திருப்பரங்குன்றம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் போட்ட உத்தரவு!

By Vignesh Selvaraj

மதுரை: திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேற்றைய உத்தரவு தொடர்பாக இன்று காலை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரணை நடத்தினார். உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது என அரசுத் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை வரும் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள உச்சி பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவது வழக்கம். இந்நிலையில், இம்முறை மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரி ரவிக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார்.


thirupparankundram high court

ஆனால், திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலில் நேற்று கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செல்ல உள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதியும் தீபத்தூணில் தீபம் ஏற்ற காவல்துறை அனுமதி மறுத்தது.

இதுதொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், சிஐஎஸ்எப் வீரர்கள் உதவியுடன் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால், திருப்பரங்குன்றம் கோயில் பகுதியில் நேற்று 144 தடை விதிக்கப்பட்டிருந்ததால் மனுதாரர் மலையேறுவதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது.

இதனிடையே நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. ஆனால், அந்த மனுவை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது. மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி விசாரிப்பார் என்றும் 2 நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து நேற்று மாலை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், "திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவை காரணம் காட்டியே மனுதாரரை தீபம் ஏற்ற போலீசார் அனுமதிக்காமல் இருந்துள்ளனர். எனவே, 144 உத்தரவை ரத்து செய்கிறேன்" என உத்தரவிட்டார்.

மேலும், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று உடனே தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி, நாளை (அதாவது இன்று) காலை உத்தரவை நிறைவேற்றிய நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், தீபம் ஏற்றும் போது மதுரை காவல் ஆணையர் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து நேற்று மாலை திருப்பரங்குன்றம் மலை மீது செல்ல பாஜகவினர் முயன்றனர். ஆனால், நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செல்ல உள்ளதாக தெரிவித்து அனுமதி மறுத்தது. அப்போது நடந்த போராட்டத்தில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற அரசு எந்த தடையும் விதிக்கவில்லை. 2014 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் எங்கு தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பதை நீதிமன்றம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. தற்போது தீபம் ஏற்றக் கோரும் இடம் தர்காவுக்கு 15 மீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் ஏற்படும் தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்கவே அனுமதிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேற்றைய உத்தரவு தொடர்பாக இன்று காலை 10.30 மணிக்கு தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரணைக்கு எடுத்தார். தான் அளித்த தீர்ப்பை அரசும், காவல்துறையும் நிறைவேற்றாதது குறித்து அவர் விசாரணை நடத்தினார்.

மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் நேரில் ஆஜராகவில்லை. நேற்றைய உத்தரவு நிறைவேற்றவில்லை என மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது என அரசுத் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு விவகாரத்தில் 3 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் அதை நிறைவேற்றவில்லை. CISF படையினர் திருப்பரங்குன்றம் சென்று, அங்குள்ள நிலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தனி நீதிபதி உத்தரவிட்டார். ஏன் உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை வரும் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Credit: Oneindia

Desktop Bottom Promotion