பக்ரீத் ஸ்பெஷல் காயல்பட்டினம் களரி கறி - சிம்பிளா எப்படி செய்யணும் தெரியுமா?

Posted By:

Bakrid Special Kayalpatinam Kalari Kari Recipe: பக்ரீத் பண்டிகை வரப்போகிறது. அனைவரும் தங்களின் இஸ்லாமிய நண்பர்களின் வீட்டிற்கு சென்று வயிறு நிறைய சாப்பிட நினைப்போம். பக்ரீத் பண்டிகை நாளில் மட்டன் தான் ஹீரோ. இஸ்லாமியர்கள் இந்நாளில் ஆட்டை பலி கொடுத்து, நண்பர்கள் மற்றும் இல்லாதவர்களுடன் அந்த ஆட்டு கறியை பகிர்ந்து கொள்வார்கள்.

இப்படிப்பட்ட நாளில் மட்டன் கொண்டு எப்போதும் வெறும் மட்டன் பிரியாணியை மட்டும் செய்யாமல், ஒருமுறை காயல்பட்டினம் களறி கறியை சைடு டிஷ்ஷாக செய்யுங்கள். இந்த காயல்பட்டினம் களறி கறி வித்தியாசமான செய்முறையை கொண்டிருப்பதோடு, தனித்துவமான சுவையையும் கொண்டிருக்கும்.

Bakrid Special Kayalpatinam Kalari Kari Recipe

உங்களுக்கு இந்த பக்ரீத் நாளில் காயல்பட்டினம் களறி கறியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. கீழே காயல்பட்டினம் களறி கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்..

தேவையான பொருட்கள்:

மசாலா பொடிகள்..

* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 3/4 டேபிள் ஸ்பூன்
* சீரகத் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* சோம்புத் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* நெய் - 100 மிலி
* தேங்காய் எண்ணெய் - 100 மிலி
* ஏலக்காய் - 8
* கிராம்பு - 8
* பட்டை - 2 துண்டு
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* மட்டன் - 1 கிலோ

பிற பொருட்கள்...

* பெரிய வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 2 கொத்து
* பச்சை மிளகாய் - 1
* தயிர் - 1/2 கப்
* முந்திரி - 10
* பாதாம் - 10

செய்முறை:

* முதலில் பாதாம் மற்றும் முந்திரியை சுடுநீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மட்டனை நீரில் நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 100 மிலி நெய் மற்றும் 100 மிலி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும், நறுக்கிய 1 வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், சோம்புத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதன் மேலே நறுக்கிய வெங்காயத் தூள், கறிவேப்பிலையை சேர்த்து, 1 பச்சை மிளகாயை வைத்து, 1/2 கப் தயிரை ஊற்றி, கிளறி விடாமல் மூடி வைத்து, 5 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, மட்டனை கிளறி, 1 கப் நீரை ஊற்றி, குறைவான தீயில் வைத்து, குறைந்தது 1/2 மணிநேரம் மட்டனை வேக வைக்க வேண்டும். முக்கியமாக அப்படி வேகும் போது அவ்வப்போது மூடியைத் திறந்து கிளறி விட வேண்டும்.
* மட்டன் நன்கு வெந்ததும், ஊற வைத்துள்ள பாதாம், முந்திரியை அரைத்து பேஸ்ட் செய்து, 2 டீஸ்பூன் மட்டும் மட்டனுடன் சேர்த்து கிளறி, 5 நிமிடம் மீண்டும் குறைவான தீயில் வேக வைத்து இறக்கினால், சுவையான காயல்பட்டினம் களரி கறி தயார்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion