நாவூறும்.. ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் டிக்கா மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..

Posted By:

Chicken Tikka Masala Recipe In Tamil: இன்று உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஸ்பெஷலாக ஏதாவது சிக்கன் ரெசிபியை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அதுவும் இரவு உங்கள் வீட்டில் சப்பாத்திக்கு அந்த சிக்கனைக் கொண்டு சூப்பர் சைடு டிஷ் செய்து கொடுத்து அசத்த வேண்டுமா? அப்படியானால் ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் டிக்கா மசாலா செய்யுங்கள்.

இந்த மசாலாவை செய்து கொடுத்தால், வீட்டில் உள்ளோரிடம் நல்ல பாராட்டைப் பெறலாம். முக்கியமாக இந்த டிக்கா மசாலா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். ஒருமுறை இந்த மசாலாவை செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்ய சொல்லி கேட்பார்கள்.

Chicken Recipes How To Make Chicken Tikka Masala Recipe

உங்களுக்கு சிக்கன் டிக்கா மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் டிக்கா மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு...

* எலும்பில்லாத சிக்கன் - 300 கிராம்
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (அரைத்தது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 150 மிலி
* சிக்கன் துண்டுகள்
* பிரஷ் க்ரீம் - 4 டேபிள் ஸ்பூன்
* கசூரி மெத்தி - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் எலும்பில்லாத சிக்கனை கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் தயிர், காஷ்மீரி மிளகாய் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், கரம் மசாலா, மிளகுத் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருகியதும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகள சேர்த்து நன்கு 10 நிமிடம் ப்ரை செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த தக்காளியை சேர்த்து எண்ணெய் பிரிய வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், கரம் மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, மிதமான தீயில் வைத்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 150 மிலி நீரை ஊற்றி கிளறி, நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சிக்கனை துண்டுகளை சேர்த்து கிளறி, பிரஷ் க்ரீம் சேர்த்து, உப்பு சுவை பார்த்து வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக கசூரி மெத்தியை சேர்த்து கிளறி இறக்கினால், சிக்கன் டிக்கா மசாலா தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, November 22, 2026, 14:56 [IST]
Desktop Bottom Promotion