அம்ரித்சரி பன்னீர் புர்ஜி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. சப்பாத்திக்கு அள்ளும்..

Posted By:

Amritsari Paneer Bhurji Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி பன்னீர் செய்வீர்களா? அதுவும் எப்போதும் பன்னீரை ஒரே மாதிரியான சுவையில் தான் செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் பன்னீரை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் வடஇந்தியாவில் பிரபலமான அம்ரித்சரி பன்னீர் புர்ஜியை செய்து சாப்பிடுங்கள். இந்த பன்னீர் புர்ஜி சப்பாத்தி, நாண் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த பன்னீர் ரெசிபி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். ஒருமுறை இந்த சைடு டிஷ்ஷை செய்து கொடுத்தால், அடிக்கடி செய்ய சொல்லி கேட்பார்கள்.

Amritsari Paneer Bhurji How To Make Paneer Bhurji For Chapati

உங்களுக்கு அம்ரித்சரி பன்னீர் புர்ஜியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அம்ரித்சரி பன்னீர் புர்ஜி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

தயிர் மசாலா கலவைக்கு...

* பிரஷ்ஷான தயிர் - 1 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெண்ணெய் - 4 துண்டுகள்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* தயிர் கலவை
* தண்ணீர் - 1/2 கப்
* துருவிய பன்னீர் - 200 கிராம்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு கிண்ணத்தில் பிரஷ்ஷான தயிரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மிளகுத் தூள், சீரகத் தூள், மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்த்து சூடானதும், அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் தயிர் கலவையை சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து கிளறி, அதில் 1/2 கப் நீரை ஊற்றி நன்கு கலந்து விட வேண்டும்.
* பின்பு அதில் துருவிய பன்னீரை சேர்த்து கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான அம்ரித்சரி பன்னீர் புர்ஜி தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, September 11, 2026, 21:09 [IST]
Desktop Bottom Promotion