1 கப் சுண்டல் இருந்தா இந்த ஈஸியான புலாவ் செஞ்சு பாருங்க... சுவை பிரியாணியை விட சூப்பரா இருக்கும்...!

Posted By:

Chana Pulao Recipe In Tamil: வழக்கமான பிரியாணி மற்றும் தக்காளி சாதம் சாப்பிட்டு போரடித்து விட்டதா? உங்கள் வீட்டில் 1 கப் கொண்டைக்கடலை இருக்கிறதா? ஆம் எனில் சூப்பரான புலாவ் செய்து சாப்பிடலாம். வழக்கமான புலாவ் போலவோ அல்லது தக்காளி சாதம் போலவோ இது நிச்சயம் இருக்காது. அதற்கு காரணம் இதில் சேர்க்கப்படும் பொருட்களும், இது சமைக்கப்படும் முறையும்தான்.

இந்த சென்னா புலாவ் செய்வதற்கு எளிதாக இருப்பதுடன் மிகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். பிரியாணி சுவையில் இருக்கும் இந்த புலாவில் கொண்டைக்கடலை சேர்க்கப்படுவதால் இது சுவையான உணவாக மட்டுமில்லாமல் ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு இதனை மதிய உணவாக செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Chana Pulao Recipe How to Make Chana Pulao

உங்களுக்கு இந்த ஆரோக்கியமான சென்னா புலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சென்னா புலாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- கொண்டைக்கடலை - 250 கிராம்
- மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- பிரியாணி இலை - 3
- கிராம்பு - 4
- பாஸ்மதி அரிசி - 300 கிராம்
- நெய் - 3 டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய் - 3
- பட்டை - 2
- சீரகம் - ஒரு டீஸ்பூன்
- சோம்பு - ஒரு டீஸ்பூன்
- பெரியவெங்காயம் - 2
- பச்சை மிளகாய் - 4
- இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
- தக்காளி - 4
- மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
- மல்லித்தூள் - ஒரு டீஸ்பூன்
- சென்னா மசாலா - 2 டீஸ்பூன்
- புதினா - ஒரு கைப்பிடி
- கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
- தண்ணீர் - 2 கப்

செய்முறை:

- முதலில் இரவே கொண்டைக்கடலையை தண்ணீர் ஊற்றி கழுவி எட்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

- பிறகு குக்கரை எடுத்து அதில் ஊற வைத்திருக்கும் கொண்டை கடலையை சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் உப்பு, ஒரு பிரியாணி இலை, கிராம்பு இவற்றை சேர்த்து கொண்டைக்கடலை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் இரண்டு விசில் வரும் வரை வேகவைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்

- பின்னர் பாஸ்மதி அரிசியை எடுத்து சுத்தம் செய்து அதில் தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

- அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து இரண்டும் நன்றாக காய்ந்ததும் அதில் பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை, சீரகம், சோம்பு இவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.

- இவை அனைத்தும் நன்றாக சிவந்த பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.

- பின்னர் நீளவாக்கில் கீரிய பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

- வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு இதில் இஞ்சி பூண்டு விழுது மற்றும் பொடியாக நறுக்கிய தக்காளி இரண்டையும் சேர்த்து நன்றாக தக்காளி மசிய வேகம் வரை வதக்க வேண்டும்.

- பின்னர் தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மல்லி தூள், சென்னா மசாலா இவை அனைத்தையும் சேர்த்து மசாலாவின் பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும்.

- பின்னர் புதினா, கொத்தமல்லி இலையை அதில் போட்டு வேக வைத்திருக்கும் கொண்டைக்கடலையை தண்ணீருடன் ஊற்றி நன்றாக கலந்து விட வேண்டும்.

- எல்லாம் நன்றாக சேர்ந்து கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது ஊற வைத்திருக்கும் அரிசி, தண்ணீர் இவற்றை ஊற்றி ஒருமுறை நன்றாக கலந்து விட்டு மூடி போட்டு மிதமான தீயில் 15 நிமிடம் வேக விட வேண்டும்.

- 15 நிமிடம் கழித்து மூடியை திறந்து பார்த்தால் கமகமக்கும் சென்னா புலாவ் ரெடி.

[ of 5 - Users]
Story first published: Friday, November 7, 2025, 16:54 [IST]
Desktop Bottom Promotion