மதியம் சமையலை சிம்பிளா டக்குன்னு முடிக்கணுமா? அப்ப குக்கர்-ல ரசம் சாதத்தை இப்படி செய்யுங்க...

Posted By:

Cooker Rasam Rice Recipe In Tamil: கோடைக்காலம் என்பதால் சமையலறையில் நீண்ட நேரம் இருந்து சமைக்க பிடிக்காது. இந்நிலையில் சட்டென்று சமையலை முடிக்க அனைவரும் நினைப்போம். அதுவும் உங்கள் வீட்டில் உள்ளோர் சிம்பிளாக ஏதாவது செய்தால் போதும் என்று கூறினால், அப்போது ஒன்பாட் ரெசிபி ஏதாவது செய்யுங்கள்.

அதுவும் உங்கள் வீட்டில் உள்ளோர் ரசப் பிரியர்கள் என்றால், அவர்களுக்கு குக்கரில் ரசம் சாதம் செய்து கொடுங்கள். என்னது, குக்கரில் ரசம் சாதமா என்று கேட்கலாம். ஆம், குக்கரில் கூட ரசம் சாதம் செய்யலாம். இந்த சாதம் செய்வதற்கு 15 நிமிடம் போதுமானது. மேலும் இந்த ரசம் பேச்சுலர்களுக்கானதும் கூட. இந்த ரசம் சாதத்தை ஒருமுறை செய்தால், அடிக்கடி செய்து கொடுக்குமாறு வீட்டில் உள்ளோர் கேட்பார்கள். அந்த அளவில் இந்த ரசம் சாதம் ருசியாக இருக்கும்.

Cooker Rasam Rice How To Make a Onepot Rasam Rice Recipe

உங்களுக்கு குக்கரில் ரசம் சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரசம் சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* புழுங்கல் அரிசி - 3/4 கப்
* துவரம் பருப்பு - 1/4 கப்
* புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 3/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* தக்காளி - 2
* பூண்டு - 7 பல்
* பச்சை மிளகாய் - 2
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 6 கப்
* வெல்லம் - 1 சிறிய துண்டு
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 3/4 கப் அரிசி மற்றும் 1/4 கப் துவரம் பருப்பை எடுத்து நீரில் 2 முறை கழுவ வேண்டும்.
* பின் அதில் சுத்தமான நீரை ஊற்றி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதே சமயம் மற்றொரு பாத்திரத்தில் ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு புளியை எடுத்து, 2 கப் வெதுவெதுப்பான நீரை ஊற்றி ஊற வைக்க வேண்டும். பின் புளியை கரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், பெருங்காயத் தூள் மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு பற்களை தட்டிப் போட்டு, அத்துடன் கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், சாம்பார் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் புளி நீருடன் சேர்த்து 6 கப் நீரை ஊற்றி, ஒரு துண்டு வெல்லத்தை சேர்த்து, மிளகுத் தூளைத் தூவி கிளறி, கொதிக்க விட வேண்டும்.
* கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ஊற வைத்துள்ள அரிசி பருப்பை நீரை வடிகட்டிவிட்டு சேர்த்து கிளறி குக்கரை மூடி, மிதமான தீயில் வைத்து 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கரண்டியால் நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியாக அதில் நெய் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான குக்கர் ரசம் சாதம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, April 29, 2025, 14:39 [IST]
Desktop Bottom Promotion