கிறிஸ்துமஸ் ஸ்பெஷலா.. ஈவ்னிங் டைம்-ல சிக்கன் வெச்சு இந்த ஸ்நாக்ஸை செஞ்சு எல்லாரையும் அசத்துங்க...

Posted By:

Christmas Special Chicken Bread Pockets Recipe In Tamil: கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் இப்பண்டிகையை கொண்டாடும் விதமாக அசைவ உணவுகளை பலவிதமாக சமைத்து சாப்பிடுவார்கள். அதுவும் நீங்கள் மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒரு ஸ்பெஷலான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா?

அப்படியானால் சிக்கன் மற்றும் பிரட் கொண்டு அட்டகாசமான சுவையில் சிக்கன் பிரட் பாக்கெட்டை செய்யுங்கள். இந்த ஸ்நாக்ஸ் இதுவரை உங்கள் வீட்டில் உள்ளோர் யாரும் சுவைத்திராத வகையில் வித்தியாசமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

Christmas Special Recipe How To Make a Chicken Bread Pockets Recipe

உங்களுக்கு இந்த சிக்கன் பிரட் பாக்கெட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் பிரட் பாக்கெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பிரட்

உள்ளே வைப்பதற்கு...

* பெரிய தக்காளி - 2 (அரைத்துக் கொள்ளவும்)
* முந்திரி - 10 (நீரில் ஊற வைத்தது)
* வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன்
* எலும்பில்லாத சிக்கன் - 1/4 கிலோ (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைகேற்ப
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
* கசூரி மெத்தி - சிறிது

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் தக்காளியை அரைத்து தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே ஜாரில் முந்திரியை போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருகியதும, அதில் எலும்பில்லாத சிக்கனை நீரில் கழுவி சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் மிளகாய் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறி, சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் வெந்ததும், அதை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருகியதும், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கியதும், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி, அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, நீர் வற்றும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள முந்திரியை சேர்த்து நன்கு கிளறி 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் சிக்கனை சேர்த்து நன்கு கிளறி, கசூரி மெத்தியை கசக்கி தூவி கிளறி இறக்கினால், உள்ளே வைப்பதற்கான மசாலா தயார்.
* பின்பு 1 பிரட் துண்டை எடுத்து, சப்பாத்தி உருட்டும் கட்டையால் தட்டையாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வட்டமான கிண்ணத்தை எடுத்து, பிரட்டை வட்டமான வடிவில் துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் அதன் நடுவே சிக்கன் மசாலாவை வைத்து, பிரட்டின் முனைகளில் நீரைத் தடவி, மடித்து முனைகளை அழுத்தி விட வேண்டும். இதேப் போன்று அனைத்து பிரட்டையும் செய்ய வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், மடித்து வைத்துள்ள பிரட் பாக்கெட்டுகளைப் போட்டு, முன்னும், பின்னும் பொன்னிறமாக ப்ரை செய்து எடுத்தால், சுவையான சிக்கன் பிரட் பாக்கெட் தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, December 25, 2024, 17:15 [IST]
Desktop Bottom Promotion