உங்களுக்கு இந்த பச்சை பயறு வேர்க்கடலை தோசையும், தக்காளி சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பயறு வேர்க்கடலை தோசை மற்றும் தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

தோசைக்கு...

* பச்சை பயறு - 1 கப்
* பச்சை வேர்க்கடலை - 1 கப்
* பச்சரிசி - 1 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப

சட்னிக்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 1/2 ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1/2 ஸ்பூன்
* காஷ்மீரி வரமிளகாய் - 5
* பூண்டு - 4 பல்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 ஸ்பூன்
* கடுகு - 1/2 ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சை பயறு, பச்சை வேர்க்கடலை, பச்சரிசி ஆகியவற்றை எடுத்துக் கொண்டு நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் நீரை ஊற்றி, இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* மறுநாள் காலையில் நீரை வடிகட்டிவிட்டு, மிக்சர் ஜாரில் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை எடுத்துக் கொண்டு, ஜாரில் சிறிது நீரை ஊற்றி அலசி மாவுடன் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து சட்னி செய்வதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் காஷ்மீரி வரமிளகாய் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்கி வேக வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் துருவிய தேங்காய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் சட்னி தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், தக்காளி சட்னி தயார்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அரைத்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டி ஊற்றி தோசையாக ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி, மூடி வைத்து 2 நிமிடம் வேக வைத்து, பின் தோசையை திருப்பிப் போட்டு சில நொடிகள் வேக வைத்து எடுத்தால், பச்சை பயறு வேர்க்கடலை தோசை தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, October 14, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion