விநாயகர் சதுர்த்திக்கு இப்படி பால் கொழுக்கட்டை செய்யுங்க.. க்ரீமியாவும், ருசியாவும் இருக்கும்..

Posted By:

Ganesh Chaturthi Special Paal Kozhukattai Recipe In Tamil: விநாயகர் சதுர்த்திக்கு உங்கள் வீட்டில் பலவிதமான கொழுக்கட்டைகளை செய்து விநாயகருக்கு படைத்து வழிபடும் வழக்கம் உள்ளதா? அதுவும் எப்போதும் போன்று பூர்ண கொழுக்கட்டை, பிடிக்கொழுக்கட்டை மட்டும் செய்யாமல், அத்துடன் பால் கொழுக்கட்டையையும் செய்யுங்கள். முக்கியமாக அரிசி மாவு பயன்படுத்தாமல் சத்தான சிவப்பு அவலைக் கொண்டு பால் கொழுக்கட்டை செய்யுங்கள். இந்த கொழுக்கட்டை பஞ்சு போன்று மென்மையாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும்.

Ganesh Chaturthi Special Recipe How To Make Sivappu Aval Paal Kozhukattai

உங்களுக்கு இந்த சிவப்பு அவல் பால் கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிவப்ப அவல் பால் கொழுக்கட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சிவப்பு அவல் - 2 கப்
* பாதாம் - 20-25
* ராகி மாவு/அரிசி மாவு - 1/2 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* குங்குமப்பூ - சிறிது
* காய்ச்சிய பால் - 1/2 லிட்டர்
* துருவிய தேங்காய் - 2 கப்
* ஏலக்காய் - 2
* வெதுவெதுப்பான நீர் - 1 1/2 கப்
* பொடித்த வெல்லம் - 1 1/2 கப்
* தண்ணீர் - 1/2 கப்

செய்முறை:

* முதலில் சிவப்பு அவலை நீரில் 3-4 முறை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதில் நீரை ஊற்றி, மூடி வைத்து 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதேப் போல் 10-15 பாதாமை வெதுவெதுப்பான நீரில் 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து, ஊற வைத்துள்ள சிவப்பு அவவை மிக்சர் ஜாரில் சேர்த்து, சிறிது நீரை தெளித்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும். மாவு பிசுபிசுவென்று இருந்தால், அதில் 1/2 கப் ராகி மாவு/அரிசி மாவு சேர்த்து மென்மையாக பிசைந்து மூடி வைத்து, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதற்குள் சிறிய ஜாரில் ஊற வைத்த பாதாமில் உள்ள தோலை நீக்கிவிட்டு சேர்த்து, அத்துடன் சிறிது குங்குமப்பூ, வெதுவெதுப்பான பாலை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து பிசைந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு தேங்காய் பாலை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு மிக்சர் ஜாரில் 2 கப் துருவிய தேங்காயை எடுத்துக் கொண்டு, அத்துடன் 2 ஏலக்காய் மற்றும் 1/2 கப் வெதுவெதுப்பான நீரை ஊற்றி நன்கு அரைத்து, அதை வடிகட்டி, முதல் பாலை எடுத்துக் கொண்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மீண்டும் அந்த தேங்காயை ஜாரில் சேர்த்து, 1 கப் நீரை வெதுவெதுப்பான ஊற்றி நன்கு அரைத்து, அதை வடிகட்டி இரண்டாம் தேங்காய் பாலை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் 1 கப் இரண்டாம் தேங்காய் பாலை எடுத்துக் கொண்டு, அத்துடன் அரைத்த பாதாமை சேர்த்து, பின் பாதாம் அரைத்த ஜாரில் 1/2 கப் காய்ச்சிய பாலை ஊற்றி அலசி ஊற்ற வேண்டும்.
* அடுத்து அதில் 2 கப் பாலை ஊற்றி தொடர்ந்து 2-3 நிமிடம் கிளறி விட்டு, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பால் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்கு வேக வைக்க வேண்டும்.
* அதற்குள் மற்றொரு அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் 1 1/2 கப் பொடித்த வெல்லத்தை சேர்த்து, அத்துடன் 1/2 கப் நீரை ஊற்றி கரைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* கொழுக்கட்டை நன்கு வெந்து உருண்டைகள் மிதக்க தொடங்கினால், அடுப்பை அணைத்துவிட்டு, பின் அதில் வெல்ல நீரை வடிகட்டி சேர்த்து, அத்துடன் முதல் தேங்காய் பாலை ஊற்றி கலந்து விட்டு, நன்கு குளிர வைத்த பின் பரிமாறினால், நல்ல க்ரீமியான அவல் பால் கொழுக்கட்டை தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, September 11, 2026, 14:05 [IST]
Desktop Bottom Promotion